ஸ்ரீசங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயம்

Posted on

by

முரசுமோட்டை கிராமத்தில் 1965 ம் ஆண்டு குடி ஏற்றத்திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பழங்குடியினர் காட்டின் மத்தியில் அமைந்திருந்த புற்றினை வணங்கி, பொங்கல் பூஜை செய்து விரும்பிய வரங்களைப் பெற்று மகிழ்ந்தனர்.


குடியேற்றத்திட்டம் வந்த பினனர்; பல உருவங்களில் பெருமானைக் தரிசித்தவர்களும் உண்டு. இவற்றை எல்லாம் அறியாது இக்காணியை நல்லையா தேசிகர் குடியிருப்பதற்காக பெற்றுக் கொண்டார். அங்கு குடிஏறிய நாள் தொடக்கம் நாகபாம்பின் அடாவடித்தனங்களினாலும் எம்பெருமானின் அற்புதங்களினாலும்;; புதுமனை அமைக்க முடியவில்லை. அதனால் அளவெட்டி அருட்கவி வினாசித்தம்பி ஐயாவிடம் இது பற்றி ஆலோசனைக்கு சென்றனர். அவர் காணியை பார்க்க வந்தவுடனேயே நேராக எல்லைவேலிக்கு சென்று “இங்கு ஒரு பெரியவர் இருக்கிறாா”;, அவருக்கு கோயில் கட்டிவிட்டு நீங்கள் வீடு கட்டலாம,; சகல செல்வமும் அவர் தருவார்” என திருவாய் மலர்ந்தார்.

விநாசித்தம்பி ஐயா, அந்த பெரியவரின் உருவத்தை தன்அகக் கண்ணில் தோன்றியவாறு………
“பொங்குதிரி சூலமுடன் தண்டு தாங்கி
புனித மிகு சடா மகுடம் பரப்பிவீசி
தங்கமணிச் சிலம்பணிந்த பாதம் தூக்கி
திரு நடனம் புரிகின்ற தேவ தேவா
இங்கு மணிக் கோயில் கொண்டு எமைக்காக்கும்
ஈஸ்வரனே குறை பொறுக்கும் எம் பிதாவே
செங்கமல வயல் சூழ் முரசு மோட்ட மேவும்
சிவ விஸ்ணு மூர்த்தியே போற்றி போற்றி” என அருட்பாவாக பாடினார்.

அதன் படியே அத்திருஉருவம் பாதி சிவன,; பாதி விஸ்ணு ஆக காட்சி தந்தார். இதனாலேயே ஸ்ரீ சங்கர நாரணர் ஆலயம் என பெயர் விழங்கியது.
பெருமானின் திருவருள் கிராமமெங்கும் அருள் சுரந்ததுடன் இந்திய யாத்திரை செய்யும் வாய்ப்பு இவ்வாலய தலைவர் தம்பதியினருக்கு கிடைக்கப்பெற்றது. அங்கு தென்இந்தியாவில் திருநெல்வேலி என்னும் ஊரில் “சங்கரநாராயணர்” ஆலயத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டி அவ்வாலயத்தில் சிவலிங்கமே மூலமூர்த்தியாக இருக்கும் காட்சியையும் தரிசித்தனர். அங்கு கிடைத்த திருவருளின்படி அங்கிருந்து சிறிய சிவலிங்கம் எடுத்துவரப்பட்டு அருட்கவி வினாசித்தம்பி ஐயா அவர்களால்

“நமச்சிவாய நாதனே போற்றி
நான்மறைநாயக நடேசா போற்றி
உமையாள்பாகத் தொருவனே போற்றி
உயர்முரசப்பதி உறைந்தவா போற்றி
வேண்டுமடியார் விளம்புபல்லாண்டு
விறுமர் எனவே விளக்கிட்டேத்திய
ஆண்டவாபோற்றி அரவினிலாடிய
அரிஎனநின்ற அழகாபோற்றி
ஆதியாய் அமர்ந்த அம்பலவாணர்
அற்புதக் கோயிலில் அன்னை உமையுடன்
வேதம் இசைக்க விளங்கிய யாகம்
வேதியராற்றி விரவுமாகமத்தால்
பிரசோற்பத்தி பேறு கார்த்திகையில்
பிறைவளர் சஷ்டி பிறங்குசீர் அவிட்டம்
குருவாரத்தில் கும்பாபிக்ஷேகம்
குளிர்பிரதிட்டை கொண்டு பூசிக்க
நிறையருள் புரியும் நிமலாபோற்றி
நிலம் நிதி சுகங்கள் நினைத்தவர்க்குதவும்
இறைவா போற்றி ஈழத்தமிழினம்
இசைமிக வாழ அருள்வாய் சரணம்.”
என அருட்கவி பாடப்பட்டடு பிரசோற்ப்பதி வருடம் கார்த்திகை திங்கள் 26 ம்நாள் குருவாரம் அவிட்டம் நட்சத்திரத்தில் இனிது கும்பாபிஷேகம் நிறைவெய்தி ஸ்ரீசங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயமாக திருவருள் மழைசுரந்து கொண்டு இருந்தது.
கிளிநொச்சி மாவட்டம் ஜெயந்திநகர், மகாதேவ ஆச்சிரம தவத்திரு கணேசானந்த மகாதேவ சுவாமிகள் இவ்வாலயத்தின் போசராக திகழ்ந்தார். இவ்வாலயம் சைவசமய வளர்ச்சியில் முன்னணியில் திகழ்ந்தது. இலவச சமயதீட்சை, அறநெறிவகுப்புகள், சற்சங்கங்கள் என்பன நடாத்தப்பெற்று இவ்வாலய நிருவாக சபையால் பரிசில்களும் வழங்கப்பட்டு சைவமும் தமிழும் வளர்ந்து மேலோங்கியது.
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குருமகாசந்நிதானம், நல்லூர். சுவாமிகளுடன் ஆலயக்குழுவினர் காசியாத்திரை சென்றனர். பல தலங்களையும் தரிசித்து திருவருள் பெற்ற குழுவினருக்குக் காசியில் அதிஅற்புதமான நர்மதா நதியில் விளைந்த சுயம்பு விசாலாட்சிசமேத விஸ்வநாதலிங்கம் (அர்த்தநாரீஸ்வரர்) தவசி ஒருவர் மூலமாக கிடைக்கப்பெற்று எமது ஈழத்திற்கு எடுத்து வரப்பட்டது. வரும்போது ஆலயத்தலைவர் தம்பதியினருக்குப் பலத்த சோதனைகளும் கஸ்டங்களும் எம்பெருமானால் ஏற்படுத்தப்பட்டு ஈற்றில் வெற்றியுடன் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகளினால் “ஈழத்துக்காசிசேக்ஷ்திரம்” என பிரகடனப்படுத்தப்பட்டு காசிலிங்கம் ஞானிகளும், யோகிகளும் மெய்யடியார்களும் புடைசூழ கும்பாபிக்ஷேகம் செய்யப்பட்டது.
மகாசிவராத்திரி அன்று எல்லா அடியார்களும் தங்கள் கரத்தாலேயே காசிலிங்கப்பெருமானுக்கு பால் அபிக்ஷேஷகம் செய்து திருவருள் பெற்றனர். இவ்வாலயத்திற்கு சித்திரத்தேரும் செய்யப்பட்டு பங்குனி உத்தர திருநாளன்று எம்பெருமானுக்குத் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்று விசாலாட்சிவிஸ்வநாதர் தேரில் வலம்வந்து தீர்த்தமும் நடைபெற்றது. சுயம்புவான தீர்த்தக்கேணியும் ஆலயபக்கத்தில் அமைந்துள்ளது.
எமது கிராமத்தில் ஓர் சிவாலயம் இல்லாத குறையை நிவர்த்தி செய்ததோடு ஈழத்துக்கு ஓர் காசிசேக்ஷ்திரமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறது.
1998 இல் நடந்த நாட்டுப்பிரச்சினையால் கிராமமக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றனர். ஆலயமும் சேதத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் சிவலிங்கப் பெருமான் மகாதேவ ஆச்சிரமத்தில் சைவசிறார்களின் பூசையை ஏற்று திருவருள் பாலித்துக் கொண்டிருந்தார்.
இந்தயுத்தக் காலத்தில் ஆலயக்குழுவினர் மகாதேவ ஆச்சிரம சுவாமிகளின் ஆசியுடன் சமாதான யாத்திரை சென்றனர். அங்கு திருப்பனந்தாள் ஆதினகுருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ குமாரசுவாமித்தம்பிரான் சுவாமிகளுடன் இணைந்து கன்னியாகுமாரியில் இருந்து கைலாக்ஷ் வரை யாத்திரை செய்து புனித தீர்த்தங்களும் திருத்தல திருமண்ணும் மற்றும் திருப்பொருட்களும் பெற்றுவந்து சமாதானம் கிடைத்த நல்ல முகூர்த்த வேளையில் 13.07.2005 புதன்கிழமை ஆனி உத்தர தரிசனத்தில் தவத்திரு கணேசானந்தமகாதேவ சுவாமிகளும், யோகர் சுவாமிகளின் நேரடி அருந்தவசீடர் செல்லத்துரைச் சுவாமிகளும், அருட்கவி விநாசித்தம்பி ஐயா அவர்களினது திருக்கரத்தால் வழங்கப்பட்ட வலம்புரிச் சங்கு புனிதப் பொருட்களை அடிக்கல் நாட்டியும் மற்றும் ஆலயங்களில் இருந்து தரப்பட்ட புனித சங்குப் பொருட்களை அடியார்கள் சிவசிவ கோக்ஷஷம் ஒலி எழுப்ப நாட்டியும் வட இந்திய காசி சேத்திர அமைப்பைப் போன்றே நான்கு பக்க வாசலும் நான்கு பக்க கோபுரமும் அமையப்பெற்ற திருக்கோவிலாக அமைய புணரமைப்புக்கான திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் சிறப்பாக மிகவும் திருவருள் பாலிக்கும்; உருத்திர புரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து இராமகிருஸ்ண குருஜி கொழும்பு ஆத்மகனானந்தஜீ அவர்களின் திருக்கரத்தால் வைத்துப் பூஜை செய்யப்பட்ட நந்தியம்தேவர் விக்கிரகம் இவ்வாலயத்திற்கு கிடைக்கப்பெற்றது.
இச்சந்தர்ப்பத்திலே 2009 ம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் எல்லோரும் நிலை தடுமாறி ஊர்விட்டு ஊர் சென்று உணவின்றி பெரும் அவலத்திற்கு உள்ளாகினர். தெய்வங்களுக்கும் அதேநிலைதான். தர்மகர்த்தாவாகிய நல்லையா தேசிகரும் சடாசரலட்சுமி அம்மையாரும் சிவலிங்கத்தையும் தம்முடனேயே எடுத்துச்சென்று மேலும் கொண்டு செல்ல முடியாதநிலையில் உடையார்கட்டு பகுதியில் சிவலிங்கத்தை மண்ணிற்குள் புதைத்து வைத்துவிட்டு அதற்கான வரைபடம் ஒன்றினை தயாரித்து தம்முடனேயே எடுத்துச் சென்றனர். இறுதிக்கட்ட போரில் இறுதியாக கடற்கரையில் செல்லடியின் கோரத்தால் இருவரும் ஒரே நேரத்தில் சிவபதம் அடைந்தனர்.
2011 ம் ஆண்டு அவர்கிளிடம் இருந்த வரைபடத்தின் உதவியுடன் பெரும் சிரமங்களின் மத்தியில் இறைவன் திருவருளாலும் நல்லையாத்தேசிகர்மகன் கிருபாகரனின் பெருமுயயற்சியாலும் சிவலிங்கம் தேடிகண்டு பிடிக்கப்பட்டது.
ஓரளவு திருப்பணிகள் முடிந்த நிலையில் கரவருடம் ஆடி மாதம் 25 ம் நாள் (2011.07.10) சுவாதி நட்சத்திரமும் சிங்கலக்கினமும் கூடிய காலை 8.47-10.27 வரையான சுபவேளையில் தவத்திரு கணேசானந்தா சுவாமிகள், சின்மாய மிசன் பிரமாச்சரிய ஐக்கிரட் சைதன்யா சுவாமிகள், சாயிமாதா இன்றும் பல பெரியோர், சான்றோர், சிவனடியார்கள் புடைசூழ “சிவாகம கிரியாதத்தவநிதி” சிவசிறி இரத்தினேஸ்வரக் குருக்கள் அவர்களால் கும்பாபிக்ஷேஷகம் செய்யப்பட்டு “ ஈழத்து காசிசேக்ஷ்திரம ;” ஸ்ரீசங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயமாக பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது.
மேற்படி ஆலயம் யோகிகளும் ஞானிகளும் மெய்யடியார்களும் பிரார்த்தனை செய்யவும்;, எல்லா அன்பர்களும் தூயவராகி இகபரசுகமடையும் வண்ணமும், புனிததீர்த்தமாடி அன்பே சிவமான லிங்கப்பெருமானுக்கு அபிக்ஷேகம் செய்து திருவமுதுபடைக்கவும் மாலையில் சப்தரிக்ஷி பூசையை வேதியராற்றுவதற்கும் உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
அடியார்கள் அனைவரும் ஈழத்திலேயே காசியாத்திரை செய்து சைவம், வைணவம், புத்தம், கிறிஸ்தவம் எனப்பாகுபாடின்றி ஒரு தாய் தந்தை மக்களாக எம்பெருமானை வழிபடவும் அத்துடன் இவ்வாலயத்தின் நான்கு பக்கமும் தியாணமண்டபம் அமையப் பெற்றிருப்பதால் யாவரும் தமது இதயத்திலேயே சிவலிங்கேஸ்வரப் பெருமானை இருத்தி சிவத்துடன் கலந்து பேரின்பப் பேற்றையும் அடைய வழி செய்கின்றது. இவ்வாலயம் இலைமறை காயாக உள்ளது.
விசாலாட்சிசமேத விஸ்வநாதரும் ஸ்ரீசங்கரநாராயணரும் ஆகிய “சிவலிங்கேஸ்வரர்” தமது விஸ்வரூபதரிசனத்தை எல்லா அடியார்களும் தாம் விரும்பிய வடிவில் தியானித்து திருவருள்பெற “அன்பே சிவமாக” “சிவ மங்களமாக” எமது நாட்டிலேயே அமர்ந்துள்ளார்..
அவன் அருளாலே அவன் அருள் பெற்று, இகபரசுகமடைய எம்பெருமானைப் பிரார்த்தித்து, இவ்வாலய திருப்பணியில் யாவரும் பங்கேற்றும் தொண்டுகள் புரிந்தும,; புண்ணிய பேற்றைப் பெற்று உய்ய அன்புடன் வேண்டுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *