புனித அந்தோனியார் ஆலயம், நாவல்நகர்

கல்மடு நகரிலிருந்து திருமணமாகிய குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டத்தின் கீழ் நாவல் நகர் குடியேற்றம் உருவாகியது. அங்கிருந்து முதன்முதலில் மிக்கேல் என்பவரின் குடும்பத்தினர் இங்கு குடியேறினர். 1976 இல் அவரது மகனான றப்பியேல் என்பவர் காடாகக்கிடந்த அந்த இடத்தின் பாதுகாவலராக புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தை ஒரு மரக்குற்றியில் நிர்மாணித்தார். இவர்களது குடும்பப்பெயரான மிக்கேல் கிராமம் என ஆரம்பத்தில் இக்கிராமம் அழைக்கப்பட்டது.

1991 இல் அருட்தந்தை ஞானட்ணம் அடிகளாரின் காலத்தில் சிறிய கொட்டில் கோவில் அமைக்கப்பட்டு ஆயரின் அனுமதியுடன் வழிபாடுகள் இடம்பெறத் தொடங்கின.புனித அந்தோனியாரின் திருச்சொரூபம் இருந்த சிறிய இடம் தவிர மிகுதிக் காணியை றப்பியேல் அவர்கள் தனது மகளுக்கு வழங்கியிருந்தார். மேரிமலர் வின்சன் கிளமென்ற் என்பவர் அக்காணியை வாங்கி பின்பு அருட்தந்தை செபஸ்ரியன் அடிகளாரின் காலத்தில் ஆலயத்திற்கு விற்றார்.

1996 அருட்தந்தை செபஸ்ரியன் அடிகளாரின் காலத்தில் மாதமொரு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

அருட்தந்தை அந்தோனிமுத்து OMI அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது JRS நிறுவனத்தின் நிதியுதவியுடன் காட்டில் மரங்கள் வெட்டி கிடுகுக் கூரையும், மண் சுவரும் கொண்ட கோவில் அமைக்கப்பட்டது. பீடம் மாத்திரம் கற்களால் கட்டப்பட்டது.

பிற்பட்ட காலத்தில் கூரைத்ததகட்டினாலான கூரை போடப்பட்டது. 2019 இல் அருட்தந்தை பிறாயன் அடிகளாரின் காலத்தில் புதிய ஆலயத்திற்கான அத்திவாரமிடப்பட்டது. அவரைத்தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தை சுதர்சன் அடிகளார் மேலதிக பணிகளை முடித்ததன் பின் அருட்தந்தை சுலக்சன் அடிகளார் வர்ணம் பூசும் பணிகளை முடித்து 2023 இல் இவ்வாலயம் யாழ் ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்துவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *