1969 ஆம் ஆண்டுகளில் ஆரோபணம் இளைஞர் இல்லமானது உருத்திரபுரத்தில் இயங்கிவந்தது. இதன் இயக்குநராக இருந்த மேதகு எமிலியாணுஸ் ஆண்டகையின் செயலாளராகக் கடமையாற்றிய அருட்தந்தை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ( பின்நாளில் திருகோணமலை, மன்னார் மறைமாவட்டங்களின் ஆயர்) அடிகளார் அவர்கள் அருகிலுள்ள ஜெயந்திநகர் கிராமத்தில் வசித்த கத்தோலிக்க குடும்பங்களுக்கென ஒரு ஆலயம் தேவை என்பதை உணர்ந்து 1969.06.01 அன்று 13 அங்கத்தவர்களைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை அமைத்ததிலிருந்து ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்திற்கான வரலாற்றுத் தடங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
அக்காலத்தில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவராக இருந்த ஆசிநாதர் (அதிபர் புனித திரேசாள் பாடசாலை) என்பவரிடம் ஆலயம் அமைப்பதற்கான இடத்தைத் தெரிவுசெய்யும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடம் தெரிவுசெய்யப்பட்டது. அவ்விடத்தைத் துப்புரவு செய்து தற்போது அமைந்துள்ள சிலுவை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அடிகளாரால் ஆசீர்வதித்து நிலைநாட்டப்பட்டதுடன் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் ஒரு ஓலைக்கொட்டில் அமைத்து 13.06.1969 இல் மூன்று நாட்கள் கொண்ட திருவிழா கொண்டாடப்பட்டது.
அருட்தந்தை குணசீலன் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் வண பிதா தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள் அடிக்கல் நாட்ட தற்போது உள்ள ஆலயம் கட்டப்பட்டது. Patricks Rector என்பவர் Town Council இல் விண்ணப்பம் செய்து கிணறு ஒன்றை அமைத்தார்.
உள்நாட்டு யுத்தங்களின் பின் 2010 இல் மீள்குடியேறிய பின் பணியாற்றிய பங்குத்தந்தையர்களால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 22.06.2025 அன்று தற்போதைய பங்குத்தந்தை ஜோன் கனீசியஸ் அடிகளாரின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட குருக்களுக்கான பங்குப் பணிமனை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. 200 இற்கும் மேற்பட்ட த்தோலிக்க குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். வருடம்தோறும் ஆனி மாதம் 13 ம் நாள் புனிதரின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply