புனித ஆரோக்கியநாதர் ஆலயம், இராமநாதபுரம்

1955 ஆம் ஆண்டு இராமநாதபுரம் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு குடியேறிய கத்தோலிக்க மக்களின் நலன் கருதி அன்றைய யாழ்மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய மேதகு எமிலியாணுஸ் ஆண்டகை அவர்களின் முயற்சியினால் அரச அதிபரின் உதவியோடு 07 ஏக்கர் காணி ஆலயத்திற்கென ஒதுக்கப்பட்டது.

அருட்தந்தை சூசைநாதன் அடிகளார் கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது 1958 இல் இக் காணியில் ஒரு கொட்டில் ஆலயம் அமைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இவ்வாலயத்தை அண்டிய பகுதிகளில் ஆயர் அவர்கள் யாழ் நகரிலிருந்து கத்தோலிக்க குடும்பங்களைக் குடியேற்றினார். 1960 இல் இவ்வாலயத்தைப் பரிபாலிப்பதற்காக பருத்தித்துறையிலிருந்து திரு கயித்தாம்பிள்ளை என்பவரின் குடும்பத்தை ஆயர் அனுப்பிவைத்தார். அருட்தந்தை சூசைநாதன் அடிகளார் ஆயர் அவர்களின் உத்தரவின் படி ஆலயக் காணியிலிருந்து இரண்டு ஏக்கர் காணியை அக்குடும்பத்திற்கு வழங்கினார். அவர்கள் புதிய வீட்டை நிர்மாணித்து 1961 இல் அங்கு குடியேறியதுடன் ஆலயத்தின் அனைத்துப் பணிகளையும் பொறுப்பெடுத்து சிறப்பாக நிறைவேற்றிவந்தனர்.

அருட்தந்தை பிலிப் பொன்னையா அடிகளார் பங்குத்ததத்தையாகப் பணியாற்றிய காலத்தில் குருக்கள் தங்குவதற்கான குருமனை கட்டப்பட்டது. அருட்தந்தை மகேந்திரன் அடிகளாரின் முயற்சியினால் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் அருட்தந்தை வஸ்தியாம்பிள்ளை அடிகளாரின் காலத்தில் கொட்டில் ஆலயம் அழகிய பெரிய ஆலயமாக கட்டப்பட்டது.

1982 ஆவணி மாதம் 29ம் திகதி அருட்தந்தை பயஸ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது ஆலயத்தின் யூபிலி விழாவும், திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1984இல் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்து அகதிகளாக தஞ்சம்கோரிய 04 கத்தோலிக்க குடும்பங்களுக்கு ஆலய வளவில் 1/4 ஏக்கர் வீதம் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. அத்துடன் ஆலயத்தைப் பராமரிப்பதற்கான செலவீனங்களுக்காக 02 ஏக்கர் காணி 1/4 ஏக்கர் வீதம் பத்துக் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் விற்ப்பட்டது. எஞ்சிய 3 1/2 ஏக்கர் காணியும் நில அளவையாளர் திரு சந்தியாப்பிள்ளை அவர்களால் அளந்து எல்லையிடப்பட்டு வேலியமைத்து அறிக்கையாக்கப்பட்டது.

அருட்தந்தை ஜெறோ அடிகளார் பங்கினைப் பொறுப்பேற்ற காலத்தில் குருமனை பெரிதாக்கப்பட்டு கன்னியர் மடமாக மாற்றப்பட்டது. அருட்சகோதரிகளான ஜேர்மலின், மாசிலா, இவோன், மரிய கிளாரா ஆகியோர் இங்கு தங்கிப் பணியாற்றினர்.

1927 இல் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் கன்னியர்மடத்திற்கு அருகாமையில் இந்திய இராணுவம் முகாமிட்டிருந்தனர். இதனால் கன்னியர் மடம் இயங்கமுடியாத நிலையில் மீண்டும் குருமனையாக மாற்றப்பட்டது.

1989.10.14 அன்று ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகையின் திட்டப்படி வட்டக்கச்சி கிளிநொச்சிப் பங்கிலிருந்து பிரிந்து வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயத்தைப் பங்குப்பணிமனையாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. அருட்தந்தை ஞானரட்ணம் அடிகளார் முதற் பங்கைப் பொறுப்பேற்றார்.

1989 இல் சூசைநாதன் அடிகளார் மாதா கூட்டத்தினை ஆரம்பித்தார். 1995.01.28 இல் அன்பின் கன்னியர் இங்கு வந்து முன்பள்ளி, பாடசாலை சேவைகளை வழங்கியதுடன், வைத்தியசாலை மாதிரி ஒன்றை அரம்பித்து ஏழை மக்களுக்கு இலவச சேவையை வழங்கினர்.

இளையோர் ஒன்றியம், புனித திரேசாள் மன்றம், பீடப்பணியாளர், திருப்பாலத்துவ சபை போன்ற அமைப்புக்கள் இயங்கிவருகின்றன.

2008 இறுதி யுத்தத்தின் போது ஆலயத்தின் பின்பகுதியும், குருமனையும் சேதமடைந்தது. அருட்தந்தை இருதயதாஸ் அடிகளாரின் காலத்தில் ஆலயக்கிணறு திருத்தியமைக்கப்பட்டது.08.09.2013 இல் புதிய லூர்து கெபி யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் திறந்துவைக்கப்பட்டது. பழுதடைந்திருந்த ஆலயக் கூரை அருட்தந்தை பிறாயன் அடிகளாரின் காலத்தில் திருத்தியமைக்கப்பட்டு, 23.08.2020 இல் யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

30 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்ட இவ்வாலயத் திருவிழாவானது வருடம்தோறும் ஆவணி மாதம் 27 ம் நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *