தூய றோஜா மாதா ஆலயம், விநாயகபுரம், கிளிநொச்சி, கரைச்சி

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள விநாயகபுரம் கிராமத்தில் அன்புடன் அரவணைக்கும் அன்னையாக அழகே உருவாய் கொலுவீற்றிருக்கிறாள் தூய றோஜா மாதா.

2002 ஆம் ஆண்டில் திரு சின்னப்பன் இயேசுதாசன் என்பவரின் குடும்பத்தினர் இப்பிரதேசத்தில் காடு வெட்டி தமது நான்கு பிள்ளைகளுடன் வீடு கட்டிக் குடியேறினர். இவர்கள் கத்தோலிக்க குடும்பத்தினர். இவர்களுடன் இன்னும் சில கத்தோலிக்க குடும்பங்களும் இங்கு குடியேறியமையால், ஆலயம் ஒன்றை அமைக்கவேண்டிய தேவை எழுந்தது.

இதன்போது திரு சின்னப்பன் இயேசுதாசன் குடும்பத்தினர் தங்கள் காணியில் ஆலயம் அமைப்பதற்கு விருப்பம்கொண்டு 1/2 ஏக்கர் காணியை அன்பளிப்பாக வழங்கினர்.

2012 ஆம் ஆண்டில் அருட்தந்தை வின்சன் அடிகளார் தமது சுய முயற்சியால் ஆலயத்திற்கான தூணினை நிர்மாணித்தார். தூய றோசா மாதா ஆலயத்திற்கான வரலாற்றுத்தடங்கள் அருட்பணி வின்சன் அடிகளாரால் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் விவேகானந்தநகரைச் சேர்ந்த திரு செபஸ்தியன் அலெக்சாண்டர் என்பவரின் நிதியுதவியில் திரு இயேசுதாசன் அவர்கள் திருச்சொரூபக் கூடு அமைத்து செபத்துடன் ஆலய வளவிற்கு கொண்டுவந்தார். அன்றைய பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜோர்ஜ் அடிகளார் அவர்கள் 02.07.2014 அன்று திருச்சொரூபத்தை சொரூபக் கூட்டினுள் வைத்தார்.

2019 ஆம் ஆண்டில் விவேகானந்தநகரைச் சேர்ந்த செபஸ்தியன் அலெக்சாண்டர் குடும்பத்தினரின் நிதியுதவியால், திரு இயேசுதாசன் என்பவர் சிறிய ஆலயத்தை அமைத்தார்.

இவ்வாலயத்திற்கான திருச்சொரூபங்கள் அனைத்தையும் திரு அலெக்சாண்டர் அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார். விவேகானந்தநகரைச் சேர்ந்த திரு அலெக்சாண்டர் என்பவர் ஆலய வேலி அமைப்பதற்கான நிதியை வழங்கியதுடன், ஆலயத்திற்கான சப்பறத்தினையும் வழங்கினார். 10.07.2023 இல் அருட்பணி சில்வெஸ்டர்தாஸ் அடிகளார் ஆலயத்தைத் திறந்து வைத்ததுடன் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

வருடம்தோறும் ஆடி மாதம் 13 ம் திகதி அன்னையின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தகவல்:- திருமதி இயேசுதாசன், விநாயகபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *