புனித செபஸ்தியார் ஆலயம், பாரதிபுரம், கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் கிராமத்தின் பாதுகாவலரான புனித செபஸ்தியார் ஆலயமானது அக்கிராம மக்களினதும் பங்குத்தந்தையர்களினதும் கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட்டது. கிளிநொச்சிப் பங்கின் துணை ஆலயமாக விளங்கும் இவ் ஆலய மக்கள் ஆரம்ப காலங்களில் ஞாயிறு திருப்பலிகளுக்காக அயல் கிராமத்திலுள்ள ஆலயத்திற்கு நீண்டதூரம் பயணம்செய்யவேண்டியிருந்தது. இதனால் தமக்கென ஒரு ஆலயம் உருவாக்கப்படவேண்டும் என உணர்ந்த மக்கள் தமது கோரிக்கையை 1981 இல் பங்குத்தந்தையிடம் முன்வைத்தனர். அக்காலத்தில் 43 கத்தோலிக்க குடும்பங்கள் அக்கிராமத்தில் வசித்தபோதும் 08 குடும்பங்களே நிலையான கத்தோலிக்க குடும்பங்களாக ஆலயப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.


இத்தகைய பின்னணியில் 1989 இல் அருட்தந்தை பயஸ் அடிகளார் கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாக இருந்தபோது புதிய ஆலயத்தினை நிர்மாணிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து திரு மரியபாண்டியன், திரு ஜோதிமுத்து ஆகியோர் வழங்கிய காணியில் கிடுகு மற்றும் மண்ணால் சிறிய கொட்டில் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் வைப்பதற்கென புனித செபஸ்தியாரின் திருவுருவம் அருட்தந்தை இருதயதாஸ் அடிகளார் வழங்கினார்.

இதன் பின்னர் 1992 இல் அருட்தந்தை பொணிபஸ் அடிகளார் காலத்தில் கொட்டில் ஆலயத்திற்கு ஓடுகளினாலான கூரை அமைக்கப்பட்டது. 1995, 96 காலப்பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீண்டும் 2001 காலப்பகுதியில் மீள்குடியமர்ந்தபோது ஆலயத்தை மீள அமைக்கவேண்டியிருந்தது. இப்பின்னணியில் 2002 ஆம் ஆண்டில் அருட்தந்தை தேவசகாயம் அடிகளாரின் காலத்தில் சிறிய சீமேந்து கட்டிட ஆலயம் அமைக்கப்பட்டது. புனித செபஸ்தியாரின் திரு உருவம் ஆலய முகப்பின் மேற்பகுதியில் வைக்கப்பட்டதுடன், அருட்தந்தை தேவசகாயம் அடிகளாரால் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட புனிதரின் திருச்சொரூபம் அருட்தந்தை சூசைநாதன் அடிகளாரால் ஆசீர்வதீக்கப்பட்டு புதிய ஆலயத்தினுள்ளே வைக்கப்பட்டது. 2004 இல் இவ்வாலயம் சற்று பெரிதாக்கப்பட்டு அருட்தந்தை தேவசகாயம் அடிகளாரால் திறந்துவைக்கப்பட்டது.

2005, 2006 காலப்பகுதியில் உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை தா.நிரூபன் அடிகளாரால் ஆலயத்திற்குத் திரும்பும் வழியாகிய இரணைமடுச் சந்தியில் புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு அடையாளமாக 1988, 89 ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட திருச்சிலுவை எடுக்கப்பட்டு புனிதரின் திருச்சொரூபமொன்று நிர்மாணிக்கப்பட்டது. அருட்தந்தை ஜேசுதாஸ் அடிகளாரின் காலத்தில் திருவிழாக்காலங்களில் குருக்கள் வந்து தங்குவதற்கான பங்குப் பணிமனை அமைக்கப்பட்டது. காலப்போக்கில் இறைமக்கள் தொகை அதிகரித்து வந்ததைக் கருத்தில் கொண்டு ஆலயத்தைப் பெரிதாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இதனடிப்படையில் 11.06.2023 இல் புதிய ஆலயத்திற்கான அத்திவாரமிடப்பட்டு அருட்தந்தை சில்வெஸ்டர்தாஸ் அடிகளாரின் காலத்தில் கட்டிடப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. பழைய ஆலயம் முற்றாக உடைக்கப்பட்டு திருப்பலிகள் பங்குப்பணிமனையில் நடாத்தப்பட்டது. 2025 இல் ஆலயப் பணிகள் நிறைவடையாத நிலையில் ஆலயத் திருவிழா வழமைபோல் தை 20 இல் நடாத்தப்படாமல், 25.05.2025 இல் புதிய ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. தற்போது 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்படாத புதிய ஆலயப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *