யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பல்கலைக்கழகமானது புலம்பெயர் தேசத்தில் தாய் மண்ணின் வாசம் மறந்து, மேலைத்தேய கலாசாரத்தில் கலந்துவிட்ட தாய் மண்ணின் இளம் சமுதாயத்தின் மீளுருவாக்கத்தைத் தூர நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் கட்டுமானத்தினை, கட்டிடக் கலைஞரான துரைராஜா என்பவர் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்து அனைத்துக் கட்டிடங்களையும் வடிவமைத்தார். 2000 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டடப் பணிகள் 2008 போர்க்கால சூழலிலும் 90 வீதமான வேலைகள் முடிக்கப்பட்டது.
காலப்போக்கில் அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகள் ஆரம்பமாகின. பல்வேறு இடங்களிலிருந்து பல மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு வந்து கல்விபயின்றனர். இம் மாணவர்களை ஆன்மிக வழியில் நெறிப்படுத்துவதற்காக நான்கு மதங்களைச் சேர்ந்த சிற்றாலயங்களும் அமைக்கப்பட்டன. அத்தகைய முயற்சியின் பயனாக உருவாக்கப்பட்டதே இவ்வளாகத்தில் காணப்படும் கிறிஸ்து அரசர் ஆலயமாகும்.
கத்தோலிக்க தேவாலயம் ஒன்றினை அமைக்கும் பொறுப்பு யாழ் ஆயர் இல்லத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனடிப்படையில் 2017 இல் கிளிநொச்சி மறைக்கோட்ட குருமுதல்வராகப் பணியாற்றிய அருட்பணி J.A இயேசுதாஸ் அடிகளார் அவர்கள் அன்றைய தொழிநுட்பப் பீடத்தின் விரிவுரையாளராயிருந்த சதீஸ் டக்ளஸ் என்பவருடன் இணைந்து ஆலய கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும் முகமாக கத்தோலிக்க மாணவர் சங்கம் ஒன்றை உருவாக்கினர். இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட முதல் முயற்சியே இவ்வாலயம் இன்று அழகுற எழுந்து நிற்பதற்கான அத்திவாரமாக அமைந்தது எனலாம்.
இவ்வாலயக் கட்டடப் பணியின் முதல் முயற்சியாக ஆலயம் கட்டுவதற்கென தெரிவுசெய்யப்பட்ட இடத்தில் 2018 இல் மரச் சிலுவை ஒன்று நாட்டப்பட்டது. அவ்வாண்டின் இறுதிப் பகுதியில் யாழ் மறைமாவட்ட ஆயர் வழங்கிய நிதி அனுசரணையுடன், அருட்தந்தை இயேசுதாஸ் அடிகளார் மற்றும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, மற்றும் பல்கலைக்கழக சமுகத்தினரின் பிரசன்னத்துடன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஆலய கட்டுமானப் பணிகள் அருட்பணி இயேசுதாசன் அடிகளாரின் மேற்பார்வையில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் 2019, 2020 களில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக கட்டுமானப்பணிகளின் முன்;னேற்றம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. இதனால் அவர்களை ஒன்றிணைப்பது சாத்தியமற்றதாகியது.
ஆயினும் தொடர் முயற்சியாக மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டதுடன் ஆலயக் கட்டுமானப்பணிகளும் வளர்ச்சியடைந்தது. இம் முயற்சிகளின் பலனாக முதல் திருப்பலியாக 2021.04.04 இல் உயிர்த்த ஞாயிறு திருப்பலி இவ்வாலயத்தில் அருட்தந்தை இயேசுதாஸ் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஆலயப் பணிகள் முற்றுமுழுதாக நிறைவடையாத நிலையிலும் திருப்பலி ஒப்புக் கொடுக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் இம் முதல் திருப்பலியைத் தொடர்ந்து ஞாயிறு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இது வரை ஞாயிறு திருப்பலிகளுக்காக செல்வபுரம் முறிகண்டியில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயத்திற்குச் சென்று வந்த மாணவர்கள், இத்திருப்பலியின் பின்னர் சொந்த ஆலயத்திலேயே திருப்பலியைப் பெற்றுக் கொண்டதுடன் ஆலயம் சார் செயற்பாடுகளாக இளையோர் கூட்டங்கள், ஆன்மிக வலுப்படுத்தல் நிகழ்ச்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ந்து 2022, 2023, 2024 ஆம் ஆண்டுகளில் கிறிஸ்து அரசர் பெருவிழா நாளில் ஆலய திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அருட்தந்தை இயேசுதாசன் அடிகளார் மாற்றலாகிச் சென்றவுடன் கிளிநொச்சிப் பங்கைப் பொறுப்பேற்ற அருட்தந்தை A.V சில்வெஸ்ரர்தாஸ் அடிகளாரின் முயற்சியில் ஆலயப் பணிகள் மேலும் மெருகேறியதன் விளைவாக 2025.02.09 அன்று யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா ஆகியோரால் உத்தியோகபூர்வமாக இவ்வாலயம் திறந்து வைக்கப்பட்டது. ஆலய திறப்புவிழா திருப்பலியில் அருட்தந்தை A.V சில்வெஸ்ரர்தாஸ் அடிகளார், யாழ் பல்கலைக்கழக சிற்றாலய அருட்தந்தை A. மக்டொனால்ட் அடிகளார், இலங்கை கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் சிரேஷ்ட பொருளாளர் பேராசிரியர் அருட்தந்தை ஜே.சி போல் றொகான் அடிகளார், இலங்கை கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் தேசிய அருட்தந்தை ருவன் பெரேரா OMI அடிகளார் ஆகியோருடன், தொழிநுட்ப, பொறியியல் மற்றும் வேளாண்மைத் துறைகளின் தலைவர்கள், இறை மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
தற்போது இவ்வாலயம் கிளிநொச்சி மறைக்கோட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளாரின் பரிபாலனத்தின் கீழ் உள்ளதுடன் ஆன்மிக மற்றும் சமுகப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Leave a Reply