
தொன்மையோடு தண்மைகொண்டு கொழிக்கும் பூநகரி மண்ணில் வலைப்பாடு எனும் கிராமத்தில் பிறந்த இவர் ஆரம்பத்தில் நடனக்கலையில் ஆர்வம் கொண்டு தன்னால் இயன்றளவு கற்று அவற்றை மாணவர்களுக்கும் புகுத்தி பல நடனங்களை மேடையேற்றியுள்ளார். சமூகத்தோடு ஒட்டியதான பல நாடகங்களை தானே எழுதி,நெறிப்படுத்தி அவற்றை அரங்கேற்றியுள்ளார். அவற்றுள் பள்ளிப்பருவம்,விடைகொடதாயே, இளமைப்பருவம் போன்றவற்றைக்குறிப்பிடலாம். இவை தவிர இவர் ஒரு கிறிஸ்தவக் கலைஞராக விளங்குவதால் விவிலியத்தை மையமாகக் கொண்டு பல நாடகங்கள் நாட்டுக் கூத்துக்களைப் படைத்துள்ளார்.
ஏரோது நாட்டுக்கூத்து, சாலமோன சரிதை, விதைப்பவன் உவமை, சக்கேயு சரிதை, நல்ல சமாரியன் போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.
தனது ஆற்றல் தன்னுடன் மங்கிவிடக்கூடாது என எண்ணி தனக்கு பின்னரும் சந்ததியினையும் ஊக்கப்படுத்தி யாழ் மறை மாவட்டப்போட்டிகளில் பங்கு பற்றச் செய்த பெருமை இவரையே சாரும். சினிமா மெட்டுக்களுக்கு வரியமைத்துப்பாடுதல் குறிப்பாக கிறிஸ்மஸ் காலங்களில் கரோல் பாடல்களை இயற்றுதல், சகல போட்டிகளுக்கும் மாணவர்களை பக்தி சபை அங்கத்தவர்களை பங்கு பற்றச் செய்தல் எனப் பல சமூகப் பணிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
இலக்கியத்துறைக்க இவர் வழங்கிய இத்தகைய சேவைகளைப் பாராட்டி பல்துறை ஆளுமை கொண்ட இவருக்கு 2023ம் ஆண்டில் பூநகரி பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் கலைநகரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இத்தகைய கலைத்திறனும் பல்துறைஆற்றலும் கொண்ட இக் கலைஞனின் கலைச்சேவையினை பாராட்டி மாவட்ட கலாசாரப்பேரவையினால் 2024 ம் ஆண்டில் கலைக்கிளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply