புனித அந்தோனியார் ஆலயம்-யூனியன்குளம்

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் யூனியன்குளம் கிராமத்தில், உருத்திரபுரம் பங்கின் துணை ஆலயமாக புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.

1984 ம் ஆண்டில் திரு.திருமதி திரேசா நடராஜா, திரு அல்போன்ஸ், குழந்தை ஐயா ஆகியோர் இப்பகுதியில் அந்தோனியார் திருச்சொரூபத்தினை நிறுவி, ஆலயம் அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதிலும் சில இடையூறுகளால் அம்முயற்சி கைகூடவில்லை.

ஆயினும் 1992 இல் மீண்டும் திரு நடராஜா என்பவர் தமக்குச் சொந்தமான காணியில் 1/2 ஏக்கர் காணியை ஆலயம் அமைப்பதற்காக உவந்தளித்தார். இந் நிலத்தின் உரிமத்தினை கிராமசேவையாளர் திரு ஜுவரட்ணம் என்பவரின் உதவியுடன், காணி உரிமையாளர், கிராம சேவையாளர், பங்குத்தந்தை ஆகியோருடன், சாட்சிகள் கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய உத்தியோகபூர்வ காணி அனுமதிப்பத்திரத்தினை உத்தியோகபூர்வ காணி அனுமதிப்பத்திரத்தினை அன்றைய கோணாவில் பங்குத்தந்தையாகிய அருட்பணி செபஸ்தியன் அடிகளாரிடம் கையளித்தார்.

தொடர்ந்து நடராஜா திரேசா குடும்பத்தினர் தமது முயற்சியால் அப்போது கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை இருதயதாஸ் அடிகளாரின் உதவியுடன், கொழும்பிலிருந்து புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தைக் கொள்வனவுசெய்து கொண்டுவந்து, புனித திரேசாள் ஆலயத்தில் வைத்தனர்.

திரு திருமதி நடராஜா திரேசா குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வசித்தமையினால் திருச்சொரூபத்தை உரிய காணியில் வைப்பதற்கு காலதாமதமாகியது. இதனால் அருட்தந்தை செபஸ்தியன் அடிகளார் புனித திரேசாள் ஆலயத்தில் இருந்த திருச்சொரூபத்தினை கோணாவில் புனித செபஸ்தியார் ஆலயத்திற்குக் கொண்டுவந்தார். 1992 வைகாசி மாதத்தில் திரு திருமதி நடராஜா திரேசா குடும்பத்தினர் இத் திருச்சொரூபத்தினை கோணாவில் ஆலயத்திலிருந்து, பங்கு மக்கள், பங்குத்தந்தை ஆகியோருடன் இணைந்து உழவு இயந்திரத்தில் திருச்சொரூபத்தை வைத்து பவனியாக யூனியன்குளத்திற்குக் கொண்டுவந்து, அருட்தந்தை செபஸ்தியன் அடிகளாரால் ஆலய வளவில் அமைக்கப்பட்டிருந்த ஹெபியில் திருச்சொரூபம் ஆசீர்வதித்து வழிபாட்டுடன் வைக்கப்பட்டது.

1993 இல் திரு அல்போன்ஸ் என்பவரிடம் தலைமைப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1995 இல் உள்நாட்டு யுத்தம் காரணமாக யாழ் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் இப்பகுதிகளில் குடியேறினர். இதனால் அன்றைய உருத்திரபுரம் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை சகாயநாதன் அடிகளார், பங்கு மக்களின் உதவியுடன் திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்காக திருச்சொரூபத்திற்கு முன்பாக ஓலையால் வேயப்பட்ட கொட்டில் ஆலயம் ஒன்றை அமைத்தார். இங்கு செவ்வாய்க்கிழமைகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

1996 இல் கிளிநொச்சி மாவட்ட மக்களும் இடம்பெயர்ந்து இப்பகுதிகளில் குடியேறினர். எனவே, 1997 இல் ஞாயிறு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இக்காலப்பகுதியில், உருத்திரபுரப் பங்கின் துணை ஆலயமாக யாழ் மறைமாவட்டத்தின்கீழ் இவ்வாலயம் பதிவுசெய்யப்பட்டது.

பங்குத்தந்தை சகாயதாஸ் அடிகளார் ஆலய நிர்வாகத் தெரிவினை மேற்கொண்டார். அவர்களோடு பங்கு மக்கள், இந்து மத சகோதரர்களினதும் உதவியைப் பெற்று ஆலயக் கூரையைப் புதிதாக்கியதுடன் மண்ணாலான அரைச் சுவர் கொண்ட புதிய ஆலயத்தை அமைத்தார். திரு அல்போன்ஸ் அவர்களின் தலைமையில் பங்கு மக்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலய காணிக்கு மண் நிரப்பி வயல்க் காணியை மேட்டுக்காணியாக மாற்றியமைத்தனர். வயல் காணிக்குரிய தண்ணீர்ப் பங்கு தனியே பிரித்துப் பதியப்பட்டது. அறுவடையின் போது வயலில் விளைந்த ஒரு மூட்டை நெல் அல்லது அதற்கான பணம் ஆலயத்திற்கென வழங்குவது வழக்கமாகியது.

இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே விபத்தில் காயமடைந்த பங்குத்தந்தை சிகிச்சைக்காக சென்றமையால், அருட்தந்தை இருதயதாஸ் அடிகளார் தற்காலிக பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். இவரைத்தொடர்ந்து அருட்தந்தை அன்ரனிதாஸ் அடிகளார் பணியாற்றினார்.

தொடர்ந்து பங்குத்தந்தையாகவும், குரு முதல்வராகவும் அருட்தந்தை தேவசகாயம் அடிகளார் பணிப்பொறுப்பேற்றார். 2001 இல் மக்கள் மீள்குடியேறியதால், தேவசகாயம் அடிகளார் கிளிநொச்சிப் பங்கைப் பொறுப்பேற்றார், இதனால் அருட்தந்தை ஞானேந்திரன் அடிகளார் உருத்திரபுரப் பங்கின் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 2005 இல் அருட்தந்தை சரத் ஜீவன் அடிகளார் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் கருங்கற்களால் அத்திவாரமிடப்பட்டு தண்டவாளக் கம்பிகளால் கூரை போடப்பட்டு புனரமைக்கப்பட்டது.2009 இல் இறுதி யுத்தத்தின் போது சரத்ஜீவன் அடிகளார் இறைவனடி சேர்ந்தார். 2010 இல் மீள்குடியேறியபோது, ஏற்கெனவே உதவிப்பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.

2011 இல் ஏற்கெனவே அந்தோனியார் திருச்சொரூபம் வைக்கப்பட்டிருந்த கெபி இடித்து வீதிக்கருகில் புதிதாகக் கட்டப்பட்டது. யுத்தத்தினால் பாதிப்படைந்திருந்த ஆலயப் பகுதிகள் புனரமைக்கப்பட்டன. ஏற்கெனவே முடிவுறாதிருந்த கட்டிட வேலைகள் பூரணப்படுத்தப்பட்டது. மின் இணைப்புகள் பொருத்தப்பட்டு ஆலயப் புனரமைப்புப் பணிகள் நிறைவுபெற்றன.

இவ்வாலயத் திருவிழாவானது வருடம்தோறும் ஆனி மாதம் 13 ம் திகதி விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

தகவல்
அருட்பணி ஜோண் கனீசியஸ், பங்குத்தந்தை, உருத்திரபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *