கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொன்நகர் கிராமத்தில் அமைந்துள்ள புனித அற்புத மாதா ஆலயமானது 1983 களில் பொன்நகர் குடியேற்றம் உருவாக்கப்பட்ட காலத்தில் இங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஆலயமாகும்.
1977 இல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது களுத்துறையிலிருந்து இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் கிளிநொச்சியில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். கிளிநொச்சி புனித திரேசாள் ஆலயத்தின் அன்றைய பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை பயஸ் அடிகளாரின் அனுமதியுடன் இவர்கள் ஆலய வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான நிரந்தரக் குடியேற்றங்களை அமைப்பதில் அன்றைய ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களின் பணிப்புரையின் படி அருட்தந்தை பயஸ் அடிகளார், முறிகண்டியில் வசித்த திரு இளையதம்பி கணேசபிள்ளை ஆகியோர் அன்றைய அரச அதிபராக இருந்த திரு அன்ரன் அல்பிறட், நிர்வாக கிராம உத்தியோகத்தர் திரு மகாலிங்கம், கிராமசேவையாளர் திரு தனபாலசிங்கம் ஆகியோருடன் கதைத்து பொன்நகர் பகுதியில் இவர்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். Oxfarm, NPRA, Hudec ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இவர்களுக்கான வீடுகள், கிணறு போன்றவற்றை அமைப்பதற்கான உதவிகளை வழங்கினர். இங்கு 12 கத்தோலிக்க குடும்பங்கள் வசித்தனர். இவர்களுக்கான வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒரு ஆலயத்தை அமைக்கும் பணிகளை அன்றைறைய உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை இருதயதாஸ் அடிகளார் முன்னெடுத்தார். இவரது தலைமையில் ஆலயம் அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. சம காலத்தில் கியூடெக் நிறுவனம் இப்பகுதியில் பண்ணை ஒன்றை அமைத்து விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இங்கு இவர்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது.
திரு இராயர் இயேசுதாசன், திருமதி செல்லையா ஆசிரியர், திரு மோகனதாஸ், அவரது சகோதரரான திரு சுபா ஆகியோர் இணைந்து ஆலயம் அமைப்பதற்கான வேலைகளை முன்னெடுத்தனர். திருமதி கணேஸ் திரேசா தனது முதல் சம்பளப் பணத்தை ஆலயம் அமைக்கும் பணிகளுக்காக அன்பளிப்பாக வழங்கினார். கிடுகுகளால் வேயப்பட்ட கொட்டில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. முன் பக்கத்தில் அற்புத மாதாவின் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அக்காலத்தில் கட்டாறிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிய திரு டானியல் என்பவர் முறிகண்டியில் ஒரு உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தபோது அவர் கொண்டுவந்திருந்த பணப் பை திருடப்பட்டது. அதிலிருந்த பொருட்களை இரயில் தண்டவாளத்தில் எறிந்துசென்றிருந்தனர். அதில் அவரது பெயருக்கு இஸ்லாமிய மொழியில் எழுதப்பட்ட காசோலையும் இருந்தது. இதனைக் கண்டெடுத்தவர்கள் அருட்தந்தையிடம் ஒப்படைக்க, அவர் அதனை நாவாந்துறை பங்குத்தந்தைக்கு அனுப்பிவைத்தார். அவர் மூலம் உரியவரிடம் பணம் கையளிக்கப்பட்டது. இதற்கு நன்றியாக திரு டானியல் என்பவர் மாதாவின் திருச்சொரூபத்தை அன்பளிப்பாக வழங்கினார்.அருட்தந்தை இருதயதாஸ் அடிகளாரின் பெரு முயற்சியினால் தேக்கு மரத்தினாலான கொடிமரம் செய்யப்பட்டு முதலாவது திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழா திருப்பலியை அரருட்தந்தை பிலிப் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.
1995 இல் யாழ் மாவட்டத்திலிருந்து இடப்பெயர்வினால் வன்னிப்பகுதிக்கு வந்த பெரும்பாலான குடும்பங்கள் பொன்நகர் பகுதியில் குடியேறினர். இக்காலத்தில் 200 இற்கும் மேற்பட்ட கத்தோலிக்க குடும்பங்கள் இங்கு குடியேறினர். இக்காலத்தில் கியூடெக் நிறுவன இயக்குநராகப் பணியாற்றிய அருட்தந்தை பீற்றர் அடிகளார் பின் பகுதியிலிருந்த ஆலயத்தை, முறிகண்டி – அக்கராயன் வீதியருகே பெரிய ஆலயமாக அமைத்தார். ஓலையால் கூரை வேயப்பட்டு, கப்புகள், தடிகள் கொண்ட பெரிய ஆலயம் அமைக்கப்பட்டு ஞாயிறு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
இக்காலத்தில் கிளிநொச்சியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இங்கும் வரத்தொடங்கியதால் மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். மீண்டும் 2002 இல் மீள்குடியேறிய காலத்தில் தம் சொந்த இடங்களில் குடியேறினர். அருட்தந்தை தேவசகாயம் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில், உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை மயூரன் அடிகளார் இக் காணிக்குரிய ஆவணங்களை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். அதன் பின்னர் பணியாற்றிய அருட்தந்தை பெனற் அடிகளார் பங்குத்தந்தையாகவும், அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் உதவிப் பங்குத்தந்தையாகவும் பணியாற்றிய காலத்தில் அருட்தந்தை பீற்றர் அடிகளாரின் உதவியுடன் மீண்டும் ஒருகொட்டில் ஆலயம் அமைக்கப்பட்டு சனிக்கிழமைகளில் மாலைத் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. ஆலயக்கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. கற்களால் அத்திவாரமிடப்பட்டு, செங்கற்களால் அரைச் சுவர் அமைக்கப்பட்டு, தகரங்களால் கூரை அமைக்கப்பட்ட ஆலயத்தில் 2008 இல் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அத்துடன் இறுதி யுத்தம் ஆரம்பித்ததனால் மீண்டும் மக்கள் இடம்பெயர்ந்து 2010 இல் மீள்குடியேறினர். ஆயினும் ஆலயம் முற்றாக சேதமடைந்து காடாகக் கிடந்தது.
மீண்டும் 2016 இல் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளாரின் காலத்தில் இப் பகுதியில் ஆலயம் அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு ஆலய வளவைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டது.
அவரைத் தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் 2023 – 2025 வரை பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் மரங்களின் கீழ் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. அருட்தந்தை ராஜ் டிலக்சன் அடிகளார் உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றி திருப்பலிகள் ஒப்புக்கொடுத்தார். முன்பகுதியிலிருந்த திருச்சொரூபம் அழிவடைந்ததால் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அடிகளாரின் நிதியுதவியுடன் புதிய திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அத்திவாரமிடப்பட்டு புதிய ஆலயக் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. திரு அருமைநாதன் மரிய ஜோன்சன் பொருளாளராகவும், செல்வி உ. லூரிஸ்மேரி செயலாளராகவும் இருக்கின்றனர். தற்போது 2026 இல் அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார் பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை விமல்ராஜ் OMI அடிகளார் உதவிப்பங்குத்தந்தையாகவும் பணியாற்றி வருகிறனர். ஆலயக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 05 குடும்பங்கள் மாத்திரமே இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆலயத் திருவிழாவானது வருடந்தோறும் ஆவணி மாதம் 15ம் திகதி கொண்டாடப்படுகிறது.

Leave a Reply