
பூநகரிப் பங்கின் துணை ஆலயமாக தெளிகரை என்னும் குடியேற்றக் கிராமத்தில் யாழ்ப்பாணம் மன்னார் B.32 பிரதான வீதியின் அருகே குழந்தை இயேசு ஆலயம் அமைந்துள்ளது.
2009ம் ஆண்டுக்குப் பின்னர், உள்நாட்டுப் போர் நிறைவுற்றதன் பின்னர் இலங்கை அரசாங்கம் பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன் ஒரு பகுதியாக தமது சொத்துக்களை இழந்த மக்களுக்கு அவற்றை மீளளிக்கும், புனரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. காணிகள் அற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்கி, வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன. அவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சினால் காணிகள் வழங்கி வீடமைக்கும் திட்டத்தில், தெளிகரை, எனும் பூநகரி பிரதேசத்தின் கிராமத்தில் காணிகளற்ற பல குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. அவற்றுள் 25 இற்கும் மேற்பட்ட கத்தோலிக்க குடும்பங்களும் உள்ளடங்கியிருந்தன.
இது காடுகளை வெட்டி உருவாக்கப்பட்ட புதிய குடியேற்றமாகையால், இங்கு எந்த ஆலயங்களும் காணப்படவில்லை என்பதுடன் இம்மக்கள் தமது ஆன்மீகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அண்மையில் ஆலயங்கள் எவையும் அமைந்திருக்கவில்
லை.
இப் பின்னணியில் 2017 இல் பூநகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜே.அ .அருள்தாசன் அடிகளார், பூநகரி பிரதேச செயலாளராக இருந்த திரு. கிருஷ்ணேந்திரனின் அனுமதியுடன், காலம் சென்ற அருட்தந்தை மத்தாயஸ் அடிகளாரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பெறப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடனும், அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் சிறு தொகை நிதிப் பங்களிப்புடனும் இலங்கை இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடனும் யாழ்ப்பாணம் மன்னார் B.32 பிரதான வீதியின் அருகாமையில் இவ் ஆலயத்தை அமைத்தார்.
பங்குத்தந்தை அருட்திரு அருள்தாசன், கொழும்பு பத்திரமுள்ள என்னும் இடத்தில் உள்ள வனவளத்துறை தலைமை திணைக்களத்தில் வனவளத்துறை தலைமை அதிகாரியைச் சந்தித்து ஆலயம் அமைப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றார். தொடர்ந்தும் பிரதேச செயலரின் ஆலோசனையையும் அனுமதியையும் பெற்று அத்துடன் அப்போதய பூநகரி பிரதேசத்தின் 662 பிரிகேட் படை பிரிவின் ராணுவ கட்டளை தளபதியாக விளங்கிய பிறிகேடியர் பிரியந்த ஜயவர்த்தன என்பவரின் பூரண ஒத்துழைப்பையும் பெற்று ராணுவத்தினரின் கட்டுமாண பணியாளர்களின் பூரணமான உழைப்புடனும், பங்கு மக்களின் ஒத்துழைப்போடும் மேற்படி ஆலயம் பல தடைகளின் மத்தியிலும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள், ஏற்கெனவே பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட பல்லாய் கிராமத்தில் உள்ள மடுமாதாவைத் தமது பாதுகாவலியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்கள் பல்லாயில் காணியற்றவர்களாக இருந்தவர்கள். 2010ம் ஆண்டுக்குப் பின்னர் தெழிகரை பகுதியில் குடியேற்றப்பட்டனர். இதனால் ஆரம்பத்தில் இவ்வாலயம் மடுமாதா ஆலயமாகவே அமைக்கப்பட்டது. ஆயினும் தற்போது குழந்தை இயேசு ஆலயம் எனும் பெயர் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலைத்திருப்பலி இங்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

Leave a Reply