
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் கிராமத்தில் கனகரட்ணம் மேரிதிரேசா தம்பதியருக்கு 29.04.1986 இல் பிறந்த திரு க.செந்தூரன் அவர்கள் கனக பாரதிசெந்தூரன் எனும் புனைபெயராற் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளரும் கலைஞருமாவார். கிளி/இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் இவர் தனது பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத் துறையினுள்ளும் கலைத்துறையினுள்ளும் கால்பதித்தார். தனது ஆரம்பக் கல்வியினை கிளிஃபரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியைக் கலைப்பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் கற்றார்.
இவர் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் இளமாணி பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளதோடு, தற்போது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுதத்துவமாணி பட்டத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறார். கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளதோடு பட்டப்பின் கல்வி டிப்ளோமாக் கற்கைநெறியினையும் பூர்த்திசெய்துள்ளார்.
பாடசாலைக் காலத்தில் இருந்தே மிகச் சிறந்த பாடகராக அறியப்பட்ட இவர், முறைப்படி சங்கீதம் கற்றவராக திரையிசைப் பாடல்களைப் பாடும் மேடைப்பாடகராகவும் தானே பாடல்களை இயற்றியும் மெட்டமைத்தும் பாடும் வல்லமை மிக்கவராகவும் விளங்குகின்றார். இவரது சொந்த ஊரான பரந்தன் கோரக்கன்கட்டு நாகதம்பிரான் ஆலயத்திற்காகத் தனது 24ஆவது வயதில் இவர் எழுதி மெட்டமைத்துப் பாடிய பக்திப் பாடல் இன்றும் அக்கோயிலில் ஒலிபரப்பாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான ‘அப்பாவின் நிலம்’ தொகுப்பில் இவரைப் பற்றிய அணிந்துரையில் சிரேஸ்ட விரிவுரையாளரும் துறைத் தலைவருமாகிய திரு மா.ரூபவதனன் அவர்கள் இவரை கவிஞர், பாடகர், உரைஞர், நடிகர் மற்றும் திறனாய்வாளர் எனப் பல்துறைக் கலைஞராகக் குறிப்பிட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் விளங்குகின்றார். இவர் கிளிநொச்சியில் இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை விமர்சனம் செய்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளதோடு ஏனைய யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா மாவட்ட இலக்கிய விழாக்களிலும் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதோடு ‘நூல் விமர்சனங்களையும்’ மேற்கொண்டுள்ளார்.
கனக பாரதி செந்தூரன் தனது 32ஆவது வயதில் 2019.12.14 அன்று தனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘மனப்பாரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டார். 2023 ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘ஆன்ம அழுகை’ என்ற சிறுகதை கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் ‘தேசிய இலக்கியப் போட்டியில் முதலிடம்’ பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
2024ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கான படைப்பிலக்கியப் போட்டியில் இவரது ‘குழந்தை மனம்’ என்ற பாடலாக்கம் ஆறுதற் பரிசினையும் பணப்பரிசிலையும் வென்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை ரூபவாஹினி நேத்ரா அலைவரிசை ‘வணக்கம் நேத்ரா’ நிகழ்வில் 30.12.2024 அன்று நேர்காணல் செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கனக பாரதி செந்தூரனின் இரண்டாவது தொகுப்பான ‘அப்பாவின் நிலம்’ சிறுகதைத் தொகுப்பு அண்மையில் 2025.08.23 அன்று கிளிநொச்சி நகரில் சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியப் பிரபல திரையிசைக் கவிஞரும் சிறுகதை ஆய்வாளருமாகிய திரு பழனிபாரதி அவர்கள் இவரைச் சிலாகித்து அணிந்துரை எழுதியுள்ளதோடு அவ்வணிந்துரையில் ‘செந்தூரனின் ஒவ்வொரு கதையும் நம் மனத்தில் ஒரு புதிய கதவைத் திறந்து வைக்கின்றது. இருள் கலைக்கிறது. ஒளியின் கைகள் நம்மை அணைக்கின்றன’ என்று புகழ் சூட்டியுள்ளார்.பரந்தன் கிராமத்தின் பல அமைப்புகளில் அங்கம் வகிப்பதோடு, தொடர்ந்து செயலாற்றும் ஒருவராகவும் விளங்குகின்றார்.
பாடசாலை மாணவர்களை ஊக்குவித்து தேசிய ரீதியிலும் பரிசில்களைப் பெறச் செய்துள்ள இவர் பாடசாலையில் ‘முத்தமிழ் மன்றங்களையும், மாணவர் மன்றங்களையும் நடாத்திப் பல மாணவர்களைக் கலைஞர்களாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

Leave a Reply