1983 ஆம் ஆண்டில் அருட்தந்தை பயஸ் அடிகளார் கிளிநொச்சிப்பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய வேளை 13 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதுடன் மாயவனூர் கிராமம் உருவாக்கப்பட்டது. இவர்களுள் 05 குடும்பங்கள் கத்தோலிக்க குடும்பங்களாக இருந்தனர். 1986 இல் இவர்கள் ஒன்றிணைந்து செபிப்பதற்காக காட்டினை வெட்டி கொட்டில் ஆலயம் ஒன்றை அமைத்து வழிபட ஆரம்பித்தனர். அப்போது உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளாரின் ஆலோசனைக்கமையகாடுகளை வெட்டி 10 ஏக்கர் காணி ஆலயத்திற்கென உருவாக்கப்பட்டது.
அவ்வாலயத்தில் ஒரு திருச்சொரூபம் வைக்கப்பட வேண்டும் எனும் வேண்டுகோளுக்கமைய ஜெயக்குமார் அடிகளார் கனடாவிலிருந்து கிடைக்கப்பெற்ற தூய வேளாங்கண்ணி அன்னையினுடைய திருச்சொரூபத்தினை இவ்வாலயத்தில் வைத்தார். திருச்சொரூபம் வைப்பதற்காக மண்ணால் தூண் அமைக்கப்பட்டு திருச்சொரூபம் வைக்கப்பட்டது. தமக்கு ஒரு ஆலயம் வேண்டும் எனும் கோரிக்கையை அப்போதைய ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகையிடம் மக்கள் முன்வைத்தனர். ஏற்கெனவே அங்கு மம்மில் குளம் என்ற குளம் காணப்பட்டது இதனால் மம்மில் குள மாதா என்னும் பெயர் சூட்டி அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
இக்காலத்தில் 65 வயது நிரம்பிய பார்வையற்ற மூதாட்டி ஒருவர் கையில் தடியுடனும், பேரப்பிள்ளைகளின் உதவியுடனும் ஆலயம் வருவார். வேளாங்கண்ணி அன்னையின் புதுமையால் அவர் பார்வை பெற்று கையில் தடியும் இல்லாமல் நடந்து சென்றதாக மக்கள் கூறுகின்றனர். இந்தப் புதுமையின் பின் பக்தர்கள் வெள்ளமென அன்னையைத் தரிசிக்க ஒன்றுதிரண்டனர்.
இதனால் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டும் எனும் மக்களின் வேண்டுகோளின்படி 1987 இல் முதல் திருப்பலியை அருட்பணி சூசைநாதன் அடிகளார் ஒப்புக்கொடுத்தார். இக்காலத்தில் 10 கத்தோலிக்க குடும்பங்கள் அக்கிராமத்தில் இருந்தனர்.
அருட்தந்தை ஞானரட்ணம் அடிகளாரின் காலத்தில் வட்டடக்கச்சி தனிப் பங்காக உருவாக்கப்பட்டதுடன், இவ்வாலயத்திற்கென ஐந்து ஏக்கர் காணியில் வேலி அமைக்கப்பட்டாலும் 03 ஏக்கர் காணிக்கே அரச பதிவு கிடைத்தது.
அருட்தந்தை செபஸ்தியன் அடிகளாரின் காலத்தில் ஓட்டுக் கூரையுடன் சீமேந்து அரைச்சுவர் வைத்து தற்போதைய ஆலயம் அமைத்து திறந்துவைக்கப்பட்டது.
2019 இல் நேசரி ஒன்று அமைக்கப்பட்டது. ஆயினும் நேசரி தற்போது நடைபெறவில்லை. அக்கட்டிடம் ஆலயத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
1985 இல் அருட்தந்தை சூசைநாதன் அடிகளாரால் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடன் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. ஆயினும் தண்ணீர் இன்மையால் அக்கிணறு மூடப்பட்டு, 2013 இல் அருட்தந்தை இருதயதாஸ் அடிகளாரால் புதிய கிணறு கட்டப்பட்டு நீர்த்தாங்கி நிர்மாணிக்கப்பட்டது.
2023 இல் அருட்தந்தை அஜித் சுலக்சன் அடிகளாரின் காலத்தில் அந்தோனிராசா என்பவரின் நிதியுதவியுடன் ஆலயத்திற்கருகில் குழாய் கிணறு அமைக்கப்பட்டு நீர்க்குழாய்யகள் பொருத்தப்பட்டது. ஆலயத்திற்கான மணியை பக்தர் ஒருவர் வழங்கினார். தற்போது இயேசுபாதம் என்பவர் ஆலய பராமரிப்பாளராகப் பணிபுரிகின்றார். தற்போதும் பக்தர்கள் வியாழக்கிழமைகளில் அன்னையிடம் நேர்த்தி வைத்து தமது வேண்டுதல்களை சமர்ப்பிக்க ஆலயத்திற்கு வருகின்றமையைக் காணமுடிகின்றது.

Leave a Reply