
வட்டக்கச்சி குடியேற்றத்திட்டமானது 1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அங்கு திரு வேலுப்பிள்ளை முருகேசு என்பவர் மனைவிபிள்ளைகளுடன் சில்வா வீதியில் குடியேறி அவர்களினது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசிக்கும் வீட்டுக்காணிக்கு வடக்குபக்கம் மிகவும் அடர்ந்த பற்றைக் காடாக இருந்துள்ளது. 1954ம் ஆண்டு ஆனி மாதம் திரு வே.முருகேசு அவர்களின் மனைவி இரத்தினம் தனது மூன்றாவது பிள்ளையான 1 1Æ2வயதுடைய ஆண்குழந்தைக்கு பால்ஊட்டிய வண்ணம் அயர்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார் சற்று நேரத்தில் அவர் திடிரென கண்விழித்துப் பாரத்த போது பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தை வீட்டில் இல்லாமையைக் கண்டு பதட்டத்துடன் அழுதவண்ணம் வெளியில் படுத்திருந்த கணவருக்கு தெரிவித்து வீட்டில் படுத்திருந்த மற்றக்குழந்தைகளுடன் அந்த இரவு வேளையில் தொலைந்து போன குழந்தையை தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் குழந்தை கிடைக்காமையினால் அயலவர்களுக்கும் தகவல் தெரிவித்து அவர்களின் உதவியுடனும் இரவிரவாக குழந்தையை தேடியுள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை என மனமுடைந்து அழுதவண்ணமாக இரவுப்பொழுதை களித்துள்ளனர். மறுநாள் பொழுது விடிந்தவுடன் இன்னும் பல அயலவர்களையும் சேர்த்துக் கொண்டு பல குழுக்களாகப் பிரிந்து மிகவும் கடினமான ஆட்கள் உட்புக முடியாதவண்ணம் காணப்பட்ட பற்றைக்காடுகளை வெட்டியவண்ணம் உட்புகுந்துதேடியுள்ளனர். பல மணிநேரத்தின் பின்னர் குழந்தையை தேடிக்கொண்டிருந்த தந்தை மற்றும் அயலவர்களின் காதுகளில் சிறுகுழந்தை தூரத்தில் சிரித்து மகிழ்வது போன்ற குரல் கேட்டதாகவும் உடனடியாக சத்தம் வந்த திசையை நோக்கி காடுகளை பிரித்து உள்நுழைந்து பார்த்த போது காணாமல் போயிருந்த குழந்தை ஒரு பெரிய காட்டு ஆமணக்கு மரத்தின் அருகில் காணப்பட்ட 10 அடி உயரமுள்ள புற்றின் மேலே சம்மாணி கொட்டிய நிலையில் கைகளை மார்போடு கட்டிக்கொண்டு சிரித்த வண்ணமாக குழந்தை அமர்ந்திருந்துள்ளது.
குழந்தையின் உடல் முழுவதும் முசுறு வகை எறும்புகள் சூழ்ந்திருந்ததாகவும் அவ் எறும்புகள் குழந்தைக்கு எவ்வித தீங்கும் விளைவிக்கவில்லை என்றும் புற்றின் அருகில் வாழைப்பழம் உண்டு தோல் வீசப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. பிள்ளையைக் கண்ட தந்தை உடனே புற்றின் மீது ஏறி முசுறு எறும்புகளை தட்டி விட்டு குழந்தையை கண்ட ஆனந்தத்துடன் குழந்தையை கொண்டு சென்று அழுது கொண்டிருந்த தாயிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வினால் மனமுடைந்த திரு.வே.முருகேசு அது பற்றி மனதில் சலனப்பட்டு உறங்கிய வேளையில் அவருடைய கனவில் நான் ஜயப்பன் என்றும் நானே உனது பிள்ளையை தூக்கிச்சென்று அமர்த்திய இடமானது முன்பு ஒரு காலத்தில் நான் இருந்த இடம் என்றும் தனக்கு அவ்விடத்தில் கோயில் அமைத்து வழிபாடு செய்யுமாறு கனவில் கூறியதாகவும் செல்லப்படுகின்றது.
கனவில் கூறிய விடயம் தொடர்பாக தனது மனைவி மற்றும் அயலவர்களிடம் கூறி அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் காடுகளை வெட்டி அவ்விடத்தில் சூலம் வைத்து காய்மடை பூமடை போன்ற பூசைகளை வாய்கட்டியவ வண்ணம் செய்து வந்துள்ளனர். அன்றிலிருந்து திரு வே.முருகேசு என்பவர் தலைமுடி மற்றும் தாடி வெட்டாமல் திரிசடை கோலத்துடன் சுவாமியார் என்ற புணைபெயருடன் நீண்ட காலம் பூசை வழிபாடுகள் செய்து வந்துள்ளார். 2004ம் ஆண்டு பொதுமக்களை கூட்டிய சுவாமியார் தனது ஆயுட்காலம் நெருங்கிவிட்டதாகவும் தான் சமாதி நிலையை அடையப்போவதாகவும் கோயிலின் மூலஸ்தான மூர்த்தி ஜயனாரோ அல்லது ஜயப்பனே என்று பூக்கட்டி பார்க்கும் படியும் பொதுக்கூட்டி கூடி ஆலயத்திற்கு நிர்வாக சபையினை தெரிவு செய்து ஆலய நடவடிக்கைகளை தெடருமாறு கூறி பொதுமக்களிடம் கோயிலை கையளித்த அன்றே அவர் சமாதிநிலையை அடைந்தார்.
அதன் பின்னர் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்து சுவாமியார் கூறியது போன்று ஜயனாரோ அல்லது ஜயப்பனோ என பூக்கட்டி பார்த்த போது ஜயப்பன் என்று வந்ததால் 1954ம் ஆண்டிலிருந்தே 2004ம் ஆண்டு வரை ஜயனார் ஆலயம் என்று அழைக்கப்பட்ட இக்கோயிலானது அருள்மிகு சபரிஜயப்பன் திருக்கோயில் என்று பெயர்மாற்றப்பட்டதுடன் ஆலய பாரிபாலன சபையினரின் அயராத முயற்சியால் பாரிய கட்டிடமாக ஆலயம் உருவாக்கப்பட்டு 2007 ம் ஆண்டு 6ம் மாதம் 27ம் திகதி ஆவர்த்தன கும்பாபிக்ஷேகம் நடைபெற்று மூலஸ்தானத்தின் ஜயப்பன் விக்கிரம் வைத்து இன்று வரை சிறந்து விளங்குகின்றது.

Leave a Reply