புனித செபமாலை அன்னை ஆலயம்இரணைமாதாநகர், முழங்காவில்

1992 இல் இரணைதீவிலிருந்த மக்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இரணைமாதாநகரில் குடியேறிய பின் தங்கள் பாதுகாவலிக்காக அமைத்த ஆலயமே புனித செபமாலை அன்னை ஆலயமாகும். அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரினதும், இறை மக்களினதும் கூட்டு முயற்சியினால் 1992.08.12 இல் பியன் உற்பத்தி நிலையக் காணியில் தூண்கள், ஓடுகளைக் கொண்ட சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது.

இரணைதீவிலிருந்த அன்னையின் திருச்சொரூபமானது பங்கின் துணை ஆலயமான வலைப்பாடு புனித அன்னாள் ஆலயத்தில் வைக்கப்பட்டு இச்சிறிய ஆலயம் அமைக்கப்பட்டவுடன் 06.10.1992 இல் திருச்செபமாலை நடைபவனியுடன் கொண்டுவரப்பட்டு 07.10.1992 இல் முதலாவது திருவிழா கொண்டாடப்பட்டது.

மழை காலத்தில் நீர் தேங்கி நிற்கக்கூடிய பள்ளமான காணியில் அன்னையின் ஆலயம் அமைந்திருந்ததால் தற்போதைய புதிய ஆலயம் அமைந்திருக்கும் காணியில் அவ்வாலயத்திற்குப் பின்புறமாக 1993 இல் தற்காலிக ஆலயமொன்று அமைக்கப்பட்டது. இவ்வாலயத் திருத்த வேலைகளின்போது திரு. அ. ஜெயசீலன் எனும் பக்தர் கூரையிலிருந்து தவறி வீழ்ந்தும் எவ்வித பாதிப்புமின்றி உயிர்பிழைத்த அதிசயம் அன்னையின் கருணையால் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வின் பின் போர் மேகங்கள் சூழ்ந்து வறுமையின் பிடியில் சிக்கியிருந்தாலும், அன்னைக்கு ஓர் நிரந்தர ஆலயம் அமைக்க வேண்டும் எனும் அவாவில் அன்றைய பங்குத்தந்தை அருட்பணி ஞானரட்ணம் அவர்களின் ஆலோசனை, வழிநடத்தலில் முருங்கன் பகுதியிலிருந்து இரும்புத் தூண்களைத் தோள்களில் சுமந்து வந்தும், இரணைதீவிலிருந்த கட்டட ஓடுகள், சிலாகைகளைப் பெற்று, படகுகளில் கொண்டுவந்து உள்ள வளங்களைக்கொண்டு ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் மூன்றாவது ஆலயம் அமைக்கப்பட்டது.

இருப்பினும் அன்னைக்கு பிரம்மாண்டமான ஒரு ஆலயம் அமைத்து சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும் என்னும் அவா பேரலையாக மக்கள் மனங்களை ஆக்கிரமித்திருந்தது. இதன் பயனாக அன்றைய பங்குத்தந்தை அருட்பணி X.W ஜேம்ஸ் அவர்களின் வழிகாட்டலில் பங்கு மக்கள் அனைவரும் கூடி சில தீர்மானங்களை மேற்கொண்டனர்
கடற்தொழிலின் பலவகைத் தொழில்களையும் கூட்டாக மேற்கொண்டு அதனால் கிடைக்கப்பெறும் வருமானங்களை ஆலயத்திற்கு அளித்தல்
குறிப்பிட்ட ஒரு நாளில் கடற்கரையில் வெள்ளைக்கொடியை நாட்டி அன்றைய வருமானங்களை ஆலயத்திற்கு அளித்தல்
தொழிலாளர்கள் தொழில் கொண்டுசென்று கொடுக்கும் இடங்களில் கிலோவிற்கு 10.00 ரூபா வீதம் ஆலயத்திற்கு வழங்குதல்
என பல்வேறு நிதிமூலங்களைத் தம்மத்தியிலிருந்தே கண்டுபிடித்து ஊர்கூடித் தேரிழுத்தது போன்று 24.10.2003 இல் ஓய்வுநிலை ஆயர் பேரருட்கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையின் அனுமதியுடன் தற்போதைய புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து மக்களின் பங்களிப்புடனும் விடாமுயற்சியுடனும் படிப்படியாக வளர்ச்சி கண்டது.

உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் பின் மீளக்குடியமர்ந்த போதும் அன்னையின் ஆலயம் ஒரு சிறிய தாக்கங்களுமின்றி அற்புதமாகக் காட்சியளித்தது.

இவ்வற்புதத்தைக் கண்ட மக்கள் தம்மோடு உடன் உழைப்பாளர்கள் பலரை இழந்த நிலையில் அவர்கள் கண்ட கனவுகளை நனவாக்க வேண்டும் எனு வேணவாவுடன் தமது ஒத்துழைப்புக்களை அள்ளி வழங்கினர்.

குடும்பத்திற்கு 30,000.00 ரூபா நிதிப்பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. முழங்காவில் புனித மரியாள் ஆலயத்தைப் பங்குமனையாகக் கொண்டியங்கிய இவ்வாலயம் 300 இற்கும் அதிகமான குடும்பங்களைக் கொண்டதாக இருந்ததால் தனிப்பங்காக உருவாக வேண்டும் எனும் ஆர்வத்தில் பங்கு மனையும் அமைக்கப்பட்டது. திருப்பண்டக்காப்பகம், டோம், மணிக்கோபுரம் போன்றவை அழகுற அமைக்கப்பட்டன. மக்ககளின் எண்ணிக்கை கருதி ஆலயம் விஸ்தீரணப்படுத்தப்பட்டது.

படிப்படியாக பற்பல நல்லுள்ளங்களின் தியாகங்களோடும், நிதியுதவியோடும் உருவாகிவந்த ஆலயம் 10.05.2023 அன்று பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் 17.05.2025 இல் புதிய பங்காக உருமாற்றி மக்களின் கனவை நனவாக்கினாள் அன்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *