புனித பத்திமா அன்னை ஆலயம்-உருத்திரபுரம்

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் பழமை பொருந்திய கிராமங்களில் ஒன்றான உருத்திரபுரம் கிராமத்தில் புனித பற்றிமா அன்னையின் ஆலயம் அழகுற அமைந்துள்ளது. 1947, 48 ஆம் ஆண்டுகளில் உருத்திரபுரம் கிராமத்தில் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலத்தில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து இங்கு குடியேறிய கத்தோலிக்க குடும்பங்கள், காடுகளை வெட்டித் தமக்கென ஒரு கொட்டில் ஆலயத்தை உருவாக்கினர். 1953 இல் ஒரு கொட்டில் ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது என அறிய முடிகின்றது.

காலப்போக்கில் இக் கொட்டில் ஆலயம் அழிவடைந்ததால் புனித பற்றிமா றோ.க.த.க பாடசாலையின் கட்டடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை ஆரோபணம் சிறுவர் இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டில் தான் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில், ஆலயம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை ஜஸ்ரின் அடிகளார் (இன்றைய ஆயர்) ஆலயம் அமைக்கும் பணிகளை முன்னெடுத்தார்.

1975 இல் அருட்தந்தை ஜெபநேசன் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றியபோது இவ்வாலயம் புனரமைக்கப்பட்டது. 2000 ஆண்டில் திரு யுவானிஸ், திரு பெர்னாண்டோ என்பவர்கள் ஒரு பலிப்பீடத்தை அன்பளிப்பாக அமைத்தனர். ஆலயத்திற்கென வயல் காணிகளும் இருந்தன. இவை 1/2 விலைக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருமானம், ஆலய செலவுகளுக்காக வழங்கப்படுகின்றது.

திரு அன்ரன் C பொன்னம்பலம் என்பவர் தனது காணியில் லூர்து அன்னைக்கென ஒரு ஹெபியை அமைத்தார். 1964 இல் இங்கு திருவிழா கொண்டாடப்பட்டது. வருடந்தோறும் மாசி மாதம் 11 ம் திகதி லூர்து அன்னையின் திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது. இவ்வாலயத்தை அமைத்த திரு பொன்னம்பலம் என்பவரின் பேரனான திரு ஆம்ஸ்ரோங் என்பவர் மீள்குடியேற்றத்தின் பின் அதனைப் புனரமைத்துள்ளார்

2007 இடப்பெயர்வு காலத்தில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை சரத்ஜுவன் அடிகளார் இறுதி யுத்தத்தின் போது இறந்த காரணத்தால் மீளக் குடியமர்ந்ததன் பின்னர் அவரது திருவுருவம் ஆலய வளவினுள் ஸ்தாபிக்கப்பட்டது. அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் ஆலய முகப்பு மற்றும் கும்மட்டம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அவரைத் தொடர்ந்து பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை போல் அனக்கிளிற் அடிகளார் இப் பணிகளை நிறைவு செய்தார். இவரது காலத்தில் ஆலயத்தோடு இணைந்திருந்த குருமனை இடிக்கப்பட்டு, புதிய குருமனை கட்டப்பட்டதுடன், திருப்பண்டக் காப்பறையும் புனரமைக்கப்பட்டது.

2011 இல் பிரதான பாதையருகில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு, ஆலயத்திற்கான பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டது. அதுவரை உருத்திரபுரம் – கனகபுரம் வீதிப் பக்கமாகவே ஆலய நுழைவாயில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2023 இல் மருதமடு அன்னையின் வருகையின்போது ஆலயத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள திருச்சொரூபங்கள் அமைக்கப்பட்டன.

75 கத்தோலிக்க குடும்பங்களைக் கொண்ட இவ்வாலயத் திருவிழா வருடந்தோறும் வைகாசி மாதம் 13 ம் நாள் கொண்டாடப்படுகின்றது. தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அடிகளாரின் பெரு முயற்சியினால் மறைக்கல்வி, இளையோர், மரியாயின் சேனை, வின்சென் டி போல் சபை, திருப்பாலத்துவ சபைகள் செவ்வனே இயங்கி வருவதுடன், 2025 இல் ஆலய கூரையும் புனரமைக்கப்பட்டது.

தகவல்:- திருமதி பற்றிமா ஜெயமணி, சிசிலியம்மா – ஆலய இறைமக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *