வன்னேரிக்குளம் ஐயனார் ஆலயம்

Posted on

by

வன்னேரிக்குளம் ஐயனார் ஆலயமானது 1954 ம் ஆண்டு காலப்பகுதியில் நெடுந்தீவு மற்றும் பூநகரி பகுதியில் இருந்து வருகை தந்த மக்கள் குடியேறி இருந்த போது சிறு குடிசையில் ஆரம்பிக்கப்பட்டு பலராலும் வழிபடப்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து எமது கிராமத்திற்கு விறகு வெட்டுவதற்காகவும் மரங்கள் வெட்டுவதற்காகவும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் தொழிலாளர்கள் இவ் ஆலயத்தினை தரிசித்து வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்வாறு வழிபடப்பட்டு வருகின்ற வேளையில் பல அற்புதங்களும் நிகழ்ந்து வந்துள்ளது.
காலங்கள் செல்லச்செல்ல இவ் ஆலயத்தின் மகிமைகளும் அதிகரித்து வந்துள்ளது. இவ் ஆலயத்தின் பூசைகள் சைவ அடியவர்களால் செய்யப்பட்டு வருவது வழக்கம். அப் பூசையானது வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் தைப்பொங்கள் தினம், சித்திரை புத்தாண்டு தின காலப்பகுதியில் விசேட பொங்கல் பூசைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து இவ் ஆலயத்தில் பல வழிப்போக்கர்களும் வழிபட்டு வந்துள்ளனர். அன்றைய காலத்தில் எமது ஊரின் பெரியவர்கள் இராமநாதி ஐயா, சுப்பிரமணியம்(கணக்கர்) ஐயா, நாகலிங்கம் ஐயா, குமரவேலு ஐயா, மருதையினர் ஐயா, பசுபதி ஐயா, தம்பிப்பிள்ளை ஐயா, இராசம்மா பாட்டி, பொன்னு பாட்டி, சுந்தரலட்சுமி பாட்டி ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து சிறிய நிர்வாகம் மூலம் சில வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளனர் அந்த வகையில் கொட்டகை திருத்தம் மற்றும் சிறிய மண் கிணறு அமைத்து திருப்பணி வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளனர். தொடர்ந்து பூசைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்ற போது தை பொங்கல் தினத்திலே ஊர் மக்கள் மண் பாணை எடுத்து பொங்கல் பொங்கி வருவது வழங்கம் அவ்வாறே பல அடியவர்கள் தைப்பொங்கல் விழாவை பொங்கல் பொங்கி படைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
இவ் ஆலயத்தின் புராதன கால வரலாற்றிக்கான ஒரு கதையும் உண்டு அந்த வகையில் இவ் ஆலயத்தை போன்று ஏழு ஐயனார் இருந்ததாகவும் ஒன்று இவ் ஐயனார் ஆலயம் – வன்னேரிக்குளம், நொங்கு வெட்டி ஐயனார் ஆலயம் – புதுக்குளம், குளக்கட்டு ஐயனார் ஆலயம் – கரியாலைநாகபடுவான்;, ஐயனார் ஆலயம் – மன்னியாகுளம்;, காட்டு ஐயனார் ஆலயம் – வன்னேரிக்குளம், ஐயனார் ஆலயம் – வேரவில், ஐயனார் ஆலயம் – கிராஞ்சி போன்ற ஐயனார் ஆலயங்கள் காணப்பட்டது என்றும் எல்லா ஆலயத்திற்கும் ஓரே நேரத்தில் ஒரு பூசாரியினால் பூசை செய்யப்பட்டது என்றும் அன்றைய காலத்தில் இருந்த மன்னர்கள் பூசாரியை பிடித்து கட்ட சொன்னதாகவும் அந்த பூசாரி மறைந்ததாகவும் வரலாறு காணப்படுகின்றது.
இவ் ஆலயத்தைச் சூழ பெரிய பற்றைக் காடுகள் நிறைந்து காணப்பட்ட போதும் அவ்வப்போது காட்டு மிருகங்கள் மாலை, இரவு நேரங்களில் வீதிக்க குறுக்காகவும் ஆலயத்திற்கு அருகாமையிலும் நடமாடித்திரிவது வழக்கம் அவ்வாறு இருக்கும் போது அந்த வீதியினூடாக வழிப்போக்கர்களும் இக்கிராம மக்களும் வீதியால் பயணம் செய்வது தவிக்க முடியாத ஒன்றாகும் இருந்த போதும் இவ் ஆலயத்தினை தரிசித்து விட்டு செல்லும் பக்தர்களை ஒருபோதும் எந்த மிருகங்களும் துன்புறுத்துவதில்லை அவ்வாறான புதுமை வாய்ந்த ஆலயமாகும்.
இவ் ஆலயமானது 1996ம் அண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வருகை தந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஆலயமாகவும் கிராமமாகவும் திகழ்தது. இவ் ஆலயம் சிறு கொட்டிலில் இருந்து பெரிய ஆலயமாக உரு பெற தொடங்கியது இதற்கு காரணம் கிளிநொச்சி குமரபுரம் பகுதில் இருந்து வருகை தந்த ஆறுமுகம் ஐயாவும் மற்றும் வல்வெட்டித்துறையில் இருந்து வருகை தந்த குலசிங்கம் ஐயாவையும் சாரும்.
1
இவர்கள் இருவரும் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெயர்ந்து வசித்து வந்ததுடன் ஆலயத்திற்கு அருகாமையில் சிறு குடிசையில் இக்கிராமத்தை சேர்ந்த இராசம்மா பாட்டியின் தேனீர் கடைக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி அருந்துவதற்கு தினமும் வந்து செல்வதுடன் ஆலயத்தினையும் தரிசித்து செல்வது வழக்கம். அவ்வாறு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் காலங்களில் அவர்கள் இருவரும் அந்த பாட்டியுடன் தினமும் நீண்ட உரையாடலை மேற்கொள்வது வழக்கம் அவ்வாறு இருக்கின்ற போது அந்த பாட்டி இவ் ஆலயத்தின் அற்புதங்கள் பற்றி கூறுவது வழக்கம் தினமும் அவர்கள் மூவரின் நீண்ட உரையாடலின் பயனாக இவ் ஆலயம் பெரிதாக கட்டுமான பணிகள் ஆரம்பமாக தொடங்கியது.
இவ் ஆலயமானது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் இவ் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள அடியவாகளால் மடாலயமாக கட்டியெழுப்பப்பட்டது. இக்கட்டிடத்திற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களாக சுண்ணாம்பு மற்றும் சக்கரைச் சேர்த்து பழைய சீமேந்து கல் தண்டவாளம் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டி முடித்து 1998ம் ஆண்டு மகா கும்பாவிசேகம் கிளிநொச்சி குமரபரம் பகுதியில் இருந்து வருகை தந்து முருகன் ஆலய வளாகத்தில் வசித்து வந்த சிவஸ்ரீ ஜெக.ஜெகதீஸ்வரக்குருக்கள்(ஈசன்) மற்றும் அவரின் குடுப்பத்தினர் இணைந்து சிறப்பான முறையில் கும்பாவிசேகத்தினை நாடத்தி மூன்று காலப்பூசைகள் மற்றும் விசேட பூசைகளும் நடைபெற்று மகோட்சவத் திருவிழாக்கள் தேர், தீத்த உட்சவம் மற்றும் இசைக்கச்சேரிகள் போன்ற கலை கலாச்சார நிகழ்வுகளும் மிகவும் பிரமாண்டமாக வருடம் தோறும் நடைபெற்று வந்துள்ளது.
தொடர்ந்து இவ் ஆலயத்தில் திரு இராசநாயகம் ஐயா, விநாயகமூர்த்தி ஐயா, கந்தசாமி ஐயா போன்ற பெரியார்களுடன் பல பெரியார்களும் இணைந்து இவ் ஆலயத்தினை மிகவும் சிறந்த முறையில் பரிபாலித்து வந்துள்ளனர். இவ் ஆலயத்திற்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் காணப்பட்டதுடன் ஆலயத்திற்கு முன்பக்கமாக 2.5 ஏக்கர் நிலத்தில் 1998ம் ஆண்டு காலப்பகுதியில் ஆலத்திற்கு விழாக்களுக்கு வருகை தரும் அடியவர்கள் ஒவ்வெருவராலும் 50 ரூபா பணம் கொடுத்து வாங்கி வைக்கப்பட்ட தென்னங்கன்று தற்போது வளர்ந்து காய்த்து ஆலயத்திற்கு வருமானத்தினை தருகின்றது. இவ் ஆலயம் 2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக சேதமடைந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் உள்ள மகாதேவ ஆச்சிரமத்தில் பொருட்கள் உட்பட அனைத்து விக்கிரகங்களையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூசை நடைபெற்று வரும் வேளையில் மீண்டும் இடம்பெயர்ந்து வட்டக்கச்சி ஐயப்பன் ஆலயத்தில் பொருட்கள் உட்பட அனைத்து விக்கிரகங்களையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூசை நடைபெற்று வரும் வேளையில் மீண்டும் இடம்பெயர்ந்து விசுவமடு அதிசய விநாயகர் ஆலயத்தில் பொருட்கள் உட்பட அனைத்து விக்கிரகங்களையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூசை நடைபெற்று வரும் வேளையில் மீண்டும் இடம்பெயர்ந்து அங்கு அனைத்தையும் விட்டு விட்டு சென்று விட்டோம்.
2
இவ் ஆலயம் 2010ம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் தனது இருப்பிடத்தை நோக்கி வந்தபோது அனைத்து கட்டிடங்களும் யுத்தத்தினால் சேதமடைந்து காணப்பட்டதன் காரணமாக அந்த வருடத்திலேயே சிவஸ்ரீ விபலானந்த குருக்களால் பாலஸ்தானம் செய்யப்பட்டு வழிபாடு இடம்பெற்று வந்தள்ளது. தொடர்ந்து அனைத்து கட்டிடங்களும் புதிதாக பல அடியவர்களின் உபயத்தின் பெயரில் கட்டி முடிக்கப்பட்டது. அத்தோடு புதிதாக ஒரு ஐயப்பன் ஆலயமும் தோற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இவ் ஆலயமானது பல பரிவார மூர்த்திகளையும் கொண்டு அமைந்து காணப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதலவதாக ஆலயத்தின் முன்பக்க கன்னி மூலையில் கன்னிமூலக்கணபதி ஆலயமும் ஆலயத்தின் உள்வீதியில் பிள்ளையார், மாகலட்சுமி, சந்தானகோபாலர், நாகதம்பிரான், பாலமுருகன், சனீஸ்வரன், தட்சணமூர்த்தி, ஆதி ஐயனார், நவக்கிரகம், வைரவர், சன்டேஸ்வரர், மூர்த்திகளும் ஆலய மூலஸ்தானத்தில் ஐயனார் பூரண புற்கலை சமேதரரும், மாக மண்டபத்தில் சிவலிங்கம், கௌரி அம்மன், தம்ப மண்பத்தில் பலிபீடம். கொடித்தம்ப பிள்ளையார் ஆகிய மூர்த்திகளும் ஆலயங்களும் ஆலயத்தின் முன்பக்க வீதியில் ஐயப்பன் ஆலயமும் அமைய பெற்ற பிரமாண்டமான ஆலயமாக கட்டி எழுப்பப்பட்டு 2019ம் ஆண்டு புரட்டாதி மாதம் முதலாம் திகதி மாககும்பாவிசேகம் நடைபெற்றது.
இவ் ஆலயத்தில் இரண்டு கால பூசைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதுடன் ஆண்டுகள் தோறும் மகோட்சவத்திருவிழா 11 நாட்கள் மிகவம் சிறந்த முறையில் நடைபெற்று வருவதுடன் சிவராத்திரி பூசையும் நடைபெற்று வருவதுடன் ஐயப்பன் பூசை தமிழ் திகதி கார்த்திகை 01ம் திகதி தொடக்கம் தை மாதம் 01ம் திகதி வரை 60 நாட்கள் பூசை நடைபெற்று வருவதுடன் அக்காலப்பகுதியில் ஓவ்வெரு சனிக்கிழமைகளில் விசேட பூசையும் மற்றும் மகேஸ்வர பூசையும் நடைபெற்று வருகின்றது.
இவ் ஆலயம் இரண்டு பெரும் ஆலயங்களை கொண்டமைந்து திகழ்வதோடு இதன் அமைவிட நிலப்பரப்பு ஐந்து ஏக்கர் காணியை கொண்ட விசாலமான இடவசதியை கொண்டமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *