புனித யோசப்வாஸ் ஆலயம், செம்மன்குன்று, பூநகரி

பூநகரி பிரதேசத்தின் செம்மன்குன்று பகுதியில் யாழ்ப்பாணம்- மன்னார்,B.32 பிரதான வீதியருகே இவ்வாலயம் அமைந்துள்ளது.

1995 காலப்பகுதியில் (முழங்காவில்) ஜெயபுரம் பங்குடன் பூனகரி பங்கு இணைக்கப்பட்டிருந்தது. ஜெயபுரம் பங்குத்தந்தையாக அருட்தந்தை எஸ்தாக்கூர் செபஸ்தியன் அடிகளார் பணியாற்றிய அக்காலத்தில் இவ்வாலயம் அமைப்பதற்கான வாய்ப்பு அமையப்பெற்றது.

1995 காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த நிலமைகளால், யாழ்ப்பாணத்தின் குருநகரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் செம்மன்குன்றுப் பகுதியில் குடியேறியிருந்தனர்.

இவர்கள் தமது கத்தோலிக்க விசுவாசத்தைக் காத்துக்கொள்வதற்கும், வழிபாடுகளில் பங்குபெறுவதற்கும் இப்பகுதியில் ஒரு ஆலயம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்தனர். இதனடிப்படையில், குருநகரைச்சேர்ந்த திரு இசையாஸ் ஜோண்கெனடி (ஜீவா) என்பவரின் நிதியுதவியோடு, 15,000.00 ரூபாவிற்கு யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த இந்து சமயத்தவரான திரு. செல்வராசா என்பவரிடமிருந்து ஆலயம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டது. இக்காணியில் ஆரம்பத்தில் ஒரு கொட்டில் ஆலயம் அமைக்கப்பட்டது.

ஒல்லாந்தர் காலத்தில் ஆயனில்லா ஆடுகள் போல பரிதவித்த கத்தோலிக்க மக்களுக்குப் பணியாற்ற வந்த யோசேப்வாஸ் அடிகளார் 1689ம் ஆண்டு சில்லாலையில் கிறிஸ்மஸ் தினத்தன்று நள்ளிரவுத் திருப்பலியின்போது ஒல்லாந்தப்படைகள் அவரைக் கைது செய்ய வந்த வேளை அங்கிருந்து விலகி பூநகரிப் பகுதியூடாக புத்தளம் பகுதியை நோக்கி 1690ம் ஆண்டு பயணத்தை மேற்கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றது. அவ்வாறு மன்னார் நோக்கிப் பயணித்த புனித யோசேப்வாஸ் அடிகளார் இவ்வாலயம் அமையப்பெற்றுள்ள பூநகரி பகுதியூடாகவே பயணித்தாக , அறியப்படுகிறது.1995 இல் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் யோசப்வாஸ் அடிகளாரை முத்திப்பேறுபெற்றவர் என அறிவித்திருந்தார். இத்தகைய காரணங்களால், இவ்வாலயம் முத்திப்பேறுபெற்ற யோசப்வாஸ் அடிகளாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாக இக்காலப் பகுதியில் அமைக்கப்பட்டது.

2009ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்குடியேறிய பின் 2012 இல் அருட்தந்தை பாலதாஸ் பிராயன் அடிகளார் பூநகரிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது, குருநகரைச் சேர்ந்த திரு.ஜோண் கெனடி ,(ஜீவா) என்பவர் வழங்கிய 16 லட்சம் ரூபா நிதியில் இவ்வாலயம் புதிய கட்டிட ஆலயமாகக் கட்டப்பட்டது.

இவ்வாலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மேசன் தொழிலாளர்கள் தாம் பணிபுரிந்துகொண்டிருந்த வேளையில் அவ்விடத்தில் புனித ஜேசேப்வாஸ் அடிகளாரைக் கண்டதாக அன்றைய பங்குத்தந்தை அருட்பணி பாலதாஸ் பிறாயன் அடிகளாரிடம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் 2018 இல் அருட்தந்தை யே. அ. அருள்தாசன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது இவ்வாலயம் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டதுடன், ஆலயத்தின் தெற்குப் பக்க எல்லையில் அமைந்திருந்த அரை ஏக்கர் விஸ்தீரணமான காணி குரு நகரைச் சேர்ந்த திரு. இசையாஸ் யோன்கெனடி (ஜீவா) என்பவரின் நன்கொடையான ரூபா ஒரு லட்சத்தி 25 ஆயிரம் ரூபா நிதியை கொண்டு யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த திரு. செல்வராசா என்பவரிடம் இருந்து மேலதிகமாக வாங்கப்பட்டு, ஆலயக் காணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பங்குத்தந்தை இலங்கை புனர்வாழ்வு =அமைச்சிடம் இருந்து ஆலயபுனரமைப்புக்காக விண்ணப்பித்து பெறப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் நிதியின் இரண்டு கட்டங்களாகப் பெறப்பட்ட நிதி உதவியைக் கொண்டு ஆலயப் பின்பக்கக் கட்டடம் மேலும் பெரிதாக்கப்பட்டது. இவ்வாலயத்தில்
மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகிறது. வருடம்தோறும் மருதமடு அன்னையின் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் இவ்வாலயத்தில் தங்கி வழிபட்டுச்செல்வது வழமையாகும்.

வருடம்தோறும் புனித யோசப்வாஸ் அடிகளாரின் விண்ணகப் பிறப்பு நாளான ஜனவரி மாதம் 16ம் தேதிக்கு அடுத்து வரும் ஞாயிறு தினத்தன்று இவ்வாலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

தகவல்:- அருட்தந்தை J. A அருள்தாசன், முன்னைநாள் பங்குத்தந்தை, பூநகரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *