இத்தாவில் புனித பார்பரம்மாள் ஆலயம்

சுவாமி ஞானப்பிரகாசரின் அரும்முயற்சியினால் 1918 ஆம் ஆண்டில் இத்தாவில் பதியில் கோவில் கொண்டாள் புனித பார்பரம்மாள் சுவாமி ஞானப்பிரகாசர் புனித பார்பரம்மாள் மீது கொண்ட பக்தியால் அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்னும் அவாவினால் உந்தப்பட்டு இத்தாலியின் உரோம் நகரிலிருந்து 1918 இல் புனித பார்பரம்மாளின் திருச்சொரூபத்தை வரவழைத்து இத்தாவிலில் ஒரு கொட்டகையில் குடியமர்த்தினார். 1966 வரை அன்னை இக் கொட்டகையில் வாசம்செய்தாள்.

மிருசுவில் பங்கின் இணை ஆலயமாகத் திகழ்ந்த இவ்வாலயமானது 1967 இல் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டு புதிய கொட்டகையில் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. இக்காலத்தில் மிருசுவில் பங்கிலிருந்து பிரிந்து முகமாலை ஒரு தனிப் பங்காக மாற்றம் பெற்றது. குருக்கள் துறவியரின் பெரும் முயற்சியினாலும், பிறரன்புப் பணிகளாலும் இப்பங்கிலிருந்து மூன்று அருட்சகோதரிகளும், ஒரு குருவானவரும் உருவாக்கம் பெற்றனர்.

2000 ம் ஆண்டுகளில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலங்களில் அன்னையின் ஆலயம் முற்றாக சேதமடைந்து மீண்டும் 2012 இல் இத்தாவிலின் முதற்குரு அருட்பணி அலன் அவர்களின் முதற் திருப்பலியின் பொருட்டு புனரமைக்கப்பட்டது. யுத்த சூனியப் பிரதேசமாகப் பல ஆண்டுகள் இராணுவத்தினரின் தாக்குதல்களினால் சேதமடைந்திருந்த ஆலயத்தினைப் பார்வையிட ஆவலுடன் சென்ற மக்கள் புனித பார்பரம்மாளின் திருச்சொரூபம் ஒரு மறைவிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதையும், சன்னங்களால் துளைக்கப்பட்டு சல்லடையாக்கப்பட்டிருந்த ஆலயச் சுவர்களின் நடுவே திருச்சிலுவை நாதரின் சொரூபம் மட்டும் சிறு பாதிப்புக்களுமின்றி கம்பீரமாகக் காட்சியளிக்கும் அதிசயத்தைக்கண்டார்கள். இந்நிகழ்வு அவ் ஆலய மக்களின் துன்பங்களில் இயேசு ஆண்டவர் அவர்களைப் பாதுகாத்தமைக்கான சாட்சியாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் ஆலயக்கட்டடம் பழமையானதாகவும், பெருகிவரும் இறைமக்ககளின் எண்ணிக்கைக்குப் போதாததாகவும் இருந்ததால், ஆலயத்தைப் பெரிதாக்கவேண்டிய தேவை எழுந்தது. இதனால் தற்போதைய பளைப் பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் ஜோர்ஜ் அடிகளாரின் முயற்சியால், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் 2023 இல் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் புதிய ஆலத்திற்கான அத்திவாரமிடப்பட்டு ஆலயக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *