கிளி மாநகரின் மத்தியில் A9 வீதியருகில் தன் கருணைக்கரங்களை விரித்து நிழல் பரப்பி எழுந்து நிற்கின்றது கருணா நிலையம். கருணா நிலையத்தின் இறை பிரசன்னமாய் கலையம்சம் நிறைந்த அழகுடன் திகழ்கிறது புனித பவுல் ஆலயம். இவ்வாலயம் கட்டப்படுவதற்கு முன்பே கருணாநிலையம் உருவாக்கப்பட்டது. வேல்ஸ் நகரில் பிறந்த செல்வி மியூரியல் வயலட் ஹட்சின்ஸ் என்ற பெண்மணியே கருணா நிலையத்தின் உருவாக்குநராவார்.
திருச்சபை தூதுப்பணி மன்றத்தின் நற்செய்தி அறிவிப்பாளராக 1927 இல் இவர் இலங்கைக்கு வந்தார். 1927 – 1954 வரை கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வியலை முன்னேற்றும் பெரு நோக்குடன் 1955 இல் 15 பெண்களுடன் இந் நிலையத்தினைக் கிளிநொச்சியில் ஆரம்பித்தார். “பாதிக்கப்பட்டோருக்கான இயல்பு வாழ்வை ஏற்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இக் கருணை இல்லத்தில், முன்பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான கல்விப் பணியாலும், சுயதொழிற் பயிற்சிகளாலும் அன்னையின் அரவணைப்பில் பயனடைந்தோர் ஏராளம்.
இந்நிலையத்தில் வளரும், பணியாற்றும் அனைவரும் வழிபடுவதற்கென புனித பவுல் ஆலயத்தை ஹட்சின் அம்மையார் அமைத்தார். இவ்வாலயத்தின் அமைப்பானது மேலைத்தேய கட்டடக்கலையம்சங்களைத் தவிர்த்து, கீழைத்தேய கலையம்சங்களையுடையதாக அமைக்கப்பட்டமை குறிப்பாக தமிழருக்கேயுரிய இந்து மத கலையம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். ஹட்சின்ஸ் அம்மையார் மேலைத்தேயத்தில் பிறந்தவராக இருந்தாலும், முற்றுமுழுதாக கீழைத்தேய கலாசார, பண்பாடுகளில் கொண்டிருந்த ஈடுபாட்டை இது உணர்த்துகின்றது.
இவ்வாலயத்தின் வழிபாட்டு முறை, பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் அனைத்தையும் கீழைத்தேய பண்பாட்டிற்குரியதாகவே அவர் அமைத்தார். இவ்வாலயமானது 1965 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது. 2011ம் ஆண்டு போர் தாக்குதல்களால் முற்றாக சேதமடைந்த கருணா நிலையத்தின் கட்டடங்கள் மீளப் புனரமைக்கப்பட்டு தற்போது வரை சமூகப் பணியுடனும் இறை பணியுடனும் பயணித்து வருகின்றது.

Leave a Reply