
கூத்துக் கலைஞரான இவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறாம் ஆண்டு வைகாசி மாதம் பதினோராம் திகதி பளையில் பிறந்தார். தட்டுவன்கொட்டியை நிரந்தர வதிவிடமாக கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை தட்டுவன்கொட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார்.
பத்து வயதில் ‘குணசீலி’ நாடகத்தில் தோழியாக பெண் பாத்திரம் ஏற்று நடித்தது முதல் இவரது கலைத்துறைப் பிரவேசம் ஆரம்பமாயிற்று. இவர் ‘பவளக்கொடி’ நாடகத்தில் பவளக்கொடியின் மகனான புலேந்திரனின் பாத்திரத்தையும் ‘கோவலன் கண்ணகி கூத்தில்’ கண்ணகி வேடத்தையும் ‘காத்தவராஜன் கூத்தில்’ ‘முத்துமாரி’ வேடத்தையும் ‘சிறீவள்ளி’ நாடகத்தில் பெண்பாத்திரங்களையும் இளமைக்காலத்தில் ஏற்று நடித்துள்ளார். இவர் சிறுவயதில் இசைநாடகம் மற்றும் கூத்துக் கலையை யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த எஸ்.எம்.கிஸ்ரோஸ்ரம் மற்றும் எஸ். ரீ. செல்லத்துரை போன்றவர்களிடம் பயின்றார்.
‘பாலா அண்ணாவி’ என பிரதேசத்தவர்களால் அழைக்கப்படும் இவர் கிளிநொச்சி, கிராஞ்சி, சுதந்திரபுரம், கண்டாவளை, கண்ணகிநகர், தட்டுவன்கொட்டி ஆகிய பிரதேச இளம் கூத்து கலைஞர்களுக்கு கூத்துக்களை பழக்கி மேடையேற்றும் பிரதான அண்ணாவியாக தற்போது செயற்பட்டு வருகிறார்.
இவர் தனது சொந்தக் கிராமமான தட்டுவன்கொட்டி கிராமத்தில் பிள்ளை மடத்தில் உறைகின்ற கண்ணகி அம்மனுக்கு வருடந்தோறும் வைகாசிப் பொங்கலின் போது நேர்த்தியடிப்படையில் கூத்துப் பழக்கி அதனை ஊரவர், கலாமன்றத்தினர், ஆலய நிர்வாகத்தினர் போன்றவர்களின் பூரண ஒத்துழைப்பினை பெற்று ஆற்றுகை செய்து வருகின்றமை சிறப்பான அம்சமாகும்.
இவரது கலைச் சேவைக்காக 2012 ஆம் ஆண்டில் கண்டாவளை பிரதேச கலாசார பேரவையும் கண்டாவளை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசார விழாவில் ‘கலை ஒளி’ விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply