மண்ணித்தலை புனித செபஸ்தியார் ஆலயம்

மண்ணித்தலை புனித செபஸ்தியார் யாத்திரைஸ்தலமானது யாழ்ப்பாணம் பாஷையூர் பங்கு மக்களினால் பராமரிக்கப்படுகின்ற பிரசித்திமிக்க ஆலயமாகும். 24.04.1867 இல் புனித செபஸ்தியார் ஆலயமானது கல்முனை, பூநகரி செட்டியார் குறிச்சி உடையார் விதானையார் பிரிவில் கிறிஸ்தவ விவாகங்கள் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாயினும் இக்காலகட்டம் தொடர்பான தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.

1913 இல் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குக் குருவாகப் பணியாற்றிய அருட்பணி விக்ரர் டெலாண்ட் அடிகளார் பூநகரியின் வினாசியோடை கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி 35 வறிய கத்தோலிக்க குடும்பங்களை அங்கு குடியேற்றினார். அம் மக்களின் வழிபாட்டிற்கென ஒரு சிறிய ஆலயத்தை அமைத்து புனித அந்தோனியார், புனித செபஸ்தியார் ஆகியோரின் திருச்சொரூபங்களை அங்கு நிறுவினார்.

காலப்போக்கில் இம்மக்கள் தொழில்நிமித்தம் குடிபெயர்ந்து கௌதாரிமுனையில் குடியேறினர். அங்கிருந்த சிற்றாலயத்தில் தம்முடன் கொண்டுசென்ற இரு புனிதர்களின் திருச்சொரூபங்களையும் வைத்து வழிபட்டனர். ஆயினும் றோசை என்பவரின் குடும்பத்தினர் மாத்திரம் இக் குழுமத்திலிருந்து பிரிந்து மண்ணித்தலை எனுமிடத்தில் குடியேறி அங்கு ஓர் ஓலைக்குடிசையை அமைத்து புனித செபஸ்தியாரின் சிறிய திருச்சொரூபத்தை பிரதிஸ்டை செய்து வழிபட்டு வந்தனர். இவர்களின் பின் இவ்வாலயம் கவனிப்பாரற்று விடப்பட்டது. இக்காலத்தில் பாஷையூரைச் சேர்ந்த கயித்தான் என்பவர் அவ்வாலயக் காணியை விலைக்கு வாங்கி, ஆலயத்தைத் திருத்தியமைத்து வழிபட்டு வந்தனர்.

1929 இல் கயித்தாரின் மருமகனான யாக்கோ குரூஸ் என்பவர் தற்போது கிணறு அமைந்திருக்கும் காணியை விலைக்கு வாங்கியதுடன், பழைய கோவிலை இடித்துப் பெரிதாகக் கட்டினார். 1940 இலிருந்து இன்றுவரை வருடாவருடம் ஆவணி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை இவ்வாலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

1970 இல் பாவிலுப்பிள்ளை என்பவர் ஒரு சித்திரத்தேரினை அன்பளிப்பாக வழங்கினார். 1983. 03.18 இல் இவ்வாலயம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பிரசுராலயங்களில் ஒன்றாகப் பதிவுசெய்யப்பட்டது.

1985 இல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் 60 x 20 அளவிலான யாத்திரீகர் மண்டபம் கட்டப்பட்டது. 1987 தொடக்கம் 2000 ஆண்டுகள் வரை ஏற்பட்டிருந்த இந்திய இராணுவத்தின் வருகை மற்றும் உள்நாட்டு யுத்தங்களால் ஆலயத் திருவிழா நடைபெறவில்லை. 2000 ஆண்டில் இராணுவத்தினரின் குண்டுவீச்சினால் யாத்திரீகர் மண்டபம் அழிவடைந்தது. 2002 இல் ஆலயம் பகுதியளவில் சேதமடைந்தது. 2003, 2004, 2005 காலப்பகுதிகளில் இரு தரப்பினரதும் அனுமதி பெற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவு மக்கள் தொகையுடனும், வரையறுக்கப்பட்ட கால அளவில் திருவிழா கொண்டாடப்பட்டது. 2006 இல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் பாரிய பீப்பாக் குண்டுகள் ஆலய வளாகத்தில் வீழ்ந்தமையால் ஆலயம், தேர், தேர் வீடு, நற்கருணைப் பவனி ரதம், குருமனை, திருச்சொரூபங்கள், மற்றும் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் முழுமையாக அழிவடைந்தது. 2007 இல் ஆலய வளவில் பயணிகள் தங்கிச் செல்வதற்கான இரு மண்டபங்கள் கட்டப்பட்டன. கிளிநொச்சி மறைக்கோட்டம் ஆரம்பிக்கப்பட்டவுடன் இவ்வாலயம் பூநகரி வாடியடி மாதா ஆலயப் பங்குடன் இணைக்கப்பட்டது. 2011 – 2017 வரை தற்போதைய புதிய ஆலயம் அமைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களை அண்டிவாழும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டு புனிதரின் அருள்பெற்றுச்செல்கின்றனர்.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வாடியடி புனித மரியாள் ஆலய பங்குத்தந்தையின் பரிபாலனத்தில்,
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் மாவட்டசெயலகம், பிரதேச செயலகம் இணைந்து பிரதேச சபை, வைத்திய, சுகாதாரத்துறை, பொலிஸ், இலங்கை போக்குவரத்துச்சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், ஆலய அருட்பணிச்சபை ஆகியோரின் உதவியுடன் வருடந்தோறும் திருவிழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *