நாடகம்
பச்சிலைப்பள்ளி முல்லையடியில் வசித்து வரும் திரு சாத்தன் சிவநாதன் அவர்கள் சாத்தன்-நாகம்மா தம்பதிகளின் ஏழாவது புதல்வனாக 1949 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 16 ஆம் திகதி நுவரெலியாவில் பிறந்தார்.பின்பு யாழ்ப்பாணம் ஊரெழுவில் வசித்து வந்தார்.இவர் தனது ஆரம்ப கல்வியை ராகல மகாவித்தியாலயத்திலும்,உரும்பிராய் இந்துக்கல்லூரியிலும் கற்றார்.கல்வி கற்ற காலத்திலேயே பாடல்,நாடகம் என்பவற்றில் ஈடுபட்டு வந்தார்.
1974 ஆம் ஆண்டு தொடக்கம் பச்சிலைப்பள்ளி ,முல்லையடி பிரேதுசத்தில் வசித்து வரும் சாத்தன் சிவநாதன் அவர்கள் 1984 ஆம் ஆண்டளவில் முல்லையடி கிராமத்தில் இயங்கி வந்த விநாயகர் கலாமன்றத்தில் ஓர் உறுப்பினராக இணைந்து கொண்டார்.திரு.நா.நகுலேஸ்வரனின் ஆக்கத்தில் உருவான நினைவுகள் அழிவதில்லை என்னும் நாடகத்தில் டாக்டராக நடித்த நாள் தொடக்கம் டாக்டர் சிவா என மறுபெயரால் அழைக்கப்பட்டு இன்றுவரை அப்பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றார்.
அத்துடன் காத்தவராயன் சிந்துநடைக் கூத்திலும் இசைநாடகங்களிலும் துணைபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்துள்ளார்.கலாபூசணம் மகேந்திரனிடம் மிருதங்க பயிற்சி பெற்று மிருதங்க கலைஞராகவும் உள்ளார்.வில்லிசைக் குழுக்களிலும் இணைந்து கலைச்சேவை வழங்கி வருகின்றார்.
இவ்வாறாக நாடகம் , மிருதங்கம் , வில்லிசை என பல்துறை கலைஞராக பச்சிலைப்பள்ளி மண்ணுக்கு கலைச் சேவை ஆற்றி வரும் திரு.சாத்தன் சிவநாதன் அவர்களுக்கு கலைத்தென்றல் – 2024 ஆம் ஆண்டு விருதை வழங்குவதில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் பெருமை கொள்கின்றது.
Leave a Reply