10ம் பத்திநாதர் ஆலயம், கல்மடுநகர்

1956 இல் இடம்பெற்ற குடியேற்றத்திட்டத்தின் போது நெடுந்தீவு, புங்குடுதீவுகளைச் சேர்ந்த மக்களில் 20 குடும்பங்கள் கல்மடுநகரில் குடியேற்றப்பட்டன. இங்கு குடியேறிய கத்தோலிக்க மக்கள் தமது வழிபாடுகளுக்காக ஆலயம் தேவை என்பதனை உணர்ந்து அன்றைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை லெபோன் அடிகளாரிடம் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.

அவரது அனுமதியுடன் ஒரு கொட்டில் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தை எந்தப் பூனிதரின் பெயரால் அமைப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது அருட்தந்தையவர்கள் புனித 10 ம் பத்திநாதருக்கென ஒரு ஆலயமும் இலங்கையில் இல்லை என்பதால் அவரது பெயரில் ஒரு ஆலயம் அமைக்கலாம் என ஆலோசனை வழங்கியதற்கமைய கொட்டில் ஆலயத்தில் இப்புனிதரின் திருச்சொரூபம் வைக்கப்பட்டதுடன், வாராந்தம் அல்லது மாதாந்தம் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

1986 இல் மாதா கூட்டத்தைச்சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து கிணறு வெட்ட ஆரம்பித்தனர். அக்கிணற்றில் தண்ணீர் வருவதைக்கண்ட ஏனைய ஆண்கள் அவர்களுடன் இணைந்து கிணறு வெட்டி கட்டுக்கிணறாக அமைக்கப்பட்டது. இக்கிணற்று மண்ணை எடுத்து மண்ணாலான நேசரிக் கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. கிணறு வெட்டும் பணிகளில் ஈடுபட்டோருக்கு பெண்கள் வீடுவீடாகச்சென்று சமைத்த உணவுகளை வாங்கிப் பகிர்ந்தளித்தனர்.

காலப்போக்கில் அருட்தந்தை மைக்கல் அடிகளாரின் காலத்தில் சீமேந்துக் கற்களாலான ஆலயம் அமைக்கப்பட்டது. அருட்தந்தை அகஸ்ரின் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் தற்போதிருக்கும் புதிய ஆலயம் அமைக்கப்பட்டது. நாடகங்கள் Ticket show போட்டு சேர்ந்த பணம் ஆலய கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

புனித பத்தாம் பத்திநாதருக்குரிய பிரார்த்தனை இல்லாதிருந்ததால், இவ்வாலயத்தைச்சேர்ந்த மரிய ரஞ்சி என்பவர் ஒரு பிரார்த்தனையை எழுதினார். அப்பிரார்த்தனையே இன்றும் ஆலயத்தில் வாசிக்கப்படுகின்றது.

அலங்காரம் ஆச்சி என அழைக்கப்படும் பார்வையற்ற மூதாட்டியொருவர் இரவு வேளை ஆலயத்தில் உறங்கிய போது “எழுந்து வெளியே செல்” எனும் குரலொலி கேட்டதாகவும், அவர் விழித்தெழுந்தபோது பார்வைபெற்றதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். அவ்வாறே மழை இல்லாது வறண்டிருந்த போது புனிதரின் திருச்சொரூபத்தை அலங்கரித்து ஊரைச்சுற்றி பவனியாகக் கொண்டு சென்றபோது ஒரு நாள் முழுவதும் மழை விடாது பொழிந்ததாகவும், இப்பொழுதும் ஆலயத் திருவிழா நாட்களில் இரவு வேளைகளில் ஆலயத்தில் தங்கும்போது கிணற்றடியில் குளிப்பது போலவும், அறைவீட்டில் நடப்பது போலவும் ஒலிகள் கேட்பதாக அங்கு தங்கிய மக்கள் கூறுகின்றனர்.

நடராசா ஞானமலர் என்பவர் தனது பள்ளிக்காலத்தில் ஆலய மணியோசை கேட்டு அதிகாலையில் எழுந்து படித்ததாகவும், அதனால் இவ்வாலயத்திற்கென மணிக்கோபுரம் ஒன்றை அமைக்க வேண்டும் எனும் அவாவினால் அது தற்போது அமைக்கப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *