கிளாலி புனித சந்தியோகுமையோர் ஆலயம்

பழமைவாய்ந்ததும் வரலாற்றுப்பிரசித்திமிக்கதுமாகிய புனித சந்தியோகுமையோர் ஆலயமானது 400 ஆண்டு கால வரலாற்றுச்சுவடுகளைக்கொண்டது. இயேசுவின் சீடரான புனித பெரியயாகப்பரின் பெயரிலமைந்த இவ்வாலயம் 1622 இல் கிளாலியில் சிறிய ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் பல எழுத்துச்சுவடிகளில் காணக்கிடைக்கின்றது. ஆலயம் ஆரம்பிக்கப்பட்டடதன் 25ஆம் ஆண்டு நிறைவில் 1647 இல் சந்தியோகுமையோர் அம்மானை எனும் நாட்டாரிலக்கியம் பேதுருப்புலவரால் எழுதப்பட்டு இன்றுவரை பாடப்பட்டு வருகிறது.

1679 இல் யாழ்ப்பாணம் பூதனாராய்ச்சி என்பவர் கிளாலிப் பகுதியூடாக வன்னியை நோக்கிப் பயணித்தபோது போர்த்துக்கேயர் காலத்திலிருந்த சந்தியோகுமையோர் ஆலயம் இருந்த இடத்தில் தங்கவேண்டியேற்பட்டது. அப்போது அவரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதை சந்தியோகுமையோர் கனவில் தோன்றி எச்சரித்ததனால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டதன் நன்றியாக சிறிய ஆலயத்தைப் பெருப்பித்துக் கட்டியதுடன், தங்க, வெள்ளி ஆபரணங்களால் அலங்கரித்தார். 1834 இல் இவரது வழிமரபினராகிய முதலியார் நீக்கிலஸ் சந்திரசேகரா என்பவர் இலங்கையிலேயே முதன்முதலில் உயரமான அழகிய தேரினை அமைத்து அன்பளிப்பாக வழங்கினார். இன்றுவரை அவரது சந்ததியினர் ஆலயத்திற்குத் தேவையான உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

அக்காலத்திலேயே பல்லாயிரம் பக்தர்களை ஈர்க்கும் யாத்திரை ஸ்தலமாக இவ்வாலயம் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒல்லாந்தர் காலத்தில் குருக்களற்ற வேளையில் மறைப்பணியாற்றிய தூய யோசேப்வாஸ் அடிகளார் மாறுவேடத்தில் கிளாலிப்பகுதியிலும், இவ் யாத்திரைஸ்தலத்திலும் தங்கிச்சென்றதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன. ஆயினும் ஒல்லாந்தரால் தரைமட்டமாக்கப்பட்ட இவ்வாலயம் 1740 இல் திருகோணமலையைச்சேர்ந்த,’சோறிஸ்” எனும் பெண்மணி புனிதரின் பரிந்துரையால் நன்மை பெற்றமைக்கு நன்றியாக ஆலயத்தைக் கற்களால் கட்டுவதற்குப் பண உதவிகள் செய்தார்.

ஒல்லாந்தர் காலத்துக் கலவரங்களின்போது மறைத்துப் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பண்டைய சொத்துக்களான குதிரையில் சவாரிசெய்யும் சந்தியோகுமையோரின் திருச்சொரூபம், பாதணி, தங்கத்தினாலான, முக்கோணவடிவம் கொண்ட போர்த்துக்கேய எழுத்துக்கள் பதிக்கப்பட்ட தலைக்கவசம் என்பன ஆலய நிர்வாகத்தினரால் காலப்போக்கில் வயலில் கண்டுபிடிக்கப்பட்டு ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டன.

கிளாலியைச் சூழ்ந்து காவலரண் போல் அமைந்துள்ள ஐந்து ஆலயங்களிலுமிருந்தும் புனித அந்தோனியார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள புனித சவேரியார், புனித செபஸ்தியாரின் திருச் சொரூபங்களின் கூடுகளும் இணைந்த ஏழு கூடுகளும் இணைந்து சந்தியோகுமையோரின் திருவிழா நவநாட்களின் எட்டாம் நாளில் தீப்பாந்தங்களின் ஒளியில் பவனிவரும் கண்கொள்ளாக் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

இத் தேர்ப் பவனிகள் 1964 ஆம் ஆண்டில் ஆயர் இல்லத்தினால் சில நியாயமான காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு காலைப்பவனி மாத்திரம் இடம்பெற்றது. 1996 – 2010 வரை இத்திருத்தலம் கடற்படை இராணுவத்தளமாக மாற்றப்பட்டது. 1993 இல் யாத்திரைஸ்தலத்தின் கோபுரப்பகுதி விமானத்தாக்குதலால் சேதமடைந்தது.

மீண்டும் 2011 இல் பேரருட்கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் புதிய திருச்சொரூபம் வைக்கப்பட்டது. இவ்வாலயத்தின் அழகிய தேர் அழிவடைந்து அதன் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழைய ஆலயம் புராதன நினைவுச்சின்னமாகப் பராமரிக்கப்பட்டு வருவதுடன் பங்குத்தந்தையரினதும், பங்கு மக்களினதும் பெரும் முயற்சியினால் புதிய ஆலயம் அழகுற அமைக்கப்பட்டு 2021 இல் திறந்துவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *