புனித யூதாததேயு ஆலயம், கல்லடி, பூநகரி

Posted on

by

kalladi_

கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலர் பிரிவில், கல்முனை எனும் கிராமத்தில் புனித யூதா ததேயு ஆலயம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் பயணம் செய்யும் பகுதிகளில் தமது பாதுகாப்பின் காவல் தெய்வங்களாக பல ஆலயங்களை அமைத்துள்ளனர். அவ்வாறு 1974 ஆம் ஆண்டு பாஷையூரைச்சேர்ந்த திரு இராயப்பு சூசைப்பிள்ளை என்பவரால் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து 75 யார்தொலைவில் புனித யூதாததேயுவானவருக்கென ஒரு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் திரு இராயப்பு சூசைப்பிள்ளையவர்கள் ஸ்ராலிங் கோஸ்ரியினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க திரு ஆசைத்துரை றூபன் என்பவரின் வழிநடத்துதலில், அன்றைய பாஷையூர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை குலாஸ் அடிகளாரின் தலைமையில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடம் ஆலயத்திற்கு மிகப்பொருத்தமானது என தெரிவுசெய்யப்பட்டு, 1976 இல் பாஷையூர் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை மகேந்திரன் அடிகளாரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்வாலயத்தைக் கட்டுவதற்காக கல்முனை, ஒருகரை, பள்ளிக்குடா, இரணைதீவு, வெடியன்பிட்டி, கெழுத்துப்பிட்டி, ஆகிய இடங்களில் தொழில்செய்துவந்த தொழிலாளர்கள் தமது ஒரு நாள் வருமானத்தை வழங்கியதுடன் பாஷையூர் பங்கு மக்களும் கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இவ்வாறான உதவிகளுடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று 1978. 01.28 அன்று அருட்தந்தை மகேந்திரன் அடிகளாரால் ஆலயம் திறந்துவைக்கப்பட்டதுடன், திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. புதிய நிர்வாகம் ஒன்று அருட்தந்தையால் தெரிவுசெய்யப்பட்டதுடன், ஆலயம் பதிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத் திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது.

காலப்போக்கில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்களின்போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருந்தமையால் ஆலயத்திற்கு செல்வது தடைப்பட்டது. இறுதி யுத்தத்தின்போது இவ்வாலயம் தரைமட்டமாக்கப்பட்டது.

மீள்குடியேற்றத்தின் பின் இப்பகுதிகளுக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டதுடன் 2011 ஆம் ஆண்டில் இவ்வாலயம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு பூநகரிப் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை பிறாயன் அடிகளாரால் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இவ்வாலயம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் பாஷையூர் பங்கு மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாகாண சபை உறுப்பினரான இம்மனுவேல் ஆர்னல்ட் ஆலய உட்புறத்திற்கான சீற் பொருத்துவதற்கான நிதியினை வழங்கினார்.

இவ்வாலயத் திருவிழா தை மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *