புனித தோமையார் ஆலயம், நாச்சிக்குடா, பூநகரி

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலார் பிரிவிலுள்ள நாச்சிக்குடா கிராமத்தில் கரடிக்குன்று எனுமிடத்தில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது.

1992 இல் ஏற்பட்ட வலன்புரி இராணுவ நடவடிக்கையின்போது யாழ் மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்குப் பொருத்தமான இடங்களைத் தேடி வன்னிப் பகுதியில் குடியேறினர். அவ்வகையில் நாச்சிக்குடா பகுதியில் குடியேறிய மக்கள் கரடிக்குன்று பகுதியில் 1995 ஆம் ஆண்டளவில் காடுகளை வெட்டி குடியேற்றப்பட்டனர். அங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்கள் தமது வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தமக்கு ஓர் ஆலயம் தேவை என்பதைக் கருத்திற் கொண்டு சிறிய காணியை ஒதுக்கி குடிசையாலான ஆலயம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தனர்.1996 இல் அப்போதைய பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஞானரட்ணம் அடிகளாரால் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. 1998 இல் அருட்தந்தை பீற்றர் அடிகளார் பணியாற்றிய காலத்தில் அத்திவாரமிடப்பட்டு அரைச் சுவர் வைத்து சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் திருப்பலிகள்நிறைவேற்றப்பட்டன. அதே வளாகத்தில் அருட்தந்தை பீற்றர் அடிகளார் ஒரு முன்பள்ளியையும் அமைத்தார். இங்கு வசித்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் இவ்வாறு வளம்பெற்றது.

2002 இல் அருட்தந்தை பாஸ்கரன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது ஆலயக் கூரை திருத்தப்பட்டு ஓட்டினாலான கூரை போடப்பட்டது.

2006 இல் மீண்டும் ஏற்பட்ட இறுதி யுத்தத்தின்போது இடம் பெயர்ந்து மக்கள் 2010 இல் மீளக் குடியேறியபோது ஆலயம் அழிவடைந்திருந்தது. 2011 இல் அருட்தந்தை மரியதாஸ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் ஆலயம் மீளவும் புனரமைக்கப்பட்டது.

2012 இல் ஆலயம் அமைந்துள்ள காணி ஒரு முஸ்லிம் சகோதரருக்குச் சொந்தமானது என முரண்பாடுகள் எழுந்தன. அருட்தந்தை மயூரன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் 2014 இல் காணிப் பிணக்குகள் தீர்க்கப்பட்டன.

2016 இல் அருட்தந்தை ஆனந்தகுமார் அடிகளாரின் முயற்சியால் அரச நில அளவையியலாளரினால் காணி அளக்கப்பட்டு, உரிமையாளரிடம் அக் காணி வழங்ப்பட்டதுடன், ஆலயம் அமைப்பதற்கென நீண்டகால குத்தகை அடிப்படையில் காணியைப் பெறுவதற்கான முயற்சிகள் பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிபரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

2017 இல் அதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்று புதிய காணி வழங்கப்பட்டது. அதே ஆண்டில் அருட்தந்தை சுமன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் ஆயரின் அனுமதியுடன் புதிய ஆலயத்திற்கான அத்திவாரமிடப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆலய மக்கள், வெளிநாட்டு உறவுகள், யாழ்ப்பாணம் மாதகலில் வசிக்கும் சொந்த உறவுகளின் நிதியுதவியுடன் பங்குத்தந்தையின் வழிகாட்டலில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 இல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றிச்சாட் பதியுதீன் அவர்கள் ஆலய கட்டுமானப் பணிகளுக்காக ரூபா பத்து இலட்சம் நிதியினை வழங்கினார். கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவேறவில்லையாயினும், இவ்வாலயத்திலேயே திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன.

தற்போது அருட்தந்தை அலின் கருணாகரன் அடிகளார் அவர்கள் பங்குத்தந்தையாகப் பணியாற்றிவருகின்றார். 17 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்ட இவ்வாலயத் திருவிழா ஆடி மாதத்தின் மூன்றாம் திகதி புனித தோமையாரின் திருவிழா நாளாக இருப்பதால், அதற்குப் பின்வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருடம்தோறும் இவ்வாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தகவல்:- அந்தோனிப்பிள்ளை அருள்ராணி, ஆலய இறைமக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *