புனித அந்தோனியார் ஆலயம், 155ம் கட்டை, தொண்டமான் நகர், கரைச்சி

Posted on

by

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில், தொண்டமான் நகர் எனும் கிராமத்தில் A9 வீதியருகே கோடியற்புதராம் அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.

தன் வாழ்நாளிலும், இறப்பின் பின்பும் கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததால் பதுவை நகரில் பிறந்த இவரை கோடி அற்புதர் என கத்தோலிக்க நல்லுலகம் கொண்டாடுகின்றது.

இறந்த இயேசு மீண்டும் வருவார், அவர் வரும்போது நாம் அவருக்குரியவர்களாக வாழ வேண்டும் என்பது கத்தோலிக்க திரு அவை எமக்குக் கற்றுத்தரும் பாடமாகும். இந்த இயேசுவை தன் கரங்களில் ஏந்தவேண்டும் எனும் ஆவலை நிறைவேற்றும் படி இறைவேண்டல் செய்து, இறைமகன் இயேசு குழந்தை வடிவில் அவர் கரங்களில் தவழுமளவிற்கு இறைவனோடு நெருங்கிய தொடர்புள்ளவர் புனித அந்தோனியார்.

இவ்வாலயத்தின் வரலாறும் அற்புதத்தினால் ஆரம்பிக்கப்பட்டது என்பது உலகெங்கும் பலகோடி மக்கள் புனித அந்தோனியாரின் பக்தர்களாக இருக்கின்றார்கள் என்பதற்கான ஒரு சான்றாக அமைகின்றது.

1983 இல் கிளிநொச்சி மாவட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருந்தது. அக்காலத்தில் A9 பாதையருகே இலங்கை தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இங்கு பணியாற்றிய பொறியியலாளர் ஒரு கத்தோலிக்கர். அவருடன் இணைந்து பணியாற்றிய ஊழியர் ஒருவர் உயரமான கோபுரத்திலிருந்து தவறி வீழ்ந்து இறந்துவிட்டார். இச்சம்பவம் பணியாளர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவத்தினால் கவலையடைந்த அந்தப் பொறியியலாளர், தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் இனிமேலும் எவ்வித உயிராபத்துக்களுமின்றி நிறைவுபெற வேண்டுமென பதுவைப் புனிதர் அந்தோனியாரிடம் மன்றாடி, அப் பணிகளை புனித அந்தோனியாரின் நேரடிக் கண்காணிப்பில் ஒப்படைத்து, தொலைத்தொடர்பு கோபுத்தின் நேர் எதிர்ப்பக்கமாக A9 வீதியருகே ஒரு அந்தோனியாரின் திருச்சொரூபத்தை நிறுவினார். இவ்வாறு இவ்விடத்தில் குடிகொண்ட அந்தோனியாரின் வரலாற்றுச்சுவடுகள் வளர்ந்து விரிவடைந்துள்ளன. இன்றும் அவ்விடத்தில் திருச்சொரூபமானது தொலைத்தொடர்பு கோபுரத்தைப் பார்த்தவாறு அமைந்திருப்பதனைக் காணமுடிகின்றது.

அக்காலப்பகுதியில் இவ்விடத்தில் ஒன்றிரண்டு கத்தோலிக்க குடும்பங்களே வசித்துவந்தன. இவர்கள் ஞாயிறு திருப்பலிகளுக்காக கிளிநொச்சி நகரப்பகுதியிலிருந்த புனித திரேசாள் ஆலயத்திற்கு கால்நடையாகவே சென்று வந்தனர். இச்சூழ்நிலையில் புனித அந்தோனியாரின் திருச்சொரூபம் இவ்விடத்தில் வைக்கப்பட்டமை மக்களை மகிழச்செய்தது. அப்போது கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை பயஸ் அடிகளார் அப்பகுதியிலிருந்த கத்தோலிக்க மக்களை இணைத்து அவ்விடத்தில் ஓலையால் வேயப்பட்ட கொட்டில் ஆலயம் ஒன்றை அமைத்தார். இக்காலத்தில் தொலைத்தொடர்பு கோபுரப் பணிகளும் எவ்வித ஆபத்துக்களுமின்றி செவ்வனே நிறைவுபெற்றது.

தொடர்ந்து 1984 இல் பயஸ் அடிகளார் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டி, அத்திவாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாலயம் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டது. இவ்விடத்தில் கத்தோலிக்க மக்கள் அதிகளவில் இல்லாமையால் ஆலயப் பணிகள் மெதுவாகவே நடைபெற்றது. விவேகானந்தநகர், ஆனந்தபுரம், பாரதிபுரம், உதயநகர் போன்ற இடங்களில் வசித்த கத்தோலிக்கர்களே இவ்வாலயத்திருப்பலிகளில் கலந்துகொண்டனர். 1986 இல் புனித வியாழனன்று புதிய ஆலயத்தில் முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து இவ்வாலயம் கிளிநொச்சிப் பங்கின் ஒரு ஆலயமாக வளர்ந்து வந்தது. ஞாயிறு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. படிப்படியாக பக்திசபைகள் உருவாக்கம் பெற்றன. 1995 காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். மீண்டும் 2002 இல் மீள்குடியேறிய போது ஐங்கோண வடிவிலான ஆலயம் முற்றாக சேதமடைந்திருந்தது. இதனால் வழிபாடுகளை நடாத்த முடியாதிருந்தது.

இச்சூழலில் ஆலயத்தைப் புனரமைக்கக்கூடிய நிதி வசதிகள் இருக்கவில்லை. ஆலயச்சுவர்கள் வெகுவாக பாதிப்படைந்திருந்தன. இதனால் அன்றைய பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை தேவசகாயம் அடிகளாரும், பங்கு மக்களும் கலந்தாலோசித்து, பழைய ஆலயத்தை இடித்து ஓலைக் கொட்டிலாலான சிறிய ஆலயத்தை அமைத்தனர். திருப்பண்டக் காப்பு அறை இல்லாத காரணத்தினால் ஆலயப் பொருட்கள் அப்போது நிர்வாக தலைவராக இருந்தவரின் இல்லத்தில் வைக்கப்பட்டன.

2002 – 2003 காலப்பகுதியில் அருட்தந்தை தேவசகாயம் அடிகளாரின் பெருமுயற்சியால் சீமேந்தினாலான நீள்சதுர வடிவிலான சிறிய ஆலயம் அமைக்கப்பட்டது. 2003 இல் ஆலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து ஆலயப் பணிகள் செவ்வனே நிறைவேறி வந்தபோது, மீண்டும் 2008 இறுதி யுத்தத்தின் போது மக்கள் இடம்பெயர்ந்தனர். பல இழப்புக்கள் துயரங்களோடு 2010 இல் மீள்குடியேறிய மக்கள் ஆலயத்தைச் சென்று பார்த்தனர். ஆலயம் எவ்வித சேதங்களுமின்றி காட்சியளித்தது. அப்போது கிளி – முல்லை மறைக்கோட்டத்தின் குருமுதல்வராகப் பணியாற்றிய அருட்தந்தை யாவிஸ் அடிகளாரின் வழிகாட்டலில், ஆலய வழிபாடுகளும், துயருற்றிருந்த மக்களுக்கான ஆற்றுப்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டன.

ஆலயத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக தயாராகியபோது பலர் அதமது அன்பளிப்புக்களை வழங்கினர். இதனால் ஆலயத்திற்கு பல வருடங்களின் பின் வர்ணம் பூசப்பட்டது. திருப்பண்டக் காப்பறை கட்டப்பட்டது. மின்விசிறி, திருச்சொரூபங்கள் வைப்பதற்கான பேழைகள் கிடைத்தன. வெளிநாட்டிலிருக்கும் இவ்வாலயத்தைச் சேர்ந்த ஒருவர் ரூபா பத்து இலட்சம் பெறுமதியான மணிக்கூட்டுக் கோபுரத்தை அமைத்தார்.

தொடர்ந்து 13.06.2019 இல் கிளிநொச்சி மறைக்கோட்ட குருமுதல்வராகப் பணியாற்றிய அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளாரின் காலத்தில் இவ்வாலயம் வட்ட வடிவிலான பெரிய ஆலயமாகக் கட்டப்படுவதற்கான அனுமதியைப் பெற்று ஆலயத் திருவிழா அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆயர் இல்லம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் வழங்கிய தலா ஐந்து இலட்சம் ரூபா முதலுடன் ஆலயக் கட்டடப் பணிகள் ஆரம்பமாயின. பழைய ஆலயம் இடிக்கப்பட்டு பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் தற்காலிக ஆலயம் ஒன்று வழிபாட்டுத் தேவைகளுக்காக அமைக்கப்பட்டது. 13.06.2025 திருவிழா திருப்பலி புதிய ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மேலதிக கட்டட வேலைகள் பல்வேறு நிதிப்பங்களிப்புகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

தகவல்:- மகேஸ்லரன் துஷ்யந்தினி
புனித அந்தோனியார் ஆலயம், 155ம் கட்டை, தொண்டமான் நகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *