
1990 களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் பூநகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய போது இவ்வாலயம் அமைக்கப்பட்டது. வாடியடி. புனித அடைக்கல அன்னை ஆலயத்தைச் சேர்ந்த, தம்பிராயில் வசித்த 15 குடும்பங்களுக்காக திருவாளர் செபஸ்தியாம் பிள்ளை என்பவருடைய 1 1/2 பரப்பு விசாலமான சிறு காணியில் அங்கிருந்த மக்களின் பண உதவியோடும் பங்குத்தந்தை மற்றும் ஆயரின் உதவியோடும் தம்பிராயிலுள்ள (கிறிஸ்து உலக இரட்சகர் ஆலயம் அமைந்திருக்கிற இடத்தில்,) கிறிஸ்து அரசர் ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இடம்பெற்ற போரின் காரணமாக ஸ்ரீலங்கா ராணுவத்தின் விமான மற்றும் ஷெல்வீச்சு தாக்குதலினால் ஆலயம் மோசமாக சேதத்துக்குள்ளானது.
பின்னர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் 2005 இல் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலப்பகுதியில் இலங்கை அரசின் புனர்வாழ்வு அமைச்சிடமிருந்து கிடைத்த பணத்தில் அந்த ஆலயத்தை புனரமைத்து கட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது காணி போதாமையால் தற்போது கிறிஸ்து அரசர் ஆலயம் அமைந்திருக்கின்ற காவாக்குளம், தம்பிராய் பகுதியில் முன்னை நாள், ஆயர் அருட்கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையின் நிதியுதவியோடு 01 ஏக்கர் காணியை, ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்து அருட்தந்தையவர்கள் புதிய கிறிஸ்து அரசர் ஆலயத்தைக் கட்டுவித்தார்.
கிறிஸ்து அரசர் ஆலயத்திற்கென அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியோடு, ஆயர் மற்றும் மக்ககளின் பங்களிப்புடன் இவ்வாலயம் கட்டப்பட்டது.
பின்னர் ஒரே பெயரோடு ஒரே கிராமத்தில் இரண்டு ஆலயங்கள் அண்மையில் அமைந்திருந்த காரணத்தினால், கிறிஸ்து அரசர் ஆலயமாக அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயம், கிறிஸ்து உலக இரட்சகர் ஆலயமாக 2019 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்டிணம் அடிகளாரின் ஆலோசனைக்கு அமைவாக , அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி அருள் தாசன் மற்றும் பங்கு மக்கள் ஆகியோரின் உடன்பாட்டுடன் முன்னைய கிறிஸ்து அரசர் ஆலயமானது, கிறிஸ்து உலக இரட்சகர் ஆலயம் எனபெயர் மாற்றம் செய்யப்பட்டு 20 குடும்பங்களைச் சேர்ந்த இறை மக்களோடு இயங்கிவருகிறது.
வருடம்தோறும் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகின்ற கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தம் பெருவிழாவோடு இவ்வாலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தகவல் :- அருட்தந்தை J. A. அருள்தாசன், முன்னைநாள் பங்குத்தந்தை, பூநகரி

Leave a Reply