
1969 இல் இவ்வாலயத்திற்கான வரலாற்றுச்சுவடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அருட்தந்தை வஸ்தியாம்பிள்ளை அடிகளார் பரந்தன் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் அப்பங்கின் துணை ஆலயமாக இவ்வாலயம் அமைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் குடியிருந்த கத்தோலிக்க மக்களின் நலன்கருதி திரு வஸ்தியாம்பிள்ளை என்பவர் வழங்கிய காணியில் இவ்வாலயம் அமைக்கப்பட்டது. இதனோடு ஒரு பாடசாலையும் அமைக்கப்பட்டு தரம் 01 – 05 வரையான மாணவர்களுக்கு கல்விபுகட்டப்பட்டது. உருத்திராதேவி, வட்டக்கச்சியைச் சேர்ந்த சந்திரா ஆகியோர்கல்வி கற்பித்தனர்.
ஆரம்பத்தில் கொட்டில் ஆலயமாக உருப்பெற்று 1981 இல் அத்திவாரமிடப்பட்டு பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டது. 1984 இல் அருட்தந்தை ஒம்லோ அடிகளார் பங்குத்தந்தையாக இருந்தபோது ஆலயத்தின் கூரை பதிவாக இருந்ததால் கட்டிடத்தை உயர்த்தி புதிய கூரை போடப்பட்டது. இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வந்த காலத்தில் திரு சவரிமுத்து விக்னேஸ்வரன் அவர்கள் தமது பிள்ளைகள் பிடிபடக்கூடாது என புனித செபஸ்தியாருக்கு நேர்த்தி வைத்தார். அவரது வேண்டுதல் நிறைவேறியதால் ஆலயத்திற்கென ஒரு அழகிய மணிக்கோபுரத்தை அமைத்தார்.
2017 இல் சுவாம்பிள்ளை அன்ரனி தேவதாஸ் என்பவர் தென்னை, பயன்தரு மரக்கன்றுகளை நாட்டினார். கட்டைக்காட்டுப் பகுதியில் 05 ஏக்கர் வயல்க் காணி பெறப்பட்டு ஆலயத்திற்கென வழங்கப்பட்டுள்ளது. வயல் வருமானங்கள் ஆலயத்திற்கு வழங்கப்படுகிறது.
2023 இல் வெளிநாட்டு நிதியுதவி மற்றும் ஆலய மக்களின் பங்களிப்புடன் குருமனையும், திருப்பண்டக் காப்பறையும் அமைக்கப்பட்டது. 2024 இல் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. 2025 இல் பழைய பீடம் உடைத்து புதிதாகக் கட்டப்பட்டது.
2025 இல் திரு அன்ரனி தேவதாஸ், திரு டொமினிக் சேவியர் ஆகியோர் கனடாவிலிருந்து சேகரித்து அனுப்பிய நிதியில் ஆலயத்திற்கான சுற்றுமதிலும், லூர்து அன்னையின் ஹெபியும் கட்டப்பட்டது.
2025 இல் ஆலயத்தைச் சுற்றி நடந்து வரும் பாதை சீமேந்தால் கட்டப்பட்டுள்ளது. நீர்க்குழாய்கள்பொருத்தப்பட்டுள்ளன. முன் பக்கம் மாத்திரம் மதில் கட்டப்பட்டது மிகுதிப் பகுதியில் ஆலயத்தின் குடும்பங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்து பனை மட்டைகளால் வரிந்து வேலி அமைத்துள்ளனர்.
07 குடும்பங்களை மாத்திரமே கொண்டுள்ள இவ்வாலயம் பாரிய முன்னேற்றகரமான செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. இவ்வாலயத் திருவிழாவானது தை மாதம் 20 ம் திகதி ஆலய மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply