புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நாச்சிக்குடா, பூநகரி

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், நாச்சிக்குடா எனும் கிராமத்தில் கடலலைகள் தாலாட்ட எழில்கொஞ்சும் கரையோரத்தில் அழகே உருவாய் ஆலயம் கொண்டு எழுந்தருளியிருக்கிறாள் வேளாங்கண்ணித்தாய்

நாச்சிக்குடா கிராமத்தில் வாழும் மக்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நாவாந்துறையிலிருந்து தொழில்நிமித்தம் இங்கு குடியேறிய கடற்றொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் குழுமமாகும். சில குறிப்புகளின்படி 1965 களில் தொழில்நிமித்தம் இங்கு சில கத்தோலிக்க குடும்பங்கள் குடியேறியதைத் தொடர்ந்து ஒரு கத்தோலிக்க பாரம்பரியம் இங்கு உருவாகியுள்ளது. இவர்களுக்கு முன்பே போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட புனித யாகப்பர் ஆலயமும் நாச்சிக்குடாவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு குடியேறிய மக்கள் தமது ஆன்மீக கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள அருகிலுள்ள புனித யாகப்பர் ஆலயத்திற்கு சென்றுவந்தனர். ஏறக்குறைய 13 கத்தோலிக்க குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவந்தனர். 1976 இல் புனித யாகப்பர் ஆலயப் பங்குத்தந்தையாக அருட்தந்தை கொன்சால்வெஸ் அடிகளார் பணியாற்றிய காலத்தில், திரு மிக்கேல் செபமாலை என்பவர் தம்மையும் புனித யாகப்பர் பங்கில் வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்ற இணைத்துக்கொள்ளுமாறு கேட்டபோது, அவ் அருட்தந்தை அதனை மறுத்து உங்களுக்கென ஒரு ஆலயத்தை அமைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறியமை வேளாங்கண்ணி அன்னை தமக்கென ஒரு இல்லத்தை அமைத்துக்கொள்வதற்கான வேத வாக்காக மாறியது.

1981 வரை புனித யாகப்பர் ஆலயத்தில் வழிபாட்டுக் கடமைகளை நிறைவேற்றிய மக்கள், இதனைத் தொடர்ந்து தமக்கென ஒரு ஆலயம் அமைக்கும் முயற்சியை மேற்கொண்டனர். நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தைச் சேர்ந்த திரு செல்வம் விற்றாலிஸ் என்பவர் இப்பகுதியில் அட்டைக் கொள்வனவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆலயம் இல்லாமல் இம்மக்கள் சிரமப்படுவதைக் கண்ட இவர் திரு செல்வராசா யோகராசா என்பவரின் கோரிக்கைக்கமைவாக 1982.01.03 அன்று வேளாங்கண்ணி அன்னையின் திருச்சொரூபத்தை அன்பளிப்பாக வழங்கினார். இத் திருச்சொரூபம் திரு மிக்கேல் செபமாலை என்பவரது இல்லத்தில் வைக்கப்பட்டு மாலை நேரங்களில் செப வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை கொன்சால்வெஸ் அடிகளார் இவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். திரு மிக்கேல் என்பவருடைய காணியிலேயே குடிசையான ஆலயம் ஒன்றை அமைத்து அன்னையின்திருச்சொரூபம் வைக்கப்பட்டு கொன்சால்வெஸ் அடிகளாரால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

திரு வில்மட் என்பவவ் ஆலயத்திற்கான மணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். இவ்வாலயம் அரசன் அழகம்மா, முத்துராசா பிலிப், மிக்கேல் ஆசீர்வாதம் ஆகியோரால் பராமரிக்கப்பட்டு வந்தது.

சமகாலத்தில் ஆலயத்திற்கென ஒரு காணியைப் பெறும் முயற்சிகளும் இவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 21.01.1991 அன்று அப்போதைய பூநகரிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்கள் இப் பிரதேசத்தைத் தரிசித்து 13 குடும்பங்களையும் ஒன்றிணைத்து செப தியானங்கள் நடாத்துவதற்குத் துணைசெய்தார்.

90 களில் இன்னும் சில குடும்பங்கள் இங்கு குடியேறியதுடன் மக்கள் தொகையும் அதிகரிக்கவே ஆலயத்தினை புதிய இடத்திற்கு இடம்மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கான காணியைத் தெரிவுசெய்தாலும் அரச அனுமதி பெற வேண்டியிருந்தது. இதனால் திரு வீரசிங்கம், திரு ஆசீர்வாதம் ஆகியோர் அன்றைய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு இராசநாயகம் என்பவரை சந்தித்து கலந்துரையாடியதுடன், காணியைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். இக்காணியில் அத்திவாரமிடப்பட்டு கல்லாலான கெபி அமைக்கப்பட்டது.02.02.1991 இல் திருவிழா திருப்பலி அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாரால் நிறைவேற்றப்பட்டது.

அனைவரினதும் முயற்சிக்கமைய 1993 இல் இக் காணிக்குரிய உறுதியை அரச அதிபர் அவர்கள் வழங்கினார். இக்காணியில் 03.08.1993 இல் ஆலயத்திற்கான கப்பு நடப்பட்டு அருட்தந்தை ஞானரட்ணம் அடிகளாரால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆலய நிர்வாகமும் தெரிவுசெய்யப்பட்டது. 1996 இல் இவ்வாலயம் கட்டி முடிக்கப்பட்டது. 95 களில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தங்களால் இடம்பெயர்ந்த 50 இற்கும் மேற்பட்ட கத்தோலிக்க குடும்பங்கள் தமது வாழ்வாதரத்திற்காக இங்கு குடியேறி இவ்வாலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

பல பங்குத்தந்தையர்கள் இம் மக்களது ஆன்மீக வாழ்வைக் கட்டியெழுப்பினர். மீண்டும் ஏற்பட்ட இறுதி யுத்தத்தின் பின் மீளக் குடியேறிய மக்கள் 2017 இல் பழைய ஆலயத்தைத் தகர்த்து புதிய ஆலயம் கட்டும் பணியை ஆரம்பித்தனர்.

28.08.2017 இல் பழைய ஆலயம் தகர்க்கப்பட்டு, அருட்தந்தை மயூரன் அடிகளார் காலத்தில் புதிய ஆலயத்திற்கான அத்திவாரமிடப்பட்டது. 07.06.2020 இல் மணிக் கோபுர வேலைகள் ஆரம்பமாகின அருட்தந்தை சுமன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் ஆலய வேலைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. 21.08.2022 இல் பங்குத்தந்தை நிதர்சன் அடிகளார் காலத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் இவ்வாலயம் திறந்துவைக்கப்பட்டது.

இவ்வாலயத் திருவிழா வருடம்தோறும் மாசி மாதம் 11ம் நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *