
கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் அம்பாள்குளம் கிராமத்தில் கோவில்கொண்டு தேடி வரும் பக்தருக்கு சதா சகாயம் வழங்கும் அன்னையாக வீற்றிருக்கிறாள் சகாய மாதா.
02.01.1992 இல் அம்பாள்குளம், விநாயகபுரம் கிராமங்களில் வசித்த கத்தோலிக்க குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்னைக்கு ஒர் ஆலயம் அமைப்பதற்கான காணியைக் கொள்வனவு செய்ததுடன் இவ்வாலயத்திற்கான வரலாற்றுப் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அருட்தந்தை பொணிபஸ் அடிகளார் கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் இவ்வாலயம் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பொணிபஸ் அடிகளார் காணி கொள்வனவிற்கென ஆயிரம் ரூபா நிதியை வழங்கினார்.
காணி உரிமையாளரும் ஆயிரம் ரூபா வழங்கினார். மிகுதி 18,000.00 ரூபாவை மக்கள் ஒன்றிணைந்து சேகரித்து 10,000 ரூபா பெறுமதியான காணியைக் கொள்வனவு செய்தனர்.
இவ்வாலயத்தினை புனித மிக்கேலுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது பங்குத்தந்தையின் கருத்தாக இருந்தது. வேறு சிலர் திருக்குடும்பத்திற்கெனக் கூற பெரும்பான்மையினர் சதாசகாய மாதாவிற்கென கருத்துத் தெரிவித்ததமையால், செப வழிபாட்டுடன், ஒன்பது நாட்கள் நவநாள் வழிபாடுகளை மேற்கொண்டு, ஒன்பதாவது நாளில் மூன்று பெயர்களையும் எழுதி திருவுளச் சீட்டுக் குலுக்கிப் போட்டு சிறு குழந்தையைக் கொண்டு சீட்டு எடுக்கப்பட்டது. அச்சீட்டு அன்னையின் பெயர் பொறிக்கப்பட்டதாக அமைந்திருந்தமையால், அம்பாள்குளம் பதியில் வாசம்செய்ய அன்னையானவள் சித்தம் கொண்டுள்ளாள் என்ற முடிவு ஏகமனதாக ஏற்கப்பட்டது.
அதே ஆண்டு வைகாசி மாதம் எஞ்சிய 10,000 ரூபா பணத்தில் மரம், தடிகள் கொண்டு ஓலையால் கூரை வேயப்பட்ட கொட்டில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. அதே மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்னையின் முதலாவது திருவிழா கொண்டாடப்பட்டது.
இவ்வாலய உருவாக்கத்தில் முன்நின்று உழைத்தவர்களாக டடா, திரு அன்ரன், திரு சந்திரசேகர், திரு டேவிட், திரு நிக்சன், திரு பவுலிஸ், திரு செபமாலை, திரு ஜோசேப் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
பின்னர் மக்கள் பணம் சேகரித்து கொட்டில் ஆலயத்தை மெருகூட்டி, தண்டவாளங்கள் கொண்டு இரண்டாவது ஆலயத்தை அமைத்தனர். அதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் 1996 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
மீண்டும் 2001 இல் மீள்குடியேறியபோது ஆலய வளவு காடாகக் கிடந்தது, ஆலயத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. ஆயினும் மக்கள் மனம்தளராமல் அன்றைய பங்குத்தந்தை அருட்தந்தை தேவசகாயம் அடிகளார் காலத்தில் மூன்றாவது ஆலயத்தை அமைத்தனர். அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப் அடிகளார் ஆலம் அமைப்பதற்கான நிதிப்பங்களிப்பை வழங்கினார். 2003 இல் இவ்வாலயத் திறப்புவிழா கொண்டாடப்பட்டது.
திரு பொலிக்காப் மற்றும் அன்ரன் என்பவர்கள் ஆலயத்திற்கென ஒரு மணியை அன்பளிப்புச்செய்தனர். திருவாளர் பிரசாத் SLS அவர்கள் வழங்கிய தம்பத்தில் மணி பொருத்தப்பட்டது. 2008 இறுதி யுத்தத்தின் போது இம் மணி காணமற்போய்விட்டது.
உள்நாட்டு யுத்தம் நிறைவுற்றபின் 2010 இல் மீண்டும் மக்கள் மீள்குடியேறினர். பழைய ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டன. புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
2011 இல் அருட்தந்தை யாவிஸ் அடிகளார் ஆலயத்திற்கான மணியினை அன்பளிப்பாக வழங்கினார். திரு நிக்சன் என்பவர் மணிக்கோபுரத்தை அமைத்தார்
2013 இல் அருட்தந்தை மயூரன் அடிகளார் உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் புதிய ஆலயம் அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2014 இல் அருட்தந்தை அன்ரன் ஜோர்ஜ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய போது புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி அத்திவாரமிடப்பட்டது.
20.07.2019 அன்று அருட்தந்தை இயேசுதாசன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆலயம் திறந்துவைக்கப்பட்டது.
ஆலயக் கட்டுமானப்பணிகள் நிறைவுபெறுவதில் அருட்தந்தை இயேசுதாசன் அடிகளாரின் கணிசமான பங்களிப்பும், ஒத்துழைப்பும் கிடைத்தது. மக்ககளின் நிதியுதவியால் குழாய்க்கிணறு அமைக்கப்பட்டு, நீர்க்குழாய்கள் பொருத்தப்பட்டன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய பத்துலட்சம் ரூபா நிதியில் முன் மதில், மற்றும் நுழைவாயில் கட்டப்பட்டது. திருச்சிலுவைப்பாதை நிலைகளை அருட்தந்தை இயேசுதாஸ் அடிகளார் வழங்கினார்.
வருடம்தோறும் மே மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை ஆலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாலய இறைமக்கள் மத்தியிலிருந்து நான்கு இறையழைத்தல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
1) அருட்தந்தை அன்ரன் கிங்ஸ்லி – டொன்பொஸ்கோ சபை
2) அருட்சகோதரி ஜோசேப் குளோரியா – திருச்சிலுவை கன்னியர் சபை
3) அருட்சகோதரர் பங்கிராஸ் ஜோர்ஜ் – அகுஸ்தினார் சபை
4) அருட்சகோதரி கொன்ஸ்ரன்ரைன் சூசை – திருச்சிலுவை கன்னியர் சபை
இவ்விறை அழைத்தல்கள் இம் மக்களின் ஆழமான விசுவாசத்திற்கு சான்றுபகர்கின்றன.

Leave a Reply