1984 இல் ஊற்றுப்புலம் கிராமம் உருவாக்கப்பட்டது. இங்கு கத்தோல.லிக்க குடும்பங்கள் வசித்தாலும் அவர்களுக்கென ஒரு ஆலயம் இருக்கவில்லை. உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் 1998 இல் மீள்குடியேறிய காலத்தில் இங்கு வசித்த அருட்தந்தை ரெஜினோல்ட் OMI அடிகளாரின் தந்தையாரான ஆசீர்வாதம் சவரிப்பிள்ளை ஐயாவின் அயரா முயற்சியினால் அன்றைய குருமுதல்வர் அருட்தந்தை தேவசகாயம் அடிகளாரின் உதவியுடன் ஆலயம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் கிராம முன்னேற்றசங்கத்தினரின் உதவியுடன் காணி பெறப்பட்டு அருட்தந்தையர்களான மதுரநாயகம், கருணாரட்ணம், ஆனந்தகுமார், பீற்றர், யூட் அமலதாஸ், லொஜிங்ரன், ரெஜினோல்ட் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடனும், அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடனும் கிடுகினால் கூரை வேயப்பட்ட மண் கற்களாலான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு 28.12.2000 அன்று குருமுதல்வரால் திறந்துவைக்கப்பட்டது.
சவரிப்பிள்ளை ஐயாவின் ஆலோசனையின் அடிப்படையில் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை பீற்றர் அடிகளிரின் உதவியுடன் 2006 இல் முன்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. 26.01.2007 இல் முன்பள்ளிக்கான புதிய கட்டிடம் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. சவரிப்பிள்ளை ஐயாவின் மகளின் நிதியுதவியுடன் பழைய ஓலைக்கூரைக்குப் பதிலாக கூரைத்தகட்டினாலான கூரை அமைக்கப்பட்டது. வி. அமல்ராஜ் அவர்கள் ஆலயத்திற்கான மணியினை அன்பளிப்பாக வழங்கினார்.
2008 இல் மீண்டும் ஏற்பட்ட யுத்தத்தினால் இடம்பெயர்ந்து 2010 இல் மீள்குடியேறியபோது ஆலயம் அழிவடைந்திருந்தது. ஆயினும் அன்றைய பங்குத்தந்தையாக இருந்த அன்ரன் அமலதாஸ் அடிகளார் அவர்கள் ஆலய வளாகத்தில் சனிக்கிழமை மாலைவேளைகளில் திருப்பலி நிறைவேற்றினார்.
ஜேர்மனியில் வசித்த இந்துமத சகோதரி இராசேந்திரம் துவாரகா தம்பதியினரின் நிதியுதவியுடன் மீண்டும் புதிய ஆலயம் அமைக்கப்பட்டது மட்டுமன்றி திருச்சொரூபம், திருப்பலிப் பொருட்கள், பலிப்பீடம், திருப்பலி உடைகள் ஆகிய அனைத்தும் கிடைக்கப்பெற்றன. 17.11.2011 இல் இவ்வாலயம் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. மின்சார வேலைகளுக்கான செலவினை சவரிப்பிள்ளை ஐயாவின் குடும்பத்தினர் வழங்கினர்.
இவ்வாறு புதுப்பொலிவுடன் அமைந்து அருள் வழங்கும் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் திருவிழாவானது வருடம்தோறும் கார்த்திகை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply