பொறிக்கடவை அம்மன் ஆலயம்

Posted on

by

வன்னி வள நாட்டின் வடபகுதியில் யாழ்ப்பாண கடல்நீரேயின் தெற்கே நெற்களஞ்சியமாக விளங்கும் கிளிநொச்சி மாவட்;டத்தில் குஞ்சுப்பரந்தன், பொறிக்கடவை கிராமத்தில், கண்ணகித்தாய் எழுந்தருளி அன்னபூரணியாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறாள். உருத்திரபுரம் சிவாலயமும் பொறிக்கடவை கண்ணகி அம்மன் ஆலயமும் சமகால வரலாற்றை கொண்டவை என அறிஞர்கள் கூறுகின்றனர் இலங்கையில் சேர மன்னன் காலத்தில் இந்தியாவிலிருந்து கஜபாகு மன்னனால் கண்ணகி சிலை எடுத்து வரப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கண்ணகி வழிபாடு தொடங்கப்பட்ட காலத்தை அண்டி எமது கிராமத்திலும் கண்ணகி வழிபாடு தொடங்கப்படதாக நம்பப்படுகிறது.


கிராமிய வழிபாட்டு முறை எமது ஆலயத்தின் சிறப்பம்சமாகும். அலங்காரத் திருவிழாவின் போது மட்டும் அந்தண குருக்கள் அழைக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது. ஆசாரசீலரான பரம்பரையாக சமய தொண்டு செய்கின்ற சைவ பூசகர்களே ஆலய பூசர்களாக கடமையாற்றுகின்றனர். நாம் அறிந்தவரை பன்னிரண்டு தலைமுறையினர் ஆலய பூசகர்களாக கடமையாற்றி இருக்கின்றார்கள். பொறிக்கடவை என பெயர் பெற்ற வரலாறு இது கர்ணபரம்பரை செல்லப்படும் வரலாறாகும். தொடக்க காலத்தில் காட்டின் நடுவே ஓலைகுடிசையில் அம்மன் பூசை செய்து கொண்டிருந்த முதியவரை அணுகி பனிக்கர்கள் ஏய் கிழவா என்னசெய்து கொண்டிருக்கிறாய்” என அதட்டும் தொனியில் கேட்டனர். அதற்கு அம்மன் பூசை செய்து கொண்டிருக்கிறேன் என கூறினார் அதற்கு யானை பிடிப்பவர்கள் உனது அம்மன் சக்தி உள்ளவளாசே அப்படியாயின் நாளை நாம்வரும் போது நாங்கள் வைத்த பொறிக்கிடங்கில் ஓர் கொம்பன் யானை வந்திருக்க வேண்டும். அல்லாவிட்டால் உன்னை தொலைத்து விடுவோம்.” என பயமுறுத்தி சென்றனர். தனக்கு என்ன தீங்கு செய்வார்களோ என பூசகர் பயந்து நடுங்கி கொண்டிருந்தார் மறுநாள் வந்த பணிக்கர்கள் தாம் வைத்த பொறிக்கிடங்கில் ஓர் கொம்பன் யானை விழுந்திருக்க கண்டு மகிழ்ந்து ஆலயத்திற்கு வந்து உன் அம்மன் சக்தியுள்ளவள் தான் என்று கூறி பூசகரிடம் பொன்னும் மணியும் கொடுத்து சென்றனர் என்பது கர்ணபரம்பரையாக சொல்லப்பட்டு வரும் வரலாறாகும்.

மூலமூர்த்தி கண்ணகியம்மன் உற்சவமூர்த்திகள் முத்துமாரி, துர்க்ககை, நாகதம்பிரான், வள்ளி தேவயானை உடனுறை முருகப்பெருமான் காத்தவராயர், வைரவர் பொருமான், இங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. நாகதம்பிரான் மிக பழைமையானது ஏழுதலை நாக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படியான அமைப்பு எங்கு கண்டதில்லை நாகதம்பிரான் மூர்த்தி தொடர்பான கர்ணபரம்பரைக்கதையாகும். ஆலயத்தின் முன்பக்கமாக தாமரை தாடகம் இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பன்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு வந்து செலவதற்காக பலர் இச சிலையை கபவி வந்தார்கள் என்றும் தாமரைத் தாடகத்தின் அருகே வைத்து விட்டு குளத்தில் நீர் அருந்தி இளைப்பாறினார்கள் என்றும் இளைப்பாறிய பின் சிலையயை தூக்க முடியாததால் விட்டுச்சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

பெரியபரந்தன், குஞ்சுப்பரந்தன், பொறிக்கடவை , செருக்கன் கிராமங்கள் விவசாயக்கிராமங்கள் ஆகும். பொங்கல் மடை என்பன இவ்வாலயங்களின் முதன்மை வழிபாட்டு முறையாகும் கண்ணகியம்மன் பொங்கல் விழாக்களுக்கு முக்னோடியாக ஜயனார்ஆலயம், கொண்டடியான விநாயகர் ஆலய பொங்கல் மடை பரவி வழிபட்ட பின்பே இங்கு வழிபாடு தொடங்கும். பங்குனி மாதத்தில் ஒவ்வொரு திங்களும் பூசை வழிபாடு சிறப்பாக நடைபெறும் அறங்காவலர் சபையின் தீர்மானப்படி மூன்றாம் அல்லது நான்காம் பங்குனி திங்கள் வேள்வி விழா பகல் இரவு சிறப்பாக கொண்டாடப்படும் தென்மராட்சியிலிருந்தும் ஆயிரக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் காவடி பாற்குடம், தீச்சட்டி,,தீ மிதித்தல் போன்ற நோர்த்திகடன்களை நிறைவேற்றுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *