கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலயம், பூநகரி

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கௌதாரிமுனை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அழகுற அமைந்துள்ளது. 

இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடர்பான தெளிவான தகவல்களை அறிய முடியவில்லை. ஆயினும் போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களுக்கிடைப்பட்ட காலத்தில் பூநகரிக்கும் குடா நாட்டிற்குமான போக்குவரத்துத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலத்திலேயே பூநகரிப் பகுதிகளில் ஆலயங்கள் அமைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அந்த வகையில் பூநகரி வாடியடியில் அமைந்துள்ள அடைக்கல அன்னை ஆலயம் அமைக்கப்பட்ட காலப்பகுதியிலேயே கௌதாரிமுனை அந்தோனியார் ஆலயமும் அமைக்கப்பட்டிருக்கலாம் என முன்னோர்களால் கூறப்படுகின்றது. 1913 காலப்பகுதியில் பாஷையூரிலிருந்து மண்ணித்தலையில் குடியேற்றப்பட்ட மக்கள் குழுமங்களில் சிலர் காலப்போக்கில் கௌதாரிமுனையில் குடியேறி அங்கு ஏற்கெனவே அமைந்திருந்த சிற்றாலயத்தில் புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தை வைத்து வழிபட்டதாக மண்ணித்தலை புனித செபஸ்தியார் ஆலய வரலாற்றிலிருந்து அறிய முடிகின்றது.

அங்கு காணப்பட்ட சிற்றாலயம் ஏற்கெனவே அங்கு வாழ்ந்த களிமண் பாத்திரங்கள் வனையும் தொழிலாளர்கள் தாம் அப் பகுதியில் தங்கியிருந்து தம் தொழிலைச் செய்வதற்கு அவ்விடம் வசதியானதாக அமைந்திருந்ததால், அங்கு தங்கியிருந்து தமது வழிபாட்டுத் தேவைகளுக்காக இவ்வாலயத்தை அமைத்திருக்கலாம் என முன்னோர்களால் நம்பப்படுகிறது. அதற்கான சான்றுகளும் இங்கு காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இவ்வாலயம் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது.

பாஷையூரிலிருந்து இங்கு குடியேறிய குடும்பங்களில் திரு பிலிப்பு, திரு பாவிலுப்பிள்ளை, திரு செல்லையா, திரு சூசை, திரு செபஸ்ரி, திரு கஸ்பார் ஆகியோரின் குடும்பங்கள் இங்கு வசித்தனர். இவர்கள் வலைப்பாட்டுப் பங்குடன் இணைந்து தமது வழிபாடுகளை முன்னெடுத்து வந்தனர்.

காலப்போக்கில் 1952 இற்குப் பின்னரான காலப்பகுதியில் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த அருட்தந்தை ஹென்றி மோறோ, வெளிநாட்டவரான அருட்தந்தை கொன்சால்வெஸ், அருட்தந்தை வில்வசிங்கம், அருட்தந்தை தேவராசா, அருட்தந்தை பத்திநாதர், அருட்தந்தை சந்தியாப்பிள்ளை, அருட்தந்தை சோதிநாதன், அருட்தந்தை லோறன்ஸ், அருட்தந்தை லியோ, அருட்தந்தை அமலதாஸ் ஆகியோரினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

உள்நாட்டு யுத்தங்களால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பின் சேதமடைந்த இவ்வாலயம் அக்காலத்தில் பணியாற்றிய அருட்தந்தை பாலதாஸ் பிறாயன், அருட்தந்தை அருள்தாசன், அருட்தந்தை ஜெயக்குமார், அருட்தந்தை சுலக்சன் அடிகளாரின் பணியினால் மீளக்கட்டியெழுப்பப்பட்டது.  

இவ்வாலயத்தின் பின்புறத்தில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் அறநெறிப் பாடசாலை ஒன்று அமைக்கப்பட்டு 11.01.2023 அன்று யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் திறந்துவைக்கப்பட்டது

இரண்டு தடவைகள் புனரமைப்பிற்குட்பட்ட இவ்வாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக பாஷையூர், அல்லைப்பிட்டி, இளவாலை மக்களோடு இப் பங்கு மக்களும் இணைந்து தமது பங்களிப்பை முழுமையாக வழங்கியுள்ளனர். 

தற்போது இவ்வாலயம் வாடியடி புனித அடைக்கல அன்னை ஆலயப் பங்கின் துணை ஆலயமாக அருட்தந்தை J. நிலான் யூலியஸ் அடிகளாரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது. 22 கத்தோலிக்க குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 3ம் ஞாயிற்றுக்கிழமை ஆலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தகவல்:- திரு செல்லையா டேவிற், கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *