புனித இராயப்பர் ஆலயம், புலோப்பளை, பளை

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில், புலோப்பளை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

1621 இல் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டதன் பின் யாழ்ப்பாணத்தோடு வன்னிப் பரப்பின் பல பிரதேசங்கள் போர்த்துக்கேயர் வசமாகியது. இக்காலத்தில் பிரான்சிஸ்கன் சபைக் குருக்கள் யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து கால்நடையாக வந்து மறைபரப்புப் பணிகளை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது.

யாழ் ஆதீனத்தின் கீழ் இருந்த பளை, புலோப்பளை, இயக்கச்சி ஆகிய பகுதிகளில் மறைபரப்புப் பணிகளை பிரான்சிஸ்கன் சபைக் குருக்கள் மேற்கொண்டனர். 1635 களில் யாழ்ப்பாண ஆயராக பணியாற்றிய பிரான்சிஸ்கோ டீ மெலோ என்பவரின் அறிக்கையின்படி வன்னியில் 2000 இற்கும் மேற்பட்ட மக்கள் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். இவ்வாறு கத்தோலிக்கர்களாக மாறி புலோப்பளையில் வாழ்ந்த கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக 1627 இல் புலோப்பளையில் புனித இராயப்பர் ஆலயம் அமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட ஆலயங்கள் பெரும்பாலும் கொட்டில் ஆலயங்களாகவே அமைக்கப்பட்டன. ஆயினும் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் இவ்வாலயங்கள் அழிக்கப்பட்டன. மக்கள் மறைவாக வாழ்ந்தனர். 47 ஆண்டுகள் குருக்கள் எவரும் இல்லாமலும், அருட்சாதனங்கள் வழங்கப்படாமலும் இம் மக்கள் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொண்டனர். 1705 இல் ஒறிற்றோரியன் சபைக் குருக்கள் வரும்வரை இந்நிலை நீடித்தது. நாட்டார் எனக் கூறப்படுவோர் இம் மக்களின் விசுவாச வாழ்வைக் காத்தனர் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

புலோப்பளையில் சவரிமுத்து நாட்டார் மக்களின் விசுவாசத்தைக் காத்து வந்துள்ளார். அம்மக்கள் புனித இராயப்பரின் படம் ஒன்றை ஓலைப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தனர். ஒல்லாந்துப் படைகள் வரும்போது அதனை மண்ணில் புதைத்து வைத்துப் பாதுகாத்தனர். அருட்தந்தை கொன்சால்வெஸ் அடிகளார் 03 நாட்கள் அங்கே தங்கி 200 பேருக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை வழங்கியதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது.

1796 இல் பிரித்தானியரின் ஆட்சியில் தான் பகிரங்கமாக திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
1705 – 1708 வரை பெட்ரோ எனும் குரு புலோப்பளையில் இரகசியமாக மாறுவேடத்தில் வந்து திருப்பலிகளை நிறைவேற்றினார். யாக்கோமே கொன்சால்வெஸ் அடிகளாரின் “ஞானப்புகழ்ச்சி” எனும் புத்தகம் பளை மக்களிடையே பாவனையில் உள்ளது. வீரமாமுனிவர் புலோப்பளையில் தங்கியதாக வாய்மொழி வரலாறுகளில் கூறப்படுகின்றது.

அன்ரோனியோ எனும் ஒரிற்றோரியன் சபை குருவானவர் 1808 இல் புலோப்பளையில் திருப்பலி ஒப்புக்கொடுத்துள்ளார்.
1854 – 1870 வரை பளையில் பணியாற்றிய ஜோன் பிரான்சிஸ் OMI அடிகளார் காலத்தில் புலோப்பளை புனித இராயப்பர் ஆலயம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலத்திலேயே பச்சிலைப்பள்ளியில் பங்குகள் உருவாக்கப்பட்டன. 1895 – 1920 காலப்பகுதியில் பணியாற்றிய அருட்தந்தை J.B மேரி OMI அடிகளார் காலத்தில் இராயப்பர் ஆலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்வாறு 1870 இல் கொட்டகை ஆலயமாக அமைக்கப்பட்ட இவ்வாலயம் 1890களில் கல்லாலான ஆலயமாக கட்டப்பட்டது.

1992 இல் உள்நாட்டு யுத்தம் காரணமாக வலிகாமம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இங்கு குடியேறிய போது இவ்வாலயம் பகலில் பாடசாலையாகவும், இரவுகளில் புகலிடமாகவும் அமைந்தது. 2004 இல் சுனாமி ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களின் புகலிடமாக மாறியது.

2006 இல் இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். 2010 இல் மீள்குடியேறிய போது ஆலயம் எந்த சேதங்களுமின்றி காட்சியளித்தது. அப்போதைய மிருசுவில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளாரின் ஆலோசனைப்படி பங்குப் பணிமனை திருத்தப்பட்டது. அவரே பங்குத்தந்தையாகவும் பணியாற்றினார்.

அதன் பின்னர் அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அடிகளார் பணியாற்றினார். அவரைத்தொடர்ந்து அருட்தந்தை ஜஸ்ரின் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் புலோப்பளைப் பங்கின் முதல் குருவாக அருட்தந்தை டினேஸ் அடிகளார் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அவரது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுப்பதற்காக பங்குத்தந்தையினதும், புலம்பெயர் உறவுகளினதும் நிதி உதவியுடன் கைக்கோவில் புதிதாகக் கட்டப்பட்டது. 03.06.2015 இல் அருட்தந்தை டினேஸ் அடிகளாரால் முதல் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புலோப்பளைப் பங்கின் இரண்டாவது குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை நரேஸ் எட்வின் அடிகளாரின் முதல் திருப்பலியும் 26.07.2020 இல் இவ்வாலயத்தில் நிறைவேற்றப்பட்டது. 03 அருட்சகோதரிகளும், 02 அருட்தந்தையர்களும் உருவாக்கம் பெறுமளவு விசுவாசம் கொண்ட மக்கள் குழுமமாக புலேப்பளை புனித இராயப்பர் ஆலய இறைமக்கள் திகழ்ந்தனர்.

2024 இல் அருட்தந்தை ஜோர்ஜ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற காலத்தில் பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய முகப்பு, கைக்கோவில் கட்டும் பணிகளும் ஏனைய புனரமைப்புப் பணிகளும் செவ்வனே நடைபெற்றன. இவ்வாலயம் 28.07.2025 இல் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்துவைக்கப்பட்டது.

125 குடும்பங்களைக் கொண்ட இவ்வாலயத் திருவிழா வருடந்தோறும் ஆனி மாதம் 29ம் திகதி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தகவல்:- 1) “Temporal and spiritual conquest of ceylon”
2) Bishop Joulain, Fr S.G. Perers ஆகியோரின் ஆவணங்கள்
3) ‘The Mission of Wanni’, The Oratorians in Ceylon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *