புனித அன்னை திரேசாள் ஆலயம், செட்டியார் தரைவெளி, பள்ளிக்குடா, பூநகரி.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில், பள்ளிக்குடா கிராமத்தின் செட்டியார் தரைவெளி என்னுமிடத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

செட்டியார் தரைவெளி, பள்ளிக்குடா பகுதியில் சுனாமி ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டோருக்கான குடியேற்றத்திட்டத்தில் வசித்த ஏறத்தாழ 58 கத்தோலிக்க குடும்பங்களின் கிறீஸ்தவ நம்பிக்கை வாழ்வுக்கும் வழிபாடுகளுக்குமாக ஒரு ஆலயம் அமைக்கப்பட வேண்டிய தேவை அவசியமாக உணரப்பட்டது. இனடிப்படையில், 2010 ஆம் ஆண்டின் மீள்குடியேற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் பூநகரி பள்ளிக்குடா செட்டியார் தரைவெளி பகுதியில் சுனாமி உதவி திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான காணிகள் வழங்கி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.

இங்கு 2017 இல் பூநகரிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்பணி ஜே.அ.அருள்தாசன் அடிகளார் பணிக்காலத்தில், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத பகுதியில் அப்பகுதியில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு ஆலயம் அருகிலேயே இல்லாத காரணத்தினால் ஒரு ஆலயம் அமைப்பதற்காக தற்போது உள்ள ஆலயத்திற்கு சுமார் 400 மீட்டர் தூரத்தில் கடற்கரைக்கு சமீபமாக ஒரு அரச காணியில் ஆலயம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சில இடர்பாடுகள் மற்றும் எதிர்ப்புகளால் இந்த முயற்சி கைவிடப்பட்டு மீண்டும் தற்போது ஆலயம் அமைந்துள்ள (அப்போது பற்றைக் காடாக இருந்த) அரச காணியில் ஆலயம் அமைப்பதற்காக துப்புரவு செய்தபோது மீண்டும் சிலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு கிராம உத்தியோகத்தர் மூலமாக போலீசாரிடம் முறைப்பாடு செய்து அந்த முயற்சியைத் தடை செய்தனர். எனவே பங்குத் தந்தையும் அங்குள்ள கத்தோலிக்க மக்களும் தமக்கு உரிய ஆலயம் அமைப்பதற்கான தேவையினை வலியுறுத்தி பூநகரி பிரதேச செயலருக்கு ஒரு மகஜரை பங்குத்தந்தை தலைமையில் சமர்ப்பித்தனர். இவர்கள் நேரடியாக பூநகரி பிரதேச செயலரிடம் ஆலோசித்தமைக்கு அமைவாக 22/ 4 /2017 தேதியிட்ட கடிதத்தில் தற்போது அமைந்திருக்கின்ற அரச காணியில் அப்போது பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய திரு. கிருஸ்ணேந்திரன் என்பவரின் அனுமதியுடனும் அப்பகுதி கத்தோலிக்க மக்களின் நிதிப் பங்களிப்பு மற்றும் உடல் உழைப்பு மூலமும் பற்றைக் காடுகள் படிப்படியாக துப்புரவு செய்யப்பட்டு ஒரு ஏக்கர் பரப்பளவான காணி பெறப்பட்டு புனித அன்னை திரேசாள் ஆலயம் சிறிய கொட்டகையாக ஆரம்பிக்கப்பட்டது.

புனித அன்னை திரேசாளின் திருச்சொரூபம் கிடைக்கப்பெறாமையால், புனித பதுவை அந்தோனியாருடைய திருச்சொரூபம் சீமேந்தினால் ஆன தூணின் மேல் நிறுவப்பட்ட சுரூபக் கூட்டில் நிறுத்தப்பட்டு, அவ்விடத்தில் 22/08/2017 ஆம் ஆண்டு முதன் முதலில் அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை யே.அ. அருள்தாசன் அவர்களால் அப் பகுதி மக்களுக்கு புதிய கொட்டகையினாலான ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தற்போது அருட்பணி நிலான் யூலியஸ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றுகின்றார். இப்போது அவ்வாலயமானது 50 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட பெரிய ஆலயமாகக் கட்டப்படுகின்றது. செவ்வாய்க்கிழமைகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. தற்போது யாழ் உரும்பிராய் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றும் அருட்தந்தை அ. அகஸ்ரின் அடிகளார் புனித அன்னை திரேசாளின் சீமேந்தாலான திருச்சொரூபத்தினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவ்வாலயக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால், திருச்சொரூபம் பூநகரி பங்குப்பணிமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் ஆலயத் திருவிழா வருடந்தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறு அன்று மூன்று நாட்கள் ஆயத்த வழிபாடுகளின் பின்னர் கொண்டாடப்படுகிறது.

தகவல்:- அருட்தந்தை J. A அருள்தாசன், முன்னைநாள் பங்குத்தந்தை, பூநகரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *