தூய அமைதியின் அரசி ஆலயம், செல்வாநகர்

இறைமகனின் தாயான தூய கன்னிமரியாள் விண்ணக மண்ணக அரசி என 11.10.1956 இல் திருத்தந்தை 12ம் பத்திநாதர் பிரகடனப்படுத்தினார். அக்காலத்தில் இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யுத்தம் நிறைவுற்றபோது பலகோடி மக்கள் கொல்லப்பட்டனர். அக்காலத்திலேயே மரியா அமைதியின் அரசி எனும் எண்ணக்கரு தோற்றம்பெற்றது. விண்ணக மண்ணக அரசரான கிறிஸ்துவிடம் எமக்காகப் பரிந்துபேசும் அரசியாகிய தூய கன்னிமரியாவின் பரிந்துரை யுத்த மேகங்களால் சூழப்பட்டு குண்டுமழையிலும், குருதி வெள்ளத்திலும் மிதக்கும் எமது நாட்டிற்கும் தேவை எனும் சிந்தனை அருட்தந்தை சரத்ஜீவன் அடிகளாரின் எண்ணத்தில் உதித்தது.

இதற்கமைய 2007 ஆம் ஆண்டில் ஆலயம் அமைப்பதற்கென செல்வாநகர் பகுதியில் வசித்த திரு லக்ஸ்மன் எனும் இந்துமத சகோதரரிடம் 100,000.00 ரூபாவிற்கு காணி கொள்வனவு செய்யப்பட்டது. 12.04.2008 இல் அருட்தந்தை கருணாரட்ணம் (கிளி)அடிகளார் அமைதியின் அரசி திருச்சொரூபத்தை அன்பளிப்பாக வழ ங்கினார். 06.08.2008 இல் யாழ் ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையின் அனுமதியுடன் கிராம அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் கரித்தாஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தகரத்தினாலான கூரையுடன் மண்ணாலான சிறிய ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. திரு ஆரோக்கியநாதர் மூத்த மறையாசிரியர் ஆலயத்திற்கான மணியை அன்பளிப்பாக வழங்கினார்.

2008 இல் உள்நாட்டு யுத்தத்தால் மக்கள் இடம்பெயர்ந்தபோது ஆலயப்பொருட்களை திரு சந்தியாப்பிள்ளை மகேந்திரன் என்பவர் கொண்டுசென்று முரசுமோட்டை தூய சதாசகாய அன்னை ஆலய வளவில் புதைத்து வைத்தார்.

யுத்தம் முடிவடைந்து மீள்குடியேறியபோது ஆலயத்தைப் புதிதாக அமைக்கவேண்டியிருந்தது. ஜெயந்திநகரில் வசித்த நாகம்மா ஆசிரியருக்குச் சொந்தமான தியேட்டடரிலிருந்து கழற்றப்பட்ட கப்புகளை ஊண்றி மீளவும் ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. போரின்போது புதைத்து வைத்த அன்னையின் திருச்சொரூபம் சிறு சேதமுமின்றி மீளப்பெறப்பட்டது. தண்டவாளங்கள் இரண்டில் ஆலய மணி நிறுத்தப்பட்டது.

2011 இல் யோசேப்வாசின் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது 27.08.2019 இல் புதிய ஆலயத்திற்கான அத்திவாரமிடப்பட்டு கட்டிடப்பணிகள் ஆரம்பமாகின. சில்லாலை கதிரைமாதா வன்னி குழுமத்தினரால் ஆலயத்திற்கான மணியும் தம்பங்களும், அன்னை மரியாள் மற்றும் இயேசுவிற்கான திரு முடிகளும் வழங்கப்பட்டன. திரு சந்தியாப்பிள்ளை என்பவரின் புதல்வர்களான
மகேந்திரம், அருட்பிரகாசம் என்பவர்கள் புதிய மணிக்கோபுரத்தை அமைத்தனர். திரு மகேந்திரன் அவர்கள் முன் மதிலை அமைத்தார்.

அருட்தந்தை யூட் அமலதாஸ் அடிகளாரின் அன்பளிப்பில் ஆலய முன்மதிலில் திருச்சொரூபம் ஒன்று நிறுவப்பட்டது. B.L.I ஆனந்தராஜா என்பவரின் நிதியுதவியில் அருட்தந்தை யூட் அமலதாஸ் அடிகளாரால் இவ்வாலயத்தின் ஸ்தாபகரும் இறுதி யுத்தத்தில் மக்களுக்காய் இறைபணியாற்றி உயிர்துறந்த அருட்தந்தை சரத்ஜீவன் அடிகளாரின் நினைவுத்தூபி ஆலய முன்றலில் நிறுவப்பட்டது.

திரு ஆரோக்கியநாதர் அவர்கள் அன்னைக்கான பிரார்த்தனையை எழுதினார். இன்றும் இந்தப் பிரார்த்தனையே ஆலயத்தில் வாசிக்கப்படுகின்றது.

வருடம்தோறும் 23 ம் திகதி ஆவணி மாதத்தில் அன்னையின் திருவிழா இவ்வாலயத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *