
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் மண்டைக்கல்லாறு எனுமிடத்தில் 1800 களில் சீனர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இதுவாகும்.
சீனர்கள் கடல்மார்க்கமாகப் பயணித்தபோது கடலில் ஏற்பட்ட புயலினால் திசைமாறி மண்டைக்கல்லாறில் கரையொதுங்கினர். இவ்வாறு பூநகரிப் பிரதேசத்தை அடைந்த சீனர்கள் புயல் ஓயும்வரை அங்கு தங்கியிருந்து மீண்டும் தமது பயணத்தை ஆரம்பித்த வேளை அப்பிரதேசத்தில் கடலட்டைகள் அதிகமாக இருப்பதைக்கண்டு அட்டைகுளித்து அவற்றை அவித்து உணவாக்கியதுடன் தமது தேசத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இவ்வாறு அட்டைகுளிக்கும்போது கடலிலிருந்து ஒரு அந்தோனியார் திருச்சொரூபம் அவர்களுக்குக் கிடைத்தது. அதனை வைத்து சீனர்களின் கட்டிடப்பாணியில் உருவாக்கப்பட்டதே இவ்வாலயமாகும்.
ஆரம்பத்தில் சிறிய கொட்டில் வடிவில் இவ் ஆலயத்தை சீனர்கள் அமைத்தனர். நாளடைவில் சிறிய ஆலயமாகக் கட்டியெழுப்பினர். அக்காலத்தில் பாஷையூரைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் தொழில்நிமித்தம் அவ்விடத்திற்குச் சென்றபோது சீனர்களுக்கும் இவர்களுக்குமான நட்பு ஏற்பட்டது. இவ்வாறு அங்கு சென்ற திரு செல்லையா என்பவரிடம் அவ்வாலயத்தைப் பராமரிக்கும் பொறுப்பினை சீனர்கள் ஒப்படைத்துச் சென்றனர். சீனர்கள் அவ்வாலயத்தை அன்பளிப்பாக வழங்கியமைக்கான எழுத்தாவணம் தற்போதும் அவ்வாலயத்தைப் பராமரித்துவரும் திரு செல்லையா என்பவரின் வழித்தோன்றல்களினால் பாதுகாக்கப்படுகின்றது.
அவ் ஆவணத்தின்படி சீனாவைச்சேர்ந்த ஷாங்ஹாங் மற்றும் ஷாயு அஹெய்ஸ் என்பவர்கள் திரு செல்லையாவிடம் இவ்வாலயத்தை உத்தியோகபூர்வமாக அன்பளிப்பாக வழங்கியுள்ளனர் என்பதை அறியமுடிகின்றது.
திரு செல்லையாவிற்குப் பின் அவரது மகனான திரு மடுத்தீன் ஆசைத்துரை என்பவரால் பராமரிக்கப்பட்டது. தற்பொழுது அவரின் மகனான திரு ரஜீவ் என்பவரால் அவ்வாலயம் பராமரிக்கப்படுகின்றது.
சீனர்களின் கட்டிடப் பாணியில் சீனர்களால் அமைக்கப்பட்ட பீடம் தற்போதும் அங்கு காணப்படுகிறது. பூநகரியிலிருந்து சுனாமி குடியிருப்பு ஊடாகச் செல்கின்றபோது, நீரோடையொன்று இவ்வாலயத்திற்கு செல்லும் வழியில் ஊடறுத்துச் செல்கின்றது. அதனைக் கடந்து செல்வதற்காக பாஷையூரவர்கள் பாலம் ஒன்றினை அமைத்துள்ளனர். யாத்திரிகர்கள் பக்தியுடன் வழிபாடுகளை நடாத்துவதற்காக போட்டிகோ மண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளனர்.
சுற்றிலும் கடலலைகள் ஆர்ப்பரிக்க கடல்நடுவே அருள் சொரியும் அந்தோனியாரின் வாசஸ்தலமாக, தொன்மையான இவ்வாலயம் அமைந்துள்ளது. பாஷையூர், மன்னார், இலுப்பைக்கடவை, நாச்சிக்குடா, பூநகரி, வலைப்பாடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த இறைமக்கள் ஆலயத் திருவிழாவில் பங்கெடுக்கின்றனர். மாசிப் பௌர்ணமியில் அவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பெண்கள் கூடி புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தை அழகிய கூட்டில் வைத்து உலாவருவார்கள்.
தற்போது பூனகரிப் பங்கின் துணை ஆலயமாக, பாஷையூரவர்களால் இவ்வாலயம் பராமரிக்கப்படுகின்றது.
தகவல்:- செம்மண் வார மலர்
14 – 20 கார்த்திகை 2020
திரு ரஜீவ், பாஷையூர்

Leave a Reply