புனித சதாசகாய அன்னை ஆலயம், முரசுமோட்டை, கண்டாவளை

Posted on

by

1955 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முரசுமோட்டை பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க குடும்பங்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்திசெய்யும்முகமாக அருட்தந்தை சூசைநாதன் அடிகளார் புரட்டாதி 30 ம் திகதி புனித சதாசகாய அன்னையின் திருவுருவப் படத்தை புனித அந்தோனியார் றோ.க. பாடசாலையில் வைத்து முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். இதனைத்தொடர்ந்து முரசுமோட்டை ஞானப்பிரகாசம் மேற்பார்வையாளர் பங்களாவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வந்தது.

1956 இல் அன்னைக்கு ஆலயம் அமைப்பதற்கென காணியொன்றைப் பெறும் முயற்சியில் தந்தையவர்கள் ஈடுபட்டார்.

இம்முயற்சியில் பிரதான வீதியில் தற்போது ஆலயம் அமைந்துள்ள காடாகக் கிடந்த இரண்டு ஏக்கர் நிலத்தை தெரிவுசெய்து திரு பேணாட் கதிர்ராம், திரு சூனான் சுவானி, திரு மரியாம்பிள்ளை ஆகியோர் இணைந்து காட்டை வெட்டித் துப்புரவு செய்தனர். இக்காணியில் 20 x 20 அளவிலான ஓலையால் வேயப்பட்ட கொட்டில் ஆலயம் அருட்தந்தையால் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

1965 இல் அருட்தந்தை பொன்னையா அடிகளாரின் காலத்தில் 40 x 20 அளவுகொண்ட கட்டிட ஆலயம் அமைக்கப்பட்டது. 1975 இல் திருமதி தங்கம்மா என்பவர் சகாயமாதா திருச்சொரூபத்தை அன்பளிப்பாக வழங்கினார். 1984 – 1990 வரை ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த அருட்தந்தை ஒம்ளோ அடிகளார் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில் பரந்தன் பங்கு கிளிநொச்சிப் பங்கிலிருந்து பிரிந்து தனிப்பங்காக மாற்றப்பட்டது. 1996 – 1997 இடப்பெயர்வு காலத்தில் தர்மபுரம் பங்குடன் இணைந்து அருட்தந்தை ரெக்னோ அடிகள் பணியாற்றினார். 2000 ம் ஆண்டில் மீளக்குடியேறியபோது ஆலயக் கூரை முற்றாக அகற்றப்பட்டிருந்ததுடன் கட்டிடமும் சேதமடைந்திருந்தது. இதனால் ஓலைக்கூரை அமைக்கப்பட்டு சிறியளவு ஆலயத்தில் வழிபாடுகள் நடாத்தப்பட்டன. 2008 ஆம் ஆண்டுவரை தர்மபுரம் பங்குடன் இணைந்தே பரந்தன் பங்கு இயங்கி வந்தது.

2004 இல் அருட்தந்தை யூட்நிக்சன் அடிகளாரின் காலத்தில் புதிய ஆலயப் பணிகள் ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையின் நிதியுதவி மற்றும் பங்கு மக்களின் அன்பளிப்புடன் 2005 இல் புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. மீண்டும் 2008 இடப்பெயர்வின் பின் சிதைவடைந்திருந்த ஆலயம் மீள்குடியமர்வின் பின் அருட்தந்தை எட்வின் நாதன் அடிகளாரின் அரும் முயற்சியினால் பருத்தித்துறை பங்கு மக்களின் நிதியுதவியுடன் கூரை திருத்தியமைக்கப்பட்டது.

பங்கு மக்கள் மற்றும் இந்துமத சகோதரர்களின் நிதியுதவியுடன் ஆலய வேலைகள் நிறைவுபெற்றுள்ளன.

வருடம்தோறும் மாதாவின் வணக்கமாதமான வைகாசி மாதத்தின் இறுதி நாளில் (31) ஆலயத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *