1687 இல் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்த புனித யோசப்வாஸ் அடிகளார் கத்தோலிக்கரைக் கொன்று குவித்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பிச்சைக்காரனைப்போல வேடமணிந்து கால்நடையாக 24 ஆண்டுகளாக வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களில் பணியாற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது.
இவர் கால்நடையாகப் பயணிக்கின்ற பொழுது தான் தங்குமிடங்களிலெல்லாம் ஒரு சிலுவையை நட்டுச் செல்வது இவரது வழமையாக இருந்தது. அவ்வகையில் வலைப்பாடு கிராமத்தின் பிரதான வீதி அருகாமையில் அவரால் நாட்டப்பட்ட சிலுவை மக்களின் வழிபாட்டிற்காக இருந்து வந்துள்ளமை வலைப்பாட்டில் புனித யோசப்வாஸ் அடிகளாரின் காலத்திற்கு முன்பே கிறிஸ்தவர்கள் வாழ்ந்துவந்துள்ளமைக்கான வரலாற்றுச் சான்றாகும்.
ஆரம்ப காலத்தில் பாய்க்காட்டுப்புளி எனுமிடத்திலுள்ள பெருக்க மரத்தில் சிலுவை செதுக்கி வழிபட்டுவந்துள்ளனர். இதனால் அவ்விடம் ‘கோயில்காடு’ எனும் பெயர்பெற்றது. காலவோட்டத்தில் தொழில் நிமித்தம் மண்ணால் ஒரு கொட்டில் அமைத்து சங்கிலித்தார் பூசைத்தியானம் செய்ய வழிபாடுகளை மேற்கொண்டனர். இறைமக்களில் ஒருவர் புனித அன்னாளின் திருச்சொரூபத்தை அன்பளிப்பாக வழங்கியமையாலும், கடல் பயணங்களுக்குக் காவலாக அன்னையின் திருச்சொரூபத்தைக் கொண்டுசென்றதாலும் புனித அன்னம்மாளுக்கென ஒரு ஆலயத்தை உருவாக்கியிருக்கலாம் என வாய்மொழிப் பாரம்பரியம் மூலம் அறிய முடிகிறது. 1919 இல் கிளி/ வலைப்பாடு றோ.க.த.க பாடசாலை அமைக்கப்பட்டமையினால், அதற்கு முன்பாகவே இவ்வாலயம் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக்கருத இடமுண்டு. 1930 களில் அருட்தந்தை ஹென்றி மோரோ அ.ம.தி குருவானவர் இரணைதீவுப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது, வலைப்பாடு புனித அன்னாள் ஆலயம் ‘வழிமீசாம்’ என அழைக்கப்பட்டதோடு பங்குத்தந்தை இங்கு தங்கியிருந்து பணியாற்றியுள்ளார். ஒரு கொட்டிலில் இரணைதீவுப் பங்கின் துணை ஆலயமாக விளங்கிய ஆலயத்தை மோரோ அடிகளார் முருகைக் கற்களால் கட்டினார்.
1938 இல் ‘L’ வடிவில் முகப்பு அமைக்கப்படாமல் கட்டப்பட்டிருந்தது.அவருக்குப் பின்னர் பணியாற்றிய ஸ்பானிய குருவான அருட்தந்தை பொனிபஸ் கொன்சால்வெஸ் அ.ம.தி அடிகளார் அவ்வாலயத்தினை ‘T’ வடிவிலான ஆலயமாக மாற்றியதுடன் முகப்பையும் அமைத்தார். இவ்வாலயமானது 1981.06.14 இல் திறந்துவைக்கப்பட்டது. 1992.08.12 இல் இவ்வாலயம் இரணைதீவுப் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப்பங்காக உருவாகியது.
வருடங்கள் உருண்டோட அதிகரித்த இறைமக்களின் தொகைக்கேற்ப ஆலயத்தைப் பெரிதாக்க வேண்டியதன் தேவை எழுந்ததனடிப்படையில் பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் றொக் அடிகளாரின் வழிகாட்டுதலில் பங்கு மக்கள் ஒன்றிணைந்து ‘கூட்டுக்கூடை வரவு’ மூலம் நிதியினைச் சேகரித்து வழங்கியதற்கமைய 2004.02.12 அன்று யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
2006.04.16 இல் அத்திவார வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கூரை அமைப்பதற்கான செலவினை யாழ் ஆயர் அவர்கள் வழங்கினார். 2008.07.26 அன்று ஆலயத் திருவிழா கொண்டாடப்பட்டது. பின் உள் நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தனர். ஏற்றிச்செல்லப்பட்ட ஆலயப் பொருட்கள் அனைத்தும் முள்ளிவாய்க்காலில் அழிந்தது. மீண்டும் 2009 இல் மீள்குடியேறியபோது ஆலயம் சிதைவடைந்திருந்தது. புனித அன்னாளின் திருச்சொரூபம் மாத்திரம் எந்தவித சேதங்களுமின்றி தம் மக்ககளின் வரவு நோக்கிக் காத்திருந்தது. அனைத்து சொத்துக்களையும் இழந்த வேளையிலும், மக்கள் தமது வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய வேளையிலும் அன்னையின் ஆலயத்தைக் கட்டி முடிக்கும் அணையாத ஆர்வத்தோடு அழிந்திருந்த அட்டைத்தொழிலை மீளுருவாக்கி ஆலயத்திற்கான பணத்தை மிகுந்த சிரமங்கள் மத்தியில் சேர்த்து இப்புதிய ஆலயத்தைக் கட்டி முடித்தனர். 2013.06.01 அன்று யாழ் ஆயரால் ஆலயம் திறந்துவைக்கப்பட்டது. 1938 இல் அமைக்கப்பட்ட ஆரம்ப ஆலயத்தின் 75 வது ஆண்டு நிறைவில் புதிய ஆலயம் திறக்கப்பட்டமை ஒரு சிறப்பான விடயமாகும். இப் புதிய பிரம்மாண்டமான ஆலயத்தின் வளர்ச்சி இயேசுவின் அன்னை தூய கன்னிமரியாளை ஈன்ற தாய் புனித அன்னாளின் வழிநடாத்துதலில், பங்குக் குருக்கள், பங்கு மக்கள் மற்றும் உதவும் உள்ளங்களின் அருமுயற்சியின் விளைவாக வானளாவி உயர்ந்து நிற்கிறது.

Leave a Reply