இசை நாடக கூத்துப் பெருவிழா

Posted on

by

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.05.2026) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நா.வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் பாரம்பரிய கலைத்துறையில் பங்காற்றிச் சாதனை படைத்த மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது ‘கலாபூஷணம்’ கந்தையா ஆறுமுகம், ‘கலாபூஷணம்’ செல்லையா தனபாலசிங்கம், ‘கலாபூஷணம்’ செல்லையா சுந்தரம்பிள்ளை, ‘கலாபூஷணம்’ இராசையா பரராஜசிங்கம் மற்றும் ‘கலைக்கிளி’ மிக்கேல் அலேஸ் ஆகியோருக்கு ‘பாரம்பரிய கலா வித்தகர்’ என்ற உயரிய கௌரவம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாரம்பரிய மற்றும் இதிகாச விழுமியங்களைப் பறைசாற்றும் புகழ்மிக்க ‘சத்தியவான் சாவித்திரி’, ‘ஞானசௌந்தரி’, ‘அரிச்சந்திர மயானகாண்டம்’ மற்றும் ‘காத்தவராயன் கூத்து’ ஆகிய இசை நாடகக் கூத்துக்கள் கலைஞர்களால் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.சுரேன் ஆகியோர் கலந்து சிறப்பபித்திருந்தனர்.

சிறப்புற நடைபெற்ற இக்கூத்துப் பெருவிழாவில் கலைஞர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *