புனித மரியாள் ஆலயம், புலோப்பளை, பச்சிலைப்பள்ளி

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள புலோப்பளை மேற்கு கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. “தூய சிந்தாத்திரை” அன்னையின் பெயரால் கட்டப்பட்டுள்ள இவ்வாலயமானது பதிவுச் சான்றிதழில் புனித மரியாள் ஆலயம் என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிந்தாத்திரை அன்னை கடலோடிகளின் பாதுகாவலியாக கத்தோலிக்க திரு அவையால் போற்றப்படுகிறாள். 1534 இல் வங்கக்கடலின் கிழக்குக் கரையோரத்தில் போர்த்துக்கேய வாணிபர்கள் பயணம் செய்தபோது கடலில் ஏற்பட்ட அனர்த்தத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்த அன்னைக்கு புனித சிந்தாத்திரை அன்னை என்ற பெயர் சூட்டப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அறிய முடிகின்றது. அந்த வகையில் சிந்தாத்திரை அன்னை எனும் நாமம் சூடிய இவ் அன்னையின் ஆலயம் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஆலயம் என்பதற்கு இப் பெயரே முதன்மையான காரணமாக அமைகின்றது.

சில வரலாற்றுத் தகவல்களின்படி 1620 – 1630 காலப்பகுதியில் போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அக்காலத்தில் கட்டப்பட்ட கிணறு இன்றும் புனரமைக்கப்பட்டு பாவனையில் உள்ளது. அருட்தந்தை S.G.Perera எழுதிய “The Oratorians in Ceylon” எனும் நூலில் ‘The Mission of wanni’ என்ற பகுதியிலுள்ள குறிப்பின் படி 1621 இல் போர்த்துக்கேயர் ஆட்சியின்போது பளையில் அமைக்கப்பட்ட ஆலயம் இவ்வாலயமாக இருக்கலாம். இவை கொட்டில் ஆலயங்களாகவே அமைக்கப்பட்டன.

ஆயினும் ஒல்லாந்தர் காலத்தில் ஆலயங்கள் அழிக்கப்பட்டு, கத்தோலிக்கர்கள் துன்புறுத்தப்பட்டனர். குருக்கள் நாடுகடத்தப்பட்டனர். இக்காலத்தில் ஞானப்பிரகாசம் எனும் நாட்டார் இரகசியமாக கத்தோலிக்க மக்களைக் கூட்டி போர்த்துக்கேய மறைபரப்பாளர்கள் கற்றுத்தந்த செபங்களை ஏனையவர்களுக்கும் கற்றுக்கொடுத்ததுடன், பிறந்த குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். மரணத்தறுவாயில் இருப்போருக்காக செபித்தார். என அருட்தந்தை பெரேரா அடிகளார் தமது நூலில் பதிவுசெய்துள்ளார்.

மரியான் என்ற 80 வயதுடைய முதியவர் ஒருவர் போர்த்துக்கேயர் காலத்தில் பயன்படுத்திய சிலுவை ஒன்றை கவனமாக பாதுகாத்து வந்தார். 1711 இல் மறைபணிக்காக பளை வந்த கொன்சால்வெஸ் அடிகளார் அச்சிலுவையைக் கண்டு முத்தமிட்டதுடன் கண்ணீர் விட்டு அழுதார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் விளைவித்த துன்பங்களின் மத்தியிலும் இறை நம்பிக்கையைக் காத்த ஒரு சமூகம் பளை கத்தோலிக்கரிடையே இருந்தமை இயேசுவின் மேல் அவர்கள் கொண்டிருந்த பேரன்பின் வெளிப்பாடாகும்.

50 ஆண்டுகளாக அருட்சாதனங்களைப் பெறாத இறை மக்களுக்கு கொன்சால்வெஸ் அடிகளார் அருட்சாதனங்களை வழங்கி, திருப்பலியும் நிறைவேற்றினார். பளையில் வசித்த ஞானப்பிரகாசம் நாட்டார் இரகசியமாக கோவாவுக்குக் கடிதம் அனுப்பி ஒரு குருவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்கவே புனித ஜோசேப்வாஸ் அடிகளார் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பெரேரா அடிகளார் பதிவு செய்துள்ளார்.

1808 பங்குனி 25 இல் வனவாச மாதா திருநாள் அன்று பளையில் பகிரங்கமாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதன் பின்பே கற்களாலான ஆலயங்கள் கட்டப்பட்டன.

புதிய ஆலயம் 1852 இல் அருட்தந்தை Luis de Sylva அடிகளாரால் அத்திவாரமிடப்பட்டு, 1860 இல் அருட்தந்தை Francis அடிகளார் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட பழைய ஆலயத்திற்கு அருகில் இவ்வாலயம் கட்டப்பட்டது. அருட்தந்தை Francis அடிகளார் அமெரிக்க பயனாளிகளிடமிருந்து தானே நிதி சேகரித்து ஆலயப் பணிகளை நிறைவுசெய்தார்.அக்காலத்தில் இங்கு 30 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்ததாக “XXV Year’s Catholic Progress” எனும் நூலில் அருட்தந்தை S. ஞானப்பிரகாசர் அ.ம.தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1910 காலப்பகுதியில் பளை தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை ஸ்பம்பதி அடிகளார், அருட்தந்தை லெபோன் அடிகளார் ஆகியோர் காலத்தில் இலத்தீன் மொழியில் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. 2010 இல் இறுதி யுத்தம் நிறைவுற்ற பின் ஆலயம் புனரமைக்கப்பட்டது. 2023 இல் மருதமடு அன்னையின் வருகையின் போது இவ்வாலயத்திலேயே அன்னையின் திருச்சொரூபம் வைக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் ஆராதனை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

புலோப்பளை புனித இராயப்பர் பங்கின் துணை ஆலயமாக இயங்கிவரும் இவ்வாலயம் நூற்றிற்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்டுள்ளது. தற்போது அருட்தந்தை அன்ரன் ஜோர்ஜ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வருகின்றார். புனித கன்னிமரியன்னையின் பிறப்புப் பெருவிழாவான புரட்டாதி மாதம் 08 ம் திகதியன்று இவ்வாலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

தகவல்:- “XXV Years’ Catholic Progress”, The Dioces of Jaffna Under the episcorate of Dr. Henry Joulain OMI, 1893 – 1918, Eev.Fr.S. Gnana Prakasar OMI.

“The Oratorians in Ceylon”
Anushtikan, University of Jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *