கனகபுரம் கிராமத்தின் படித்த வாலிபர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காடுகளை வெட்டித் துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தற்காலிக கொட்டகை அமைத்துத் தங்கியிருந்தனர். இவர்கள் காட்டுமிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் இந்து சமய இளைஞர்கள் பிள்ளையார் சிலையையும் கத்தோலிக்க இளைஞர்கள் கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலரான புனித யூதா ததேயு புனிதருக்கென சிறிய கொட்டில் ஆலயத்தையும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர். காலப்போக்கில் இக்குடியேற்றக் கிராமம் ஆரம்பிக்கப்பட்டபின் கத்தோலிக்கஇளையோர்களான கிறிஸ்ரோபர், வோல்ரர் அம்புரூஸ், அஞ்சலோமரியதாஸ், பிலிப்பு இராசநாயகம், யோச் இம்மானுவேல், ஞானானந்தன், சவரிமுத்து, அன்ரன், மரியதாஸ், பற்றிக் குலநாயகம், வரப்பிரகாசம் ஆகியோர் காடுவெட்டி ஆலயத்திற்கென மூன்று ஏக்கர் காணியை ஒதுக்கினர்.
ஆரம்பத்தில் ஓலையால் வேயப்பட்ட கொட்டில் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன. புனித திரேசாள் பங்கின் துணை ஆலயமாக இருந்த இவ்வாலயத்தின் மூப்பராக அமரர் வஸ்தியாம்பிள்ளை அவர்கள் பணியாற்றினார்.
1993 இல் ஆலயக் கூரை ஓட்டினால் வேயப்பட்டது. 1996 இடப்பெயர்வினால் அழிவடைந்த ஆலயம் 2004 இல் மரியதாஸ் என்பவரின் மகளான யூலியற் என்பவரின் முயற்சியால் பலரின் பங்களிப்புடன் அழகான சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயம் மீண்டும் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தால் சேதமடைந்தது. மீண்டும் 2010 இல் மரியதாஸ் அஞ்சலோவின் மகளான கலிஸ்ரா சாமினி அவர்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டது.
உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை பங்கின் துணை ஆலயமாக மாற்றப்பட்ட இவ்வாலயத்தை அண்மிய பகுதிகளில் பாலர் பாடசாலைகள் எதுவும் இல்லாத நிலையில் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அடிகளாரின் காலத்தில் தந்தையாரின் முயற்சியால் இயேசுசபை நிறுவனத்தால் சிறிய யூதா முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் வேள்ட்விஷன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டது.
வஸ்தியாம்பிள்ளை என்பவரின் மருமகனான அமரர் சூசை இராசரத்தினம் அவர்களால் அழகிய முகப்புக் கோபுரம் அமைக்கப்பட்டது. திருப்பண்டக் காப்பறையை ஜெறோம் பிறாங்க் என்பவரின் குடும்பத்தினர் அமைத்துக் கொடுத்தனர். இப்பகுதியில் வாழும் இந்து மக்களும் புனிதரின் பரிந்துரையை நாடுவதுடன், உதவிகளையும் வழங்கிவருகின்றனர். வாரத்தின் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவதுடன், சித்திரை மாதத்தின் நடுப்பகுதியில் புனிதரின் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply