கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா!

Posted on

by

தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினமான ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(17) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சிறப்புற கொண்டாடப்பட்டது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலக நலன்பரிச் சங்கமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மங்கள விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமை உரையுடன், சிறப்புச் சொற்பொழிவினை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் அருணாசலம் சத்தியானந்தம் நிகழ்த்தினர்.

பச்சிலைப்பள்ளி கங்கைத் தமிழ் மன்றத்தின் தனி நடனம், திருநகர் பிரசாந்தினி நர்த்தனாலயத்தினரின் குழுநடனம் என்பன நிகழ்வை அலங்கரித்திருந்தன.

மேலும் ஆடிப்பிறப்பு பாடலினைத் தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆடிக் கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள், கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவை அங்கத்தவர்கள், கலைஞர்கள், உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

ஆடிப்பிறப்பு பண்டிகையை தமிழர்கள் தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *