செல்லப்பா குழந்தைவேல்


இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தில் வேரவில் கிராமத்தில் செல்லப்பா தெய்வானை தம்பதியினருக்கு 1951.01.23 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் குழந்தைவேல் என்னும் நாமம் சூட்டினார்கள்.


இவரது தந்தையார் நாட்டுக்கூத்துக்களை நடித்துள்ளார். ஆரம்பத்தில் 13 வயதில் பாடசாலை நிகழ்வுகளில் நாடகங்களை நடிக்க ஆரம்பித்தார். இவர் கந்தையா சிவலிங்கம் எனும் அண்ணாவியாரிடமும், வேலன் ஆகியோரிடம் இக்கலையைப் பயின்றார். “ஐயோ ராசாவே” என்ற நகைச்சுவை நாடகத்தில் அரசனாக நடித்துள்ளார். அத்துடன் ‘திருவள்ளுவர்”, “வெளிநாட்டு மாப்பிள்ளை” “தேர்தல் முடிவுகள்”, “சத்தியவான் சாவித்திரி”, “காத்தவராயன் கூத்து உட்பட 34 இற்கும் மேற்பட்ட நாடகங்களையும் நடித்துள்ளார். பெண் பாததிரங்களிலேயே அதிகம் நடித்துள்ளார். அத்துடன் அரச நாடகங்களில் அரசனாக நடித்துள்ளார். 1974 ஆம் ஆண்டில் திருமணம் முடித்தார்.

பூநகரி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் முகாமையாளராக 10 வருடங்கள் கடமையாற்றினார். கிராம அபிவிருத்திச் சங்கத்தில் 1980ஆம் ஆண்டு முதல் 2013 வரை தலைவராகவும், கமக்காரர் அமைப்பில் 1990ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தலைவராகவும், சனசமூக நிலையத்தில்1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை தலைவராகவும், உற்பத்தியாளர் சங்கம், கிராமிய போதை ஒழிப்புக்குழு தலைவராகவும், சிறுவர் பாதுகாப்புக் குழுத் தலைவராகவும், சிக்கனக் கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், காணி அபகரிக்கப்பட்டோர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் உறுப்பினராகவும், பெரியசிவன் ஆலயம், ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களின் தலைவராகவும், வெள்ளைப் பள்ளத்துப் பிள்ளையார் ஆலயத்தின் செயலாளராகவும் இருக்கின்றார்.


உலக சைவ சபையினால் ‘சமூகச்செல்வன” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை கலாச்சார அலுவல்கள் திணக்களத்தினால் ‘கலைஞர் சுவதம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் பூநகரி பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட கலைநகரி விருது பெற்றுள்ளார். தொடர்ந்து இக் கலைஞன் தனது கலைச்சேவையினை தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *