புனித பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயம், தர்மபுரம்

கிளிநொச்சி மாவட்டத்தின் குடியேற்றத்திட்டங்கள் உருவாகியபோது ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களில் புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தர்மபுரம் ஆலயமும் ஒன்றாகும்.

1958 ஆம் ஆண்டில் திரு சத்தியசீலன் என்பவருடைய காணியில் ஆலயமாகவும், பாடசாலையாகவும் இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை இரும்பர் பொன்னையா அடிகளாரும் அவரது உதவியாளரான பிரான்சிஸ் அடிகளாரும் இணைந்து குடியேற்றத் திட்டத்தில் வசித்த கத்தோலிக்க குடும்பங்களின் நலன்கருதி இவ்வாலயத்தை ஆரம்பித்தனர். அருட்தந்தை பிரான்சிஸ் சவேரியார் அடிகள் தமது பெயர்கொண்ட புனிதரின் ஆலயமாக இவ்வாலயத்தை அமைக்க ஆவல்கொண்டதால் சவேரியார் ஆலயமாக உருப்பெற்றது. ஒரு ஓலைக்கொட்டிலில் திரு அந்தோனிப்பிள்ளை, திரு சூசைநாதன், திரு சிங்கராசா ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்விபுகட்டினர். இப்பிரதேசத்தில் ஒரு அரச பாடசாலை அமைக்கப்படும்வரை திரு சத்தியசீலன் என்பவருடைய காணியிலும் பின்பு தற்போது ஆலயம் அமைந்துள்ள காணியிலும் ஆலயமும், பாடசாலையும் இயங்கிவந்தன.

1958 தொடக்கம் 1961 வரை திரு சத்தியசீலன் என்பவருடைய காணியில் இயங்கிவந்தன. சம காலத்தில் ஆலயத்திற்கென ஒரு காணியை வாங்கும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்திடம் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கான அனுமதி கிடைத்த பின் திரு சூசைநாதன் மாஸ்ரர் தற்போது ஆலயம் அமைந்துள்ள காணியிலேயே குடியேறி பாடசாலையையும், ஆலயத்தையும் பராமரித்து வந்தார். 1970 ஆம் ஆண்டில் பெரிய ஆலயம் அமைக்கப்பட்டது. அருட்தந்தை ஒம்லோ அடிகளார் தமிழில் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். பரந்தன் பங்கின் துணை ஆலயங்களில் ஒன்றாக இவ்வாலயம் அமைந்திருந்தது. 1980 இல் தனிப் பங்காக மாற்றப்பட்டது. 1984 – 1985 களில் குருக்கள் தங்குவதற்கான பங்குப்பணிமனை 500,000.00 ரூபா செலவில் அருட்தந்தை யூட்நிக்சன் அடிகளாரால் பெரிதாக அமைக்கப்பட்டது.

2007 இல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் ஆலயம் பகுதியளவில் சேதமடைந்ததுடன் 2008 இல் குருமனை தரைமட்டமாக உடைக்கப்பட்டது. மீண்டும் மக்கள் மீளக்குடியேறியபோது ஆலயத்தைப் புனரமைக்க வேண்டியிருந்தது. 2017 இல் பழைய ஆலயத்தை இடித்து பெரிதாக புதிய ஆலயம் அமைக்கப்பட்டது. 2023 இல் பங்குப்பணிமனையும் அமைக்கப்பட்டது.

மார்கழி 03 ம் திகதி புனித சவேரியார் தினமாக இருந்தாலும் மழைகாலத்தில் ஆலய வளவினுள் வெள்ளம் ஏற்படுவதால் ஆவணி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் புனிதருக்கான திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

போர்க்காலங்களில் பலர் புனிதரின் பரிந்துரையையும், பாதுகாவலையும் பெற்றதாக மக்கள் சான்றுபகர்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *