தர்மபுரம் பங்கின் துணை ஆலயமாக உயர்ந்து நிற்கும் இவ்வாலயமானது அதன் ஆரம்பத்தில் பரந்தன் பங்கின் பகுதி ஆலயமாக உருப்பெற்றது. அருட்பணி அ.பெ. பெனற் அடிகளார் பரந்தன் பங்கின் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில், பிரமந்தனாறு பகுதியில் வசித்த இறைமக்கள் தமக்கென ஒரு ஆலயம் உருவாக்கப்பட வேண்டும் என விண்ணப்பம் செய்ததையடுத்து வட்டக்கச்சி பங்குத்தந்தை ஞானரட்ணம் அடிகளார் பரந்தன் பங்குத்தந்தையுடன் கலந்தாலோசித்து ஆயரின் அனுமதியைப் பெற்ற போதிலும் ஆலயம் அமைப்பதற்கான காணி இல்லாமையால், பிரமந்தனாறு பகுதியிலிருந்த முன்பள்ளியிலும், பின் அதற்கு அண்மையிலிருந்த மர நிழலிலும் வழிபாடுகளை முன்னெடுத்தனர். இதனைக் கண்ணுற்ற திரு சூசைநாயகம் ஆசிரியரின் வழிகாட்டலில் கோவில் பங்காளரான திரு அல்போன்ஸ் லிகோரி என்பவர் 1/2 ஏக்கர் காணியை ஆலயம் அமைப்பதற்கென வழங்கியுதவினார். 1993.05.10 இல் முதன் முதலில் ஒரு கொட்டில் ஆலயமாக இவ்வாலயம் உருப்பெற்றது.
1993.06.01 அன்று இறை இரக்க ஆண்டவரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமைகளிலும், மாதமொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இவ்வாலயத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. அருட்தந்தை யூட் நிக்சன் அடிகளார் பங்குத்தந்தையாக இருந்தபோது அரச அதிபரிடமிருந்து மேலும் ஒரு ஏக்கர் காணியைப் பெறுவதற்கான உறுதிமொழி கிடைத்தது. 2005 இல் அருட்தந்தை தே. ரவிராஜ் அடிகளாரின் காலத்தில் அதிகாரபூர்வமாக இக்காணி வழங்கப்பட்டதன் பின் 2006.03.10 அன்று புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
உள்நாட்டு, வெளிநாட்டு நிதியுதவிகளுடன் கட்டட வேலைகள் துரிதமாக முன்னெடுடக்கப்பட்டன. அருட்தந்தை ரவிராஜ் அடிகளாரும், கொழும்பு பெற்றா பகுதியின் வர்த்தகரான வின்சன்ற் ஐயாவும் இணைந்து அப்பகுதி வர்த்தகர்களிடம் உதவிபெற்று நிதியை சேகரித்தனர். இவ்வாறு ‘சிறுதுளி பெருவெள்ளமாக’ வளர்ந்த இவ்வாலயப் பணிகள் உள் நாட்டு யுத்தங்களால் மந்தப் போக்கிலேயே அமைந்தாலும் 2009 இறுதி யுத்தத்தின் போது கண்ணீரோடு புலம்பிய பல்லாயிரம் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து கண்ணீரைத் துடைத்த வரலாறு காலத்தால் மறக்கமுடியாததாகும். “எங்கள் தேசம் மீது இரங்குமையா….” என்ற பாடல் உயிர்ப்புப் பெற்ற ஆலயம் இதுவாகும். இன்றும் இப் பாடலை பாடும்போது தொலைத்த உறவுகளையும், நெஞ்சில் உறைந்த ஞாபகங்களையும் நினைந்து கண்ணீர் கசிந்துருகும் பக்தர்கள் பல்லாயிரம்.
மீண்டும் 2010 இல் மீள்குடியேற்றத்தின் பின் அருட்தந்தை எ. எட்வின் நாதன் அடிகளார் பரந்தன் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். பங்கின் எல்லா ஆலயங்களும், பங்குப் பணிமனைகளும் சிதைவடைந்த நிலையிலிருந்தன. இக்காலத்தில் பழைய ஓலைக் குடிசையினாலான ஆலயம் திருப்பலி நிறைவேற்றக்கூடியவாறு திருத்தியமைக்கப்பட்டு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. கட்டி முடிக்கப்படாத நிலையிலிருந்த ஆலயப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன. 2016 இல் அருட்பணி அ. அன்ரன் ஸ் ரீபன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற பின் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்று ஆலயப் பணிகள் நிறைவுபெற்றன. 23.04.2017 இல் இறை இரக்கத் திருவிழா அன்று பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் இவ்வாலயம் திறந்துவைக்கப்பட்டது.
யாழ் மறை மாவட்டத்தில் அமைந்துள்ள முதலாவது இறை இரக்க ஆலயம் என்ற பெருமை இவ்வாலயத்திற்குரியது என்பதுடன், இறுதிப் போரின் நினைவுச்சின்னமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கண்ணீர் துடைத்து அரவணைத்த ஆலயமாக இவ்வாலயம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது என்பதும் சிறப்பான விடயமாகும்.

Leave a Reply