ஆரம்பத்தில் இவ்வாலயமானது பள்ளிக்குடா கடற்கரையில் , தற்போது புனித வனத்து அந்தோனியார் ஆலயம் அமைந்திருக்கின்ற இடத்தில், யாழ்ப்பாணம் நாவாந்துறை, புனித நீக்கிலார் ஆலயத்தைச் சேர்ந்த, மீன் பிடி தொழிலுக்காக பள்ளிக்குடாப் பகுதியில் குடியேறிய கத்தோலிக்கர்களாலே 1979 ம் ஆண்டுகளில் புனித பதுவை அந்தோனியார் ஆலயமாக அமைக்கப்பட்டது. அப்போதைய வலைப்பாட்டுப் பங்குத்தந்தை அருட்தந்தை கோன்சால்வெஸ் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்பணியாளரின் பணி காலத்தில் இவ்வாலயம் உருவாக்கப்பட்டது.
அக்காலப் பகுதியில் வலைப்பாட்டுப் பங்கிற்கு உட்பட்டதாக பூநகரி பங்கின் ஆலயங்கள் அமைந்திருந்தன. அப்போது மாதத்தின் ஒரு ஞாயிறு திருப்பலி இடம் பெற்று வந்தது.
பின்னர் 12ம் தேதி மே மாதம் 2000 ஆம் ஆண்டில் ஆலயத்தின் முகப்புப் பகுதியில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சு விமானம் தாக்குதலை மேற்கொண்டது. அப்போது ஆலயத்திற்கு முன்பாக இருந்த ஆலயத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டும் 12 பேர் படுகாயம் அடைந்து அங்கவீனமாயினர். அதனால் ஆலயம் மிக மோசமாக பாதிப்படைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது.
அதனைத் தொடர்ந்து, முழங்காவில், ஜெயபுரத்தில் இருந்து பூநகரிப் பங்கை 2003இல் பரிபாலித்த அப்போதைய பங்குத் தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அடிகளார் பள்ளிகுடவிலே குடியேறியுள்ள கத்தோலிக்கர்களுக்கு ஏற்ற ஆலயம் அமைப்பதற்காக பள்ளிக்குடா மணக்காடு என்னுமிடத்தில் அதாவது தற்போது புனித பதுவை அந்தோனியார் ஆலயம் உள்ள ஐந்து ஏக்கர் அரச காணியை பள்ளிக்குடாவைச் சேர்ந்த இந்து சமயத்தவரான திரு. மகேஸ்வரன் என்பவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாவுக்கு பெற்றுக் கொண்டார். அதற்காக அப்போதைய யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயராகிய தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகையிடமிருந்து 50000 ரூபாய்களையும் மீதி 50,000 ரூபாவை அப்போது யாழ் பல்கலைக்கழக கிறீஸ்தவ நாகரிகத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய அருட்தந்தை அன்ரன் மத்தாயஸ் அடிகளிடமிருந்தும் அப்பகுதி பங்கு மக்களிடமிருந்தும் பெற்றுக் கொண்டார்.
ஏற்கனவே புனித அந்தோனியார் ஆலயம் கடற்கரையில் சேதம் அடைந்த நிலையில் இருந்த காரணத்தால். தற்போது பள்ளிக்குடா மணல்காட்டில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் இருக்கும் இடத்தில் புனித சவேரியார் ஆலயத்தை நிறுவ தீர்மானித்து, அதற்கான ஆரம்பகட்ட வேலைகளையும் முன்னெடுத்தார். அதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ராங் அடிகளார் பூநகரி பங்கை பொறுப்பேற்று கொண்டார். அவ்வேளையில் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ராங் அடிகளார் இலங்கை புனர்வாழ்வு அமைச்சுக்கு விண்ணப்பித்து அமைச்சிடமிருந்து சேதமடைந்த கடற்கரையில் இருந்த புனித பதுவை அந்தோனியார் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏழு இலட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு அவ் ஆலயத்தை மீண்டும் புதிதாக கட்டியெழுப்ப முற்பட்ட வேளை பூநகரி பிரதேச செயலர் திரு. சிறீஸ் கந்தராஜாவிடமிருந்து அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. ஏனெனில் அரசாங்க சட்ட ஒழுங்கின்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு உட்பட்ட இடத்தில் கட்டடங்கள் அமைக்க அனுமதி இல்லை. எனவே அந்த நிதியைப் பயன்படுத்தி பள்ளிக்குடா மணக்காட்டில் தற்போதுள்ள புனித அந்தோனியார் ஆலயத்தை புனித சவேரியார் ஆலயமாக அமைக்க முற்பட்ட வேளையில், புனித அந்தோனியார் பேரிலே பெறப்பட்ட புனரமைப்புக்கான நிதி புனித அந்தோனியார் ஆலயத்தை புனரமைக்கவே பயன்படுத்தப்பட வேண்டும், என்ற ஏற்பாட்டின் காரணமாக தற்போது உள்ள இடத்தில் அருட்தந்தை லீயோ ஆம்ஸ் ரோங் அவர்களின் முயற்சியால் தற்போதுள்ள பள்ளிக்குடா மணல் காட்டில் உள்ள புனித பதுவை அந்தோனியார் ஆலயம் 2005 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலயம் அமைந்திருக்கின்ற காணியில் ஆலயத்திற்கு வடக்குப் பக்கமாக அப்போதைய ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையிடமிருந்து பெறப்பட்ட மூன்று லட்சம் ரூபா நிதியைக் கொண்டு பூநகரி பங்கு பணிமனை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ராங் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டு அங்கே பங்குதந்தை தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்.
அதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அருட்தந்தை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்ற போது பங்குத்தந்தையுடைய இருப்பிடமாகிய பங்குப் பணிமனை புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்திருக்கின்ற வாடியடி பூநகரியிலேயே அமைந்திருந்தது. ஆயினும் தண்ணீர் வசதி இன்மை காரணமாக பங்குத்தந்தையினுடைய இருப்பிடமானது பள்ளிக்குடாவிற்கு நகர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அருட்தந்தை அமல்ராஜ் அடிகள் பூநகரி பங்கை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு காலப்பகுதியிலே இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் பூநகரி பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இறுதி யுத்தத்தின் பின்னர் மீண்டும் 2010 ஆம் ஆண்டு பூநகரி பகுதியிலே மக்கள் மீளக் குடியமர்ந்த காலப்பகுதியிலே 2011 ஆம் ஆண்டு அருட்தந்தை பிராயன் பூநகரி பங்கை பொறுப்பேற்றுக் கொண்டார். இறுதிக்கட்ட யுத்தத்தினாலே மேற்படி ஆலயம் மிக மோசமாக சேதத்துக்குள்ளான நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து அக்காலப் பகுதியிலே புனித அந்தோனியார் ஆலயமானது பூநகரி பள்ளிக்குடா பங்கு மக்களின் நிதிப்பங்களிப்பு மற்றும் உடல் உழைப்பினால் பகுதியளவில் புனரமைக்கப்பட்டது . 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அருட்தந்தை அருள்தாசன் பூநகரிப் பங்கை பொறுப்பேற்றுக் கொண்டார். அவ் வேளையிலே பங்குத்தந்தை சேதமடைந்த ஆலயத்தின் புனரமைப்புக்காக இலங்கை புனர்வாழ்வு அமைச்சுக்கு விண்ணப்பித்து மேற்படி ஆலயத்திற்கு புனரமைப்பு நிதியாக 5 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டார். மேற்படி அமைச்சின் அறிவுறுத்தலின்படி அந்த நிதி ஆலயத்திற்கான புனரமைப்புக்கான மூலப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு காணப்பட்டது. எனவே அந்நிதியை கொண்டு கட்டுமான மற்றும் உழைப்பு செலவை ஈடு செய்யும் பொருட்டு பங்குத்தந்தை அப்போதைய இலங்கை ராணுவத்தின் பூநகரி பிரதேசத்தின் 662 ஆவது பிரிகேட் படை அணியின் கட்டளை தளபதி பிறிகேடியர் பிரியந்த ஜயவர்த்தன அவரின் உதவியைப் பெற்று இராணுவத்தினரின் கட்டுமான படைப்பிரிவினரின் இலவசமான உழைப்பினை கொண்டு 2017, 2018 ஆம் ஆண்டுகளில் மீளவும் மீதி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2021 ஆம் ஆண்டு பூநகரி பங்கை பொறுப்பேற்றுக் கொண்ட அருட்தந்தை சுலக்சன் அவர்களின் காலப்பகுதியிலே ஆலயத்தின் திருப்பண்ட அறைக்கு பிற்பகுதியில் மீளவும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூற்று முப்பதிற்கும் அதிகமான குடும்பங்களை அங்கத்தவர்களாக கொண்ட இவாலயத்தில் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் திருப்பலி நடைபெறுகிறது.
பள்ளிக்குடா மணக்காடு புனித பதுவை அந்தோனியார் ஆலயத் திருவிழாவானது ஆண்டுதோறும் ஜூன் மாதம் மாதத்தின் நான்காவது ஞாயிறு அன்று கொடியேற்றத்தின் நவநாள் ஆயத்தத்தின் பின்னர் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. யாழ்ப்பாணம் பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த பங்கு மக்களின் பங்குபெற்றுதலுடனும் திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தகவல்:- அருட்தந்தை J. A அருள்தாசன், முன்னைநாள் பங்குத்தந்தை, பூநகரி

Leave a Reply